Monday, December 26, 2011

அறியப்படவேண்டிய நடிகர் - 2


‘சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல!’
- நடிகர் மூணார் ரமேஷ்



‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தபோது, யார் இந்த வில்லன் என்று அத்தனைபேரின் புருவத்தையும் உயர வைத்தவர் மூணார் ரமேஷ். இயற்பெயர் ரமேஷ் பாபு. சொந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘மூணார் ரமேஷ்.’ சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட நாற்பது படங்களில் நடித்துவிட்டார். ‘தோழா!’ படத்தில் பிரதான வில்லன். தற்போது, ‘வேட்டைக்காரன்’, ‘ஆடுகளம்’, இயக்குநர் செல்வராகவன், விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் முக்கிய பாத்திரம் என்று மனிதர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்...

நீங்க நடிச்ச முதல் படம் எது?

இயக்குநர் ஏ.பி. முகன் ‘தீண்ட... தீண்ட...’ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருந்தார். அந்தப் படத்துல புரொடக்ஷன் சைடுல வேலை பார்த்தேன். நாங்க எல்லாருமே ஒரு டீமா அதுல வேலை பார்த்தோம். பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்துச்சு. அப்போதான் முகன், ‘நீங்க ஒரு ரோல்ல நடிங்களேன்’னு சொன்னார். என்னோட நண்பர்களும் என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. எனக்கு நடிப்புல முன் அனுபவம் எதுவும் இல்ல. இருந்தாலும் நடிச்சு பாப்போமேன்னு தோணிச்சு. அதுல நடிச்சேன். ஆனா, அப்போகூட பெரிய நடிகனாகணும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்ல. அதுக்கப்புறம் என்னோட இன்னொரு நண்பர் சுரேஷ் ‘அது ஒரு கனா காலம்’ படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிக்க கூப்பிட்டார். அது பாலுமகேந்திரா சார் படம். சுரேஷ், அதுல அசோசியேட் டைரக்டர். அந்தப் படத்துல ஒரே ஒரு சீன்ல நடிச்சேன். அந்தப் படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. என்னோட நண்பர்கள் எல்லாருமே என்னை தொடர்ந்து நடிக்கச் சொல்லி, ஊக்கம் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஆனாலும் நான் எந்த ஆர்வமும் இல்லாமதான் இருந்தேன்.

ஒரு நாள், நண்பர்கள் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு சினிமா கோ ஆர்டினேட்டர் வந்தார். ‘புதுப்பேட்டை’ன்னு ஒரு படத்துல முக்கியமான ஒரு ரோல் இருக்கு. அதுக்கு பொருத்தமான நடிகரைத் தேடிக்கிட்டு இருக்காங்க. எத்தனையோ பேர் வந்துட்டுப் போயிட்டாங்க. இயக்குநர் செல்வராகவன் திருப்தி ஆக மாட்டேங்கறாரு. நீங்க ஒரு ஃபோட்டோ எடுத்துகிட்டு போய் பாத்துட்டு வாங்களேன்’னு சொன்னார். நான் அதுக்கு முன்னாடி, என்னோட ஃபோட்டோவை எடுத்துக்கிட்டு எந்த சினிமா கம்பெனிக்கும் சான்ஸ் கேட்டு போனது கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தினதால, ரொம்ப கூச்சப்பட்டுக்கிட்டே ஒரு ஃபோட்டோவை எடுத்துட்டு போனேன். பொதுவா, ஒரு நடிகர், ஒரு கம்பெனியில புகைப்படத்தைக் குடுக்குறார்னா, அதுக்குப் பின்னாடி, ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாத்தையும் எழுதிக் குடுப்பார். அந்த அடிப்படைகூட எனக்குத் தெரியாது. ஃபோட்டோவை ஆபீஸ்ல குடுத்தேன். வந்துட்டேன்.

