Monday, September 19, 2011

அறியப்படவேண்டிய நடிகர்-1



‘எந்த கேரக்டரா இருந்தாலும் சிறப்பா பண்ணனும்!’

- நடிகர் நரேன்


நரேன். இயக்குநர் பாலுமகேந்திரா கண்டுபிடித்த அருமையான நடிகர். ‘பாலுமகேந்திரா கதைநேரம்’, ‘கிருஷ்ணதாசி’, ‘கனாக்காணும் காலங்கள்’ உள்பட நிறைய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர். இயக்குநர் மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே!’ திரைப்படத்தில் மகளைக் கடத்தல்காரர்களிடம் பறிகொடுத்த தந்தையாக நடித்து, ‘அப்புக்குட்டி!’ என்று கதறியழுத காட்சியில், தமிழ் சினிமா ரசிகர்களை ‘இவர் யார்?’ என்று திரும்பிப் பார்க்க வைத்தவர். ‘யுத்தம் செய்’ படத்தில் காவல்துறை அதிகாரி. ‘பொல்லாதவன்’ திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறனின் அடுத்த படைப்பான ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். கதையின் திருப்புமுனையே அவருடைய சேவலோடு தனுஷின் சேவல் மோதும் சண்டைக் காட்சிதான். அவரை சந்தித்து உரையாடினோம்.

கேள்வி: நீங்க எப்போ சினிமாவுக்கு வந்தீங்க, ஏன் வந்தீங்க, எத்தனை வருஷமா இந்த ஃபீல்டுல இருக்கீங்க?

நரேன்: எனக்கு சினிமா ரொம்ப ரொம்பப் பிடிக்கும். நடிகராகவோ, இயக்குநராகவோ, ஒரு தயாரிப்பாளராகவோ... ஏதோ ஒண்ணு, சினிமாவுல நாம இருக்கணும்ங்கற எண்ணம் எனக்கு சின்ன வயசுலருந்தே உண்டு. நானும் டிகிரி முடிச்சுட்டு, நிறையா வேலைக்குப் போனேன். பிஸினெஸெல்லாம் பண்ணினேன். ஆனா, எதுலயும் என்னால செட்டில் ஆக முடியல. கடைசியில நமக்கு சினிமாதான் சரின்னு ஒரு நாள் முடிவு பண்ணினேன். பாத்துக்கிட்டு இருந்த எல்லா வேலைகளையும் உதறிட்டு அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆகலாம்னு வந்தேன். அப்பிடி முடிவு செஞ்சுட்டேனே தவிர, அதுக்காக பல போராட்டங்கள் நடத்த வேண்டி இருந்துச்சு. எந்த டைரக்டர்கிட்டயும் அஸிஸ்டெண்ட்டா சேரவே முடியல. அந்தத் தேடல்லயே சில வருஷங்கள் ஓடிப் போயிடுச்சு. அப்பதான் வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். எனக்கு நடிக்கணுங்கற ஆசையும் இருந்துச்சு. அப்பதான் ஒரு நண்பர், ‘நடிகர் சங்கத்துல போய் சேருங்க! ஏதாவது தொடர்பு கிடைக்கும்’னு சொன்னார். நானும் நடிகர் சங்கத்துல போய் சேர்ந்தேன். அங்க நடக்குற டான்ஸ் கிளாஸ்ல கலந்துக்கிட்டேன். அங்க, எந்தெந்த இடத்துல படம் எடுக்குறாங்கன்னு தகவல் கிடைக்கும். நானும் எல்லா புது நடிகர்களையும் போல என்னை ஃபோட்டோ எடுத்து வச்சுக்கிட்டு, டைரக்டர்களைப் பாத்து குடுக்க ஆரம்பிச்சேன். அப்பிடிக் குடுக்குறப்போதான் யோசிச்சேன். ‘எனக்கு நடிப்புல என்ன தெரியும்?’ முதல்ல என்னை நான் வளத்துக்கனும்னு முடிவு பண்ணினேன். ஷூட்டிங்ல போய் என்ன செய்யப் போறோம், எப்பிடி நடிக்கப் போறோம்ங்கற பயத்துலயே இருந்துக்கிட்டு, அதே சமயம் நடிக்க வாய்ப்புக் கேக்கறதும் எனக்கு சரியாப் படலை.