ஒரு வாரம் கழிச்சு, செல்வராகவன் சார் கூப்பிட்டுவிட்டார். எப்பிடியோ, என் அட்ரஸைக் கண்டுபிடிச்சு அவரோட ஆபீஸ்ல இருந்து வந்துட்டாங்க. செல்வராகவன் சார் என்னோட நடிப்பு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் கேட்டார். நான் ஏதோ பெரிய கேரக்டரா இருக்குமோன்னு பயந்துட்டேன். அதனால பட்டும் படாமலும்தான் பதில் சொன்னேன். நான் நடிச்ச முதல் ரெண்டு படத்துலயும் என்னோட நண்பர்கள் இருந்தாங்க. அதனால பிரச்னை இல்ல. ஆனா, இது அப்பிடி இல்ல. அவர் பெரிய டைரக்டர். அந்த பயம் எனக்குள்ள இருந்துச்சு. எனக்கு காஸ்ட்யூம் போட்டு, செக் பண்ணினாங்க. போகச் சொன்னாங்க. நான் குழப்பத்தோடயே வெளியில வந்தேன். ஒரு மாசம் கழிச்சு என்னை கூப்பிட்டு விட்டாங்க. ஹைதராபாத்ல ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல வச்சு அக்ரீமெண்ட் எல்லாம் போட்டாங்க. அப்போதான் எனக்கு நடிப்போட சீரியஸ்னெஸ் உறைச்சுது. அந்தப் படத்துல நடிச்சேன். டைரக்டர் சொன்ன மாதிரியெல்லாம் செஞ்சேன். ஆனா, அந்த கேரக்டர் எந்த மாதிரி வரும்னு எனக்குத் தெரியல. படம் ரிலீஸ் ஆச்சு. செகண்ட் ஷோவுக்கு ஒரு நண்பரோட போயிருந்தேன். இடைவேளை விட்டு வெளியில வந்தா, ஆடியன்ஸ் எல்லாரும் என்னை சுத்தி நின்னுக்கிட்டாங்க. ‘நல்லா நடிச்சிருக்கே’ன்னு பாராட்டி தள்ளிட்டாங்க. அது எனக்கு பெரிய அனுபவமா இருந்துச்சு. அந்த ஒரே படத்துல, எங்க வெளியில போனாலும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. ‘புதுப்பேட்டை’ படத்தோட மேனேஜர் பால கோபி என்னை இயக்குநர் சுராஜ்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். நான் ‘தலைநகரம்’ படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் நானா வாய்ப்புத் தேடி போக ஆரம்பிச்சுட்டேன்.




சென்னைக்கு எப்போ வந்தீங்க? ஏன் வந்தீங்க?

நான் மதுரை வக்ஃபோர்டு காலேஜ்ல பி.ஏ. படிச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி. டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அப்புறம் மூணார்லயே ஒரு டிரான்ஸ்போர்ட் நடத்தினேன். நஷ்டமாயிடுச்சு. அதுக்கப்புறம் உள்ளூர்ல இருக்க முடியல. அப்ப கல்யாணம் வேற ஆயிடுச்சு. லவ் மேரேஜ். கோயம்பத்தூருக்கு வந்தேன். நமக்கு தெரிஞ்ச தொழில் என்னன்னா வண்டி ஓட்டறது. சின்னதா டிராவல்ஸ் நடத்திப் பாத்தேன். அதுலயும் நஷ்டம். சரி. டிரைவரா வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணி நானும் பல கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கினேன். என் உருவத்தைப் பாத்து யாருமே வேலை தர மாட்டேன்னுட்டாங்க. ஒரு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சொன்னார்: ‘உங்களுக்கு வேலை குடுக்குறோம்னு வைங்க. எந்த கஸ்டமராவது பெட்டியை எடுத்து டிக்கில வைங்கன்னு உங்களைப் பாத்து சொல்லுவாங்களா? இவ்வளவு ஏன்? வண்டியில ஏறக்கூட மாட்டங்க.’ அதுக்கப்புறம்தான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில கலெக்ஷன் ஏஜெண்ட்டா வேலைக்கு சேந்தேன். அதாவது வண்டியை ஃபைனான்ஸுக்கு வாங்கிட்டு தவணை கட்டாம இருப்பாங்கல்ல? அந்த வண்டியை சீஸ் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற வேலை. கிட்டத்தட்ட கட்டப் பஞ்சாயத்து மாதிரி. அப்புறம் இயக்குநர் முகன் சென்னையில ‘தீண்ட... தீண்ட...’ படம் ஆரம்பிச்சப்போ சென்னைக்கு வந்தேன்.

வில்லனா நடிக்கறதுல ஒரு சிக்கல் இருக்கு. பொதுவா, ஆடியன்ஸ் யாருக்கும் நல்ல அபிப்ராயமே வராது. உங்க அனுபவம் எப்படி?

எனக்கும் அப்படித்தான். முதல்ல கிட்ட வர்றதுக்கே யோசிப்பாங்க. நாமளா போய் என்னன்னு கேட்டதும் பேச ஆரம்பிச்சுடுவாங்க. நெருங்கிட்டா, நாம நடிகன், சினிமா வேற, உண்மையில வேறன்னு புரிய ஆரம்பிச்சுடும்.

வாழ்நாள்ல, தனியா தெரியற மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிக்கணும் அப்படின்னு ஆசை ஏதாவது உங்களுக்கு இருக்கா?

அப்படி எல்லாம் இல்ல. நான் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வரணும். அவ்வளவுதான். ஒரு நடிகனா என்னிக்கி வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ, அப்பவே எல்லாத்தையும் நல்லா உள்வாங்க ஆரம்பிச்சுட்டேன். லைட்டிங்லருந்து, புரொடக்ஷன் வேலைலருந்து, இயக்குநர் எப்படி சொல்லித் தர்றாருங்கறது வரைக்கும் அப்சர்வ் பண்றேன். எந்த கேரக்டர்ல நடிச்சாலும் ‘இது நல்ல பேரை வாங்கித் தரும்’னு நினைச்சுத்தான் நடிக்கிறேன். ‘பந்தயக் கோழி’ன்னு ஒரு மலையாளப் படம். மூணே சீன்லதான் நடிச்சேன். ஆனா, முக்கியமான பாத்திரம். என்ன காரணமோ அந்தப் படம் ஹிட் ஆகலை. அதனால, மலையாளத்துல நான் யாருன்னு தெரியாம போச்சு. ‘தோழா!’ன்னு ஒரு படம். அதுல முழுக்க முழுக்க நாந்தான் வில்லன். சில சமயங்கள்ல இந்த மாதிரியும் அமைஞ்சு போயிடுது. அதே மாதிரி கடமைக்கு ஷூட்டிங்குக்குப் போய்ட்டு வர்ற சோலி நம்மகிட்ட கிடையாது. சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல. அதே மாதிரி நமக்கு எதுவுமே தெரியாதுன்னும் சொல்ல முடியாதும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உழைக்கிறேன். அவ்வளவுதான்.

சினிமாவுல போராட்டம் ஜாஸ்தி. எத்தனையோ பெரிய நடிகர்கள்கூட காணாமல் போயிருக்காங்க. நடிப்புத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீங்க? உங்களுக்கும் அது மாதிரியான போராட்டம் இருக்கா?

வாழுறதுக்கு ஒரு தொழில் வேணும். வண்டி வச்சிருந்தா வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம். பணம் வச்சிருந்தா வட்டிக்கு விடலாம். கூலி வேலைக்குப் போகலாம். ஆனா, நடிப்பு அப்படி இல்ல. இதுல மூலதனமே நம்மதான். மாசம் 1-ம் தேதி ஆனா வாடகை குடுக்கணும். திடீர்னு ஆஸ்பத்திரி செலவு வரும். பொதுவா, எந்தக் குடும்பத்துலயும் சினிமாவுல நடிக்கிறேன்னா, ஆதரவு குடுக்க மாட்டாங்க. வேணும்னா, கடை வச்சுத் தர்றேன். பொழைச்சுக்கோன்னு சொல்லுவாங்க. என் விஷயத்துலயும் அதுதான் நடந்துச்சு. இப்ப நான் நடிகனா நிக்கறதுக்குக் காரணம், நம்பிக்கை, மனைவி, நண்பர்கள். இவங்க இல்லைன்னா, என்னால வாழ முடியாது. இப்போ நானும் ஃபெப்சியில உறுப்பினர். ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாவும் இருக்கேன். ‘படிக்காதவன்’ படத்துல நடிகர் ஷாயாஜி ஷிண்டேவுக்கு நான் தான் டப்பிங் பேசினேன். தெலுங்குல ஒரு படத்துக்கு டப்பிங் பேசினேன். ஒண்ணுமே இல்லைன்னாலும், டப்பிங் பேசியாவது ஓட்டிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக எனக்கு குறைஞ்ச பட்ச நம்பிக்கைன்னு நினைச்சிடாதீங்க. பெரிய நம்பிக்கை.



நீங்க முன்மாதிரியா யாரையாவது நினைக்கிறீங்களா?



யாரையுமே நினைக்கலை. எனக்கு கமர்ஷியல் கனவுகள் கிடையாது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே வாழ்க்கையில எதையெல்லாம் அனுபவிக்கணுமோ, அதையெல்லாம் அனுபவிச்சு வாழ்ந்துட்டேன். நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டுன்னு பேர் வாங்கணும். முடிஞ்ச வரைக்கும் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் நல்லா பண்ணணும். அவ்வளவுதான்.