அந்த சமயத்துல டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் ஒரு நடிப்புக் கல்லூரி ஆரம்பிச்சிருந்தாங்க. அங்க போய் சேர்ந்தேன். அங்க மதன் கேப்ரியல் அவர்கள்தான் சீஃபா இருந்தார். அவர் அடையாறு திரைப்படக் கல்லூரியில நடிப்புத் துறைத் தலைவரா இருந்தவர். அவருக்கு அசிஸ்டெண்ட்டா இருந்தவர் திரு. வேல் முருகதாஸ். இவங்க ரெண்டுபேரும்தான் எனக்கு ஆசிரியர்கள். முதல் நாள் இன்ஸ்டிடியூட்டுக்குப் போனேன். மொத்தம் பதினெட்டு மாணவர்கள் என் வகுப்புல இருந்தாங்க. அதுல நடிப்பே தெரியாத ஒரே மாணவன் நான் தான். ஆனா, கோர்ஸ் முடியும்போது எனக்கு அங்கே நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. எனக்கு நல்ல எக்ஸ்போஷர் கிடைச்சுது. என்னாலயும் நடிக்க முடியும்னு ஒரு நம்பிக்கையும் வந்துச்சு. இந்தப் பெருமையெல்லாம் என் ஆசிரியர்களைத்தான் சேரும். அப்போ டான்ஸ் மாஸ்டர் கலா அவர்கள் எல்லாம் ரொம்ப உதவியா இருந்தாங்க.

அந்த கோர்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் நான் நடிப்புல எந்த இடத்துல இருக்கேங்கறதே எனக்குத் தெரிஞ்சுது. அந்தப் புரிதல் வந்ததுக்கு அப்புறம்தான் இன்னும் நிறையா கத்துக்கணும், இன்னும் நிறையா பிராக்டீஸ் பண்ணணும்ங்கற எண்ணம் வந்துச்சு. அப்போ எனக்கு நான் படிச்ச நடிப்புக் கல்லூரியிலேயே, மதன் கேப்ரியல் மூலமா ஆசிரியரா சேர்றதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைச்சுது. சில வகுப்புகளை எடுத்தேன். அந்த வகுப்புகள்கூட எனக்கான பயிற்சியாத்தான் இருந்தது.

அப்போதான் பாலுமகேந்திரா சாரை வந்து ஒரு தடவை பார்த்தேன். வேற யார்கிட்டயும் போய் வாய்ப்புக் கேக்கலை. எனக்கு என்ன நடிக்கத் தெரியும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் யார்கிட்டயும் போய் வாய்ப்பே கேக்கலை. பாலுமகேந்திரா சார் அப்போ இந்திப் படம் எடுத்துக்கிட்டு இருந்தார். ‘இந்தி தெரியுமா?’ன்னு கேட்டார். ‘தெரியாது’ன்னு சொன்னேன். ‘நான் தமிழ்ப்படம் எடுக்குறப்போ அறிவிப்பு வரும். அப்போ நேரா என்னை வந்து பாருங்க!’ன்னு சொன்னார் பாலுமகேந்திரா சார். ஆனா, அறிவிப்பு வரலை. அவரே என் ஃபோன் நம்பருக்குப் பேசிக் கூப்பிட்டார். போனேன். ‘ராமன் அப்துல்லா’ங்கற அவரோட படத்துல எனக்கு ஒரு சின்ன கேரக்டர் குடுத்தார். அதுக்கு முன்னாடி நான் நடிப்புக் கல்லூரியில ஆசிரியரா இருந்தப்பவே, ‘ஓம் சரவணபவா!’ன்னு ஒரு படம் எடுத்தாங்க. என். கிருஷ்ணசாமின்னு ஒரு தயாரிப்பாளர். ‘படிக்காத மேதை’ பட்ம் எடுத்தவர். அந்த ‘ஓம் சரவணபவா’வுல நான் சிவனா நடிச்சிருக்கேன். அதுதான் என்னோட முதல் படம். அதுக்கப்புறம்தான் ‘ராமன் அப்துல்லா’வுல சின்ன கேரக்டர்ல நடிக்க வாய்ப்புக் கிடைச்சுது. பாலுமகேந்திரா சார், ‘நல்லா வந்திருக்கு. நல்லா நடிக்கிறீங்க. அடுத்து நான் படம் பண்ணும்போது என்னை வந்து பாருங்க! நடுவுல நடுவுல வந்து என்னைப் பாத்து வாய்ப்புக் கேக்க வேண்டிய அவசியம் இல்லை’ன்னு சொன்னார். அவர் அப்பிடி சொன்னது எனக்கு ரொம்ப உத்வேகம் குடுத்த மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய டைரக்டர், ‘ஓ.கே.’ன்னு சொன்னதைத்தான் நடிப்புல என்னோட முதல் படியா நான் நினைச்சிருக்கேன்.