நீங்க நடிச்சதுலயே ரொம்ப கஷ்டமான காட்சின்னு ஏதாவது இருக்கா? அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்.

‘புதுப்பேட்டை’ படத்துல என்னை உயிரோட புதைக்கிற மாதிரி ஒரு சீன். நான் கேமராவைப் பாத்து பேசிக்கிட்டு இருப்பேன். பின்னாடி இருந்து என்னை உதைச்சு குழியில தள்ளுவாங்க. எல்லாத்தையும் கவனமா ஃபாலோ பண்ணி நடிக்கணும். அந்தக் காட்சி சரியா வரலை. செல்வராகவன் சார் ரொம்ப அன்பா பேசிப் பார்த்தார். அப்புறம் கோபமா பேசினார். மறுபடியும் அன்பா... ஒரு கட்டத்துல, ‘என்னடா பொழப்பு இது! திருப்பிப் பாக்காம ஓடிப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். ஆனா, அந்த சீனை எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் சரியாயிட்டேன். அந்தப் படம் வெளியில வந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிப் போச்சு. என்னைப் பாக்குறவங்க எல்லாருமே நான் தனுஷைக் கூப்பிடுற மாதிரி ‘குமாரு...’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

0

(ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் “விளம்பரம்” பத்திரிகைக்காக நான் செய்த நேர்காணல்)

Thursday, December 15, 2011

தூர்தர்ஷன் நினைவுகள்






அப்போது நாங்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இருந்தோம். இன்றைக்கும் நாங்கள் குடியிருந்த வேலாயுத பாண்டியன் தெரு இருக்கிறது, பெயர் மாறாமல், பழைய வாசனை மாறாமல். வட சென்னைக்கே பிடித்த சாபம் போல, எத்தனையோ பகுதிகள் இன்றைக்கும் அச்சு அசலாக அப்படியே இருக்கின்றன. பவழக்காரத் தெருவில் நான் படித்த சாரதா நடுநிலைப் பள்ளியின் பெயர் மட்டும்தான் மாறியிருக்கிறது. தர்மாம்பாள் நடுநிலைப் பள்ளி என்று. மற்றபடி அதே புழுதி, மாடுகள், சாணி, தெருவை அடைத்த லாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், குப்பை, இத்யாதி.

நாங்கள் இருந்தது ஒரு காம்பவுண்டு வீட்டில். எதிரெதிராக இருபது குடியிருப்புகள். அத்தனைக் குடியிருப்புகளுக்கும் பொதுவாக, மூன்று பொதுக் கழிப்பறைகளும் மூன்று குளியலறைகளும் இருந்தன.

வீட்டுக்கார அம்மாளுக்கு நல்ல பாரியான தேகம். வாசலை ஒட்டிய வராந்தாவில் மதியத்துக்குப் பிறகு கால் நீட்டிப் படுத்திருப்பார். விடுமுறை நாள்களில் என் வயதுப் பையன்கள் யாரும் மதியம் அவர் இருக்கும் திசைப் பக்கம்கூட எட்டிப் பார்க்க மாட்டோம். மாட்டினால் அவ்வளவுதான். ‘கொஞ்ச நேரம் காலை மிதிடா கண்ணு’ என்பார். கொஞ்ச நேரம் என்பது அவர் பாஷையில் அரை மணி நேரம்.

‘யக்கா! அம்மா கூப்பிடும். ஹோம் வொர்க் செய்யணும்’ என்று என்ன காரணம் சொன்னாலும் கேட்க மாட்டார். ‘இன்னும் கொஞ்ச நேரம்டா’ என்று கெஞ்சுவார். மறுக்க முடியாது. அப்படிப்பட்ட ஆளுமை அந்த அம்மாளின் குரலுக்கு இருந்தது. அரை மணி என்பது முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் என்று நீண்ட அனுபவமும் உண்டு.

எங்கள் காம்பவுண்டில் இருபது வீடுகள் இருந்தாலும், யார் வீட்டிலும் டி.வி. இல்லை. அந்தக் குடியிருப்பில் இருந்த எல்லோருமே மத்திய தர வர்க்கத்துக்கும் கீழான வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். மீன் பிடிப்பவர்கள், கொத்து வேலை பார்ப்பவர்கள், சிறு வியாபாரிகள் (பூ கட்டி விற்பதெல்லாம் சிறு வியாபாரம்தானே!), போஸ்டர் ஒட்டுபவர், எலெக்ட்ரீஷியன்...என பல தரப்பட்ட மக்கள். டி.வி. என்பது அவர்களைப் பொறுத்தவரை ஆடம்பரப் பொருள். அவர்கள் என்றில்லை. அத்தனைபேரிடமும் வாடகை வசூலித்த (கொழுத்த) வீட்டுக்கார அம்மாளின் வீட்டில்கூட டி.வி. இல்லை.

சென்னையில் வேறு வீடு கிடைக்காமல் (இப்போது என்று இல்லை. 30 வருடங்களுக்கு முன்னால்கூட சென்னையில் வீடு கிடைப்பது கஷ்டம்தான் சார்!), அந்தக் காம்பவுண்டில் பக்கத்துப் பக்கத்தில் இருந்த இரண்டு போர்ஷன்களை வாடகைக்கு எடுத்திருந்தார் அப்பா. நான் சாரதா நடுநிலைப் பள்ளியில் மூன்றாவது படித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு ஞாயிற்றுக் கிழமை, பழனி கூப்பிட்டான்.

‘டேய்! இன்னிக்கி டி.வி.யில படம் பாக்கலாம்டா!.’

‘டி.வி.யா?’

‘ஆமாடா.‘

‘டி.வி. எங்க இருக்கு?’

‘அடுத்த தெருவுல. நாலணா குடுத்தா படம் பாக்கலாம்.’

அடுத்த தெருவில் இருந்த ஒரு வீட்டில் டி.வி. இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் ஒளிபரப்பிய படத்துக்கும், வெள்ளிக் கிழமைகளில் போட்ட ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சிக்கும் காசு வாங்கிக்கொண்டு, பார்க்க அனுமதித்தார்கள்.

அப்பாவிடம் நாலணா கேட்டதற்கு, ஆயிரம் தடைகள், ஆயிரம் கேள்விகள். ‘டி.வி. எல்லாம் பாக்கக் கூடாது, கெட்டுப் போயிடுவே. கண்ணுக்குக் கெடுதல்டா. என்ன படம்? நல்ல படம்தானே? சின்னப் பசங்க எல்லாம் பாக்கலாமா? எவ்வளவு காசு? நாலணாவா? அதிகமா இருக்கே! இந்தா. சின்னப் பையன்தானே! முதல்ல பதினஞ்சு காசு குடுத்துப் பாரு. கேக்கலைன்னா அப்புறம் இருவத்தஞ்சு காசைக் குடு.’

நானும் பழனியும் காசை எடுத்துக்கொண்டு ஓடினோம். எங்களுக்கு முன்னாலேயே அங்கே பெரும் கூட்டம் கூடியிருந்தது. சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள். எங்களையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்து பேர் இருப்போம். தரையில் உட்கார்ந்தோம். வீட்டுக்காரர் எல்லோரிடமும் காசு வாங்கினார். அப்பா சொன்னது போல அவரிடம் பதினைந்து காசு கொடுப்பதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. என் முறை வந்தபோது நான் முழு நாலணாவையும் கொடுத்தேன்.

எங்களுக்கு எதிரே ஒரு மர மேசையில் அது இருந்தது. பழைய போர்வையால் மூடியிருந்தார்கள். சலசலவென்று பேசிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து வீட்டுக்காரர் திட்டினார். ‘சத்தம் போட்டா வெளியில அனுப்பிடுவேன்.’

அந்த மனிதர் மணி பார்த்தார். அந்தப் போர்வையை விலக்கினார். பெரிய மரப் பெட்டியின் இரு கதவுகளையும் திறந்தார். சுவிட்சைப் போட்டார். சிறுவர்கள் ‘ஹோ!’ வென்று சத்தம் போட்டார்கள். வீட்டுக்காரர் சிறுவர்களை அதட்டினார். டியூப் லைட்டை அணைக்கச் சொன்னார். மெல்ல டி.வி.யில் இருந்து ஒளி பரவியது. கறுப்பு வெள்ளை டி.வி. அது. புள்ளிகள், அவர் டி.வி.யில் இருந்த குமிழ்களை திருப்பித் திருப்பி ஏதேதோ செய்தார். மெல்ல படம். பிறகு தூர்தர்ஷனுக்கே உண்டான அந்த பிரத்யேக ‘டூ டுடு டூ டுடும்...’ இசை.

அன்றைக்கு சென்னைத் தொலைக் காட்சியில் ‘குழந்தையும் தெய்வமும்’ படம் போட்டார்கள். இருட்டு, புழுக்கம், கொசுக்கடி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு எல்லோரும் டி.வி.யில் தெரிந்த பிம்பங்களுக்குள் ஆழ்ந்துபோனோம்.