கேள்வி: பாலுமகேந்திரா சார் அதுக்கப்புறம் ‘கதை நேரம்’ ஆரம்பிச்சப்போ உங்களைக் கூப்பிட்டு விட்டாரா?

நரேன்: இல்ல. அது ஒளிபரப்பாகி ஒரு வாரம் கழிச்சுத்தான் எனக்குத் தெரியும். அதுக்கப்புறம்தான் நான் அவரைப் போய்ப் பார்த்தேன். அவர், ‘யோவ்! எங்கய்யா போயிருந்தீங்க? நம்பரெல்லாம் மாறிப் போச்சு. உங்களுக்காக ரெண்டு, மூணு கேரக்டர் எல்லாம் போட்டு வச்சிருந்தேன்’ன்னார். அப்புறம் ‘உங்களுக்காக ரெண்டு, மூணு கதையெல்லாம் வச்சிருக்கேன்’ன்னாரு. அதுக்கப்புறம் ‘கதைநேரம்’ல நடிக்க ஆரம்பிச்சேன். ‘கதைநேரம்’ பண்ணும்போதுதான் நான் நடிப்புல எவ்வளவு பின் தங்கியிருந்தேன்னு எனக்குத் தெரிஞ்சுது. நடிப்புல இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கு, இன்னும் எவ்வளவு என்னை வளத்துக்கணும் அப்படிங்கறதெல்லாம் தெரிஞ்சுது. ஸ்கூல்ல படிச்சது, பிராக்டீஸ் பண்ணினது இதையெல்லாம் தாண்டி பிராக்டிக்கலா எவ்வளவு விஷயம் இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சுது. நான் பாலுமகேந்திரா சார்கிட்டதான் நடிப்பைக் கத்துக்கிட்டேன். அவர்தான் என்னோட முதல் குரு. அவர்கிட்ட ஒரு வருஷம் தொடர்ந்து நடிச்சேன். வேற எந்த வேலையும் செய்யாம, அவர் எப்போ கூப்பிட்டாலும் நடிக்கறதுக்குத் தயாரா இருந்தேன். பாலுமகேந்திரா சார் யூனிட்ல எனக்கு நிறையா நண்பர்கள் கிடைச்சாங்க. வெற்றிமாறன், விக்ரம் சுகுமாரன், சுரேஷ்... இப்பிடி. அங்க போய்த்தான் நிறையா படிக்க ஆரம்பிச்சேன். நான் வெகுஜனப் பத்திரிகை, எழுத்தைத்தான் அதுவரைக்கும் நிறையா படிச்சுக்கிட்டு இருந்தேன். பாலுமகேந்திரா சார்தான் நிறையா எழுத்தாளர்களையும் நல்ல இலக்கியத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சார். எனக்கு ரொம்ப இலக்கியம் தெரியாதுன்னாலும், ‘இதைப் படிக்கலாம், இது வேணாம்’னு பிரிச்சுப் பாக்க அதுக்கப்புறம் முடிஞ்சுது. ‘கதைநேரம்’ முடிஞ்சதுக்கு அப்புறம் நிறைய தொலைக்காட்சித் தொடர்கள்ல நடிக்க வாய்புக் கிடைச்சுது.

கேள்வி: எத்தனை சீரியல்ல நடிச்சிருப்பீங்க?

நரேன்: எப்பிடியும் இருபதுக்கு மேல இருக்கும். முதல்ல ‘கதைநேரம்’, அப்புறம் ‘கிருஷ்ணதாசி’ல முக்கியமான ரோல். சின்னதும் பெருசுமா நிறையா பண்ணிட்டேன். கடைசியா, நான் விஜய் டி.வி.ல ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ பெரிய ஹிட். அதுக்கப்புறம் விஜய் டி.வி.லயே நிறையா சீரியல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன்.