செய்தி போட்ட போது, ‘வெளியில போறவங்க போயிட்டு வாங்க’ என்றார் வீட்டுக்காரர். நானும் பழனியும் வெளியே போய், தெருச் சுவற்றில் ஒண்ணுக்கடித்துவிட்டு, மூன்று பைசா கமர்கட்டை வாங்கி வாயில் போட்டுவிட்டு வந்தோம். வீட்டுக்காரர் சேரில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் இடத்தில் உட்கார்ந்துகொண்டோம்.

மறுபடியும் படம் தொடங்கியது. ‘கோழி ஒரு கூட்டிலே...’ பாட்டு பாதி ஓடிக்கொண்டிருந்தபோது, கரண்ட் போய்விட்டது. எல்லோரும் வெளியே வந்து நின்றோம். இனிமேல் கரண்ட் வந்தாலும் படம் முடிந்துவிட்டிருக்கும் என்றபோதுதான் வீட்டுக்குத் திரும்பினோம்.

0

பொதுவாக டி.வி. எளிதில் பார்க்கவியலாத ஒரு அரிய பொருளாகத்தான் இருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் அதன் வாசனை கொஞ்சம் அதிகமாகப் பட்டது. அப்போது அப்பா தேனிக்கு மாற்றலாகியிருந்தார்.

தேனிக்காரர்கள் கொஞ்சம் இளகிய மனம் படைத்தவர்கள். டி.வி. பார்க்கக் காசெல்லாம் வாங்க மாட்டார்கள். நாங்கள் இருந்த தெருவில் இரண்டுவீடுகளில் டி.வி. இருந்தது. இரண்டு வீட்டுக்காரர்களும் தூர்தர்ஷனில் ‘ராமாயணம்’, ‘மகாபாரதம்’ போட்டபோது, டி.வி.யை எடுத்து வெளியே வைத்துவிடுவார்கள். இரு வீடுகளில் ஒரு வீட்டில் கலர் டி.வி. கலர் என்றால் இப்போது இருக்கிற கலர் கிடையாது. டி.வி.யின் திரையில் மட்டும் மூன்று கலர் தெரியும். திரையில் மேலே இடது மேல் மூலையில் பச்சை நிறம், நடுப் பகுதியில் மஞ்சள் நிறம், வலது கீழ் மூலையில் சிகப்பு நிறம். கறுப்பு வெள்ளைப் படம்கூடக் கலராகத் தெரியும்.

மொழி புரிகிறதோ, இல்லையோ நாங்கள் ராமாயணம், மகாபாரதம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்தோம். குறிப்பாக சம்பூர்ண ராமாயணத்தில் அஞ்சலிதேவியைப் பார்த்து அலுத்துப் போன எங்களுக்கு, இந்த ராமாயணத்தில் வந்த சீதையை மிகவும் பிடித்திருந்தது.

0

கல்லூரியில் படித்த போதுதான் ‘முட்டை பாலு’ அறிமுகமானார். அவர் செய்யாத தொழில் இல்லை. ஆரம்பத்தில் முட்டை வியாபாரம் செய்ததால், அவருக்கு ‘முட்டை பாலு’ என்று பெயர் வந்துவிட்டது. ஓவியம் வரைவார், போர்டுகளில் சித்திரம் போல அழகழகான எழுத்துகளை எழுதுவார். சுவரில் ‘செய்யது பீடி’, ‘ஐந்து பூ மார்க் பீடி’ என்று பெரிய எழுத்துகளை பெயிண்டால் எழுதுவார். இலக்கியம் பேசுவார். அரசியல் சொல்லித் தருவார்.

இரவில் பெரும்பாலான நேரங்களை அவரோடு செலவழிப்பதில் எனக்கும் என் நண்பர்களுக்கும் அவ்வளவு ஆர்வம் இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே, உலக நாடுகளைப் பற்றிப் பேசுவார். படித்த கதைகளில் பிடித்ததைச் சொல்லுவார். நாங்கள் டீயும் தம்மும் போட்டபடி அவருக்கு பெயிண்ட் எடுத்துக் கொடுத்து, அவர் சொல்வதை பதில் பேசாமல் கேட்போம்.

பாலு அண்ணன் வீட்டில் ஒரு டி.வி. இருந்தது. அப்போது நான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்தேன். சத்யஜித்ரேயின் படங்களை வாரா வாரம் இரவு பதினோரு மணிக்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்புவதாக செய்தி வெளியாகியிருந்தது. எல்லாப் படங்களையும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று எனக்கு வெறி. ஆனால், இரவு பதினோரு மணிக்கு யார் வீட்டில் போய்ப் படம் பார்ப்பது?

பாலு அண்ணன் அரண்மனைப் புதூரில் இருந்தார். தேனியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அரண்மனைப் புதூர். அன்று மாலை அவரை பங்களா மேட்டில் வைத்துப் பார்த்தபோது கேட்டேன்.

‘அண்ணே! சத்யஜித்ரே படம் போடறாங்களாம். உங்க வீட்டுக்கு வரலாமா?’

‘இதென்னப்பா கேள்வி. தாராளமா வா.’

என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதுதான் பாலு.

அவர் வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும்தான். அதுவுமில்லாமல் அன்பான மனிதர். அவர் இருக்கும்போது நமக்கென்ன! சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். வீடு அடைத்துக் கிடந்தது. ரொம்ப நேரம் தட்டியபிறகுதான் கதவு திறந்தது. அவருடைய அம்மா கதவைத் திறந்தார்.

‘நீயா! வா! வா!’ என்றார் சுரத்தில்லாமல். நான் வருவதை ஏற்கெனவே அம்மாவிடம் பாலு சொல்லியிருக்க வேண்டும்.

‘அண்ணன் இல்லியாம்மா?’

‘இப்ப வந்துடுவான்.’

அந்த அம்மாள் டி.வி.யைப் போட்டுவிட்டு, உள் அறைக்குள் போய் சுருண்டுகொண்டார். அன்றைக்கு ‘பதேர் பாஞ்சாலி’ போட்டார்கள். என்னால் படத்தில் ஒன்றவே முடியவில்லை. அறிமுகமில்லாத ஒரு வீட்டில் அராஜகம் செய்வதுபோல இருந்தது. படம் முடிகிற வரைக்கும் பாலு அண்ணன் வரவே இல்லை. டி.வி.யை அணைக்கச் சொல்லி அந்த அம்மாளிடம் சொல்லிவிட்டு, வெளியே வந்து, இருட்டில் குரைக்கும் நாய்களுக்கு ‘சூ’ சொல்லியபடி சைக்கிளில் வீடு வந்து சேர்ந்தேன்.

பாலு, ‘அடுத்த வாரம் ‘அபராஜிதா’. நான் பார்க்காத படம். கண்டிப்பாக வீட்டில் இருப்பேன்’ என்றார். தயக்கமாக இருந்தாலும் சத்யஜித்ரே என்னை இழுத்தார். பாதிப் படம் போய்க் கொண்டிருந்தபோது, அந்த அம்மாள் பாலுவைக் கூப்பிட்டார்.

‘என்னடா இது! வாரா வாரம் அவன் வருவானா? நாம எல்லாம் தூங்க வேணாமா?’ என்று அவர் மெதுவான குரலில் சொன்னாலும் எனக்குக் கேட்டுவிட்டது. பாதியில் ‘வயிறு வலிக்குதுண்ணே!’எழுந்து வீடு திரும்பினேன். அதற்குப் பிறகு நான் அவர் வீட்டுக்கு டி.வி. பார்க்கப் போகவில்லை.

0

பாஸ்கர் சக்தி வடபுதுப் பட்டியில் இருந்தார். தேனியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் வடபுதுபட்டி இருந்தது. நானும் ரமேஷ்வைத்யாவும் ஹரிகுமாரும் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவோம். சாப்பிடுவோம். அவர் வீட்டில் இருந்த புத்தகங்களை அராஜகமாக அள்ளி வருவோம்.

வடபுதுபட்டி கிராமத்துக்கு சொந்தமான கட்டடத்தில் ஒரு டி.வி. பெட்டி இருந்தது. மாலை வேளைகளில் போடுவார்கள். பத்துப் பதினைந்து பேர், தெரு மண்ணில் அமர்ந்து படம் பார்ப்பார்கள்.

வருடம் நினைவில் இல்லை. ஆனால், அப்போது ஒரு கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தது. ஒரு நாள் காலை அவர் வீட்டுக்குப் போனபோது, அந்தக் கட்டடத்தில் கூட்டமான கூட்டம். வயலுக்குப் போகிறவர்களும் கூலித் தொழிலாளர்களும் கூட டி.வி.யைச் சுற்றி கூட்டமாக நின்றிருந்தார்கள். என்னால் ஆச்சரியத்தை அடக்கவே முடியவில்லை. இவரெல்லாம் கிரிக்கெட் பார்ப்பாரா என்று நம்பவே முடியாத ஒரு நாற்பதைக் கடந்த தொழிலாளி ‘பாரு! அடுத்து இவன் ஃபோர் அடிப்பான்’ என்று கத்திக் கொண்டிருந்தார்.