கேள்வி: ‘அஞ்சாதே!’ல நடிக்கிற வாய்ப்பு எப்பிடி வந்தது?

நரேன்: இயக்குநர் மிஷ்கின்கிட்டருந்து அழைப்பு வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. ‘அஞ்சாதே!’ வெளியானதுக்கு அப்புறம் எல்லாருமே நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. அதுக்கான எல்லா பெருமையும் இயக்குநர் மிஷ்கினுக்குத்தான் போய்ச் சேரணும். அதுல என்னோட பங்களிப்பு ரொம்ப கம்மின்னுதான் நான் சொல்ல முடியும்.

கேள்வி: அதுல நடந்த ஒரு சின்ன சம்பவத்தைச் சொல்லுங்களேன்!

நரேன்: அதுல கதைப்படி என் பொண்ணு ரோட்ல விழுந்து கிடப்பா. நான் அவளைப் பாத்து கதறிக்கிட்டே நடந்து வரணும்னு மிஷ்கின் சொன்னார். எனக்கு என்ன தோணிச்சுன்னா, என் பொண்ணைப் பாத்ததும், எனக்கு என்ன வயசா இருந்தாலும் ஓடிப் போய்ப் பாக்கணும்னுதான் தோணிச்சு. ஏன்னா, என் மகளை ஒரு லுங்கியோட சுத்தி ரோட்ல போட்டிருக்கான். அவ டிரெஸ் இல்லாம ரோட்ல கிடக்கா. அந்த நிலைமையில என்னால ஓடத்தான் முடியும். நின்னு நிதானமா நடக்க முடியாது. இதை நான் மிஷ்கின்கிட்ட சொன்னேன். அவரு ‘இல்ல, நீங்க நின்னு நிதானமா நடங்க. இதை நான் ஹைஸ்பீட்லதான் எடுக்கப் போறேன்’னு சொன்னார். நான் திரும்பச் சொன்னேன். ‘இல்ல சார், என்னால நடக்க முடியல. அந்த வேகத்துல ஓடத்தான் வருது’ன்னு சொன்னேன். ‘நடக்கணும்னா நடக்கலாம். ஆனா, அது எக்ஸர்சைஸ் மாதிரி இருக்கும். உணர்ச்சி பூர்வமா செய்ய முடியல’ன்னேன். உடனே மிஷ்கின் சூட்டிங்கை நிப்பாட்டிட்டார். நான் நடந்து வர்ற அந்தக் காட்சிக்கு ஏற்கெனவே ஒரு பின்னணி இசையை தயார் பண்ணி வச்சிருந்தார். அதை அசிஸ்டெண்ட் டைரக்டரை தேடி எடுக்கச் சொன்னார். தன்னோட வாக்மேன்ல போட்டுக் காமிச்சார். அது வரைக்கும் ஷூட்டிங் நிக்குது. அதைக் கேட்டப்போதான் எனக்கு அதுக்கான ஃபீலிங் வந்துச்சு. ‘அய்யய்யோ என் பொண்ணு!’ன்னு ஓடுறதைவிட, ‘அய்யய்யோ என் பொண்ணைக் காப்பாத்த கையாலாகாதவனா ஆயிட்டேனே! எப்பிடி என் பொண்ணைப் பாக்கப் போறேன்?’ங்கற உணர்வு வந்துச்சு. அதுக்கு மிஷ்கின் சொன்ன காரணம் என்னன்னா, ‘நீ யாரா வேணா, எப்பிடி வேணா இரு. லாஜிக் எப்பிடி வேணா இருக்கட்டும். எனக்கு நீங்க நடந்து வரும்போது, படம் பாக்குறப்போ, ஒவ்வொரு பெண்ணைப் பெத்த தகப்பனும் அழணும். அப்பிடி அழுதாதான், கடைசியில அப்பிடி செஞ்சவனை ஒரு ஜந்துவை சுடுற மாதிரி சுட முடியும். ஒரு உயிரில்லாத ஜடப் பொருளை சுடப் போற மாதிரிதான் இதுல காட்சி இருக்கு. அதுக்கு நீங்க இந்த இடத்துல நடந்து வர்றதுதான