0



வீட்டில் டி.வி. வாங்கியபோது ‘கேபிள் டி.வி. காலம்’ வந்துவிட்டது. சொல்லப் போனால், தூர்தர்ஷன் என்கிற சேனல் மீது வெறுப்பு என்றுகூடச் சொல்லலாம். திரும்ப வாழ்க்கை சென்னைக்கே துரத்தியது. ஒரு நாள் தூர்தர்ஷனுக்குக் கூட்டிக் கொண்டுபோனார் நண்பர் சுரேஷ். (இப்போது அவர் பெரிய இயக்குநர். தெலுங்கில் ‘கலவர் கிங்’ என்ற படத்தையும், தமிழில் விமலை வைத்து ‘எத்தன்’ படத்தையும் இயக்கியவர்.)

இருவரும் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளரைப் பார்த்தோம். ஒரு சிறுகதையை ஸ்கிரிப்ட் பண்ணிக் கொடுக்கச் சொன்னார்கள். ஆளுக்கொரு கதை. ஷூட்டிங்போது கூடவே இருக்கவேண்டும் என்றார்கள். இருந்தோம்.

ஸ்டுடியோவிலேயே ஷூட்டிங். பிரம்மாண்டமான ஸ்டுடியோ. நிகழ்ச்சித் தயாரிப்பாளர், மேலே ஒரு கண்ணாடி அறைக்குள் இருந்தபடி மைக்கில் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மூன்று கேமராவைக் கொண்டு ஷூட் செய்தார்கள். ஆனால், கதைக்குப் பொருந்தாத சொதப்பலான செட்டிங். சொதப்பலான நடிப்பு. உண்மையில் அந்த ஷூட்டிங் எனக்கு பயத்தை வரவழைத்தது. சிறுகதையை எழுதியவர், இப்படி மட்டமாக எடுத்ததற்காக தெருவில் வைத்து அடிப்பார் என்று தோன்றியது.

தூர்தர்ஷனில் எல்லாம் இருக்கிறது. பணம், அசத்தலான உபகரணங்கள், ஆள்பலம்...எல்லாம். ஆனால், அது அரசு நிறுவனம். ஆத்மார்த்தமாக ஒரு படைப்பைக் கொண்டுவரவேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. மற்ற அரசு உத்யோகத்தைப் போல, 10 டூ 5 உத்யோகம்தான் அதுவும். அந்த சிறுகதையை (அரை மணிநேரக் குறும்படம்) இரண்டுமணி நேரத்தில் எடுத்துவிட்டார்கள். அது எப்படியோ போகட்டும். வெளியே வரும்போது, ஸ்கிரிப்டுக்காக சொளையாக 6000 ரூபாய் கொடுத்தார்கள்.

0

திருமணமான புதிதில், நானும் என் மனைவியும் எது தவறினாலும் ஞாயிற்றுக் கிழமை நாலு மணிக்கு டிடி பார்ப்போம். ஞாயிற்றுக் கிழமை படம் போடுவதற்கு முன்பாக, விதவிதமான, ஒழுங்கான, நல்ல சமையல் வகைகளை செய்து காண்பிப்பார்கள். உண்மையிலேயே உபயோகமான நிகழ்ச்சியாக அது இருந்தது. குழந்தை பிறந்தபிறகு, அந்தப் பழக்கம் எப்படியோ படிப்படியாக நின்று போனது. அந்த நிகழ்ச்சியை வேறு வேறொரு நேரத்துக்கு மாற்றிவிட்டார்கள்.

இப்போதும் வீட்டில் டி.வி. இருக்கிறது. தூர்தர்ஷன், சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகை எல்லாம் தெரிகிறது. ஆனால், ஐந்து நிமிடம்கூடப் பொறுமையோடு யாராலும் பார்க்க முடிவதில்லை. அவளுக்கு சன் டி.வி.யில் தொடர்கள், குழந்தைக்கு சுட்டி டி.வி., எனக்கு ஹெச்.பி.ஓ.

0

(சில மாதங்களுக்கு முன்னால் ‘அம்ருதா’ கலை இலக்கிய மாத இதழில் வெளியான என் கட்டுரை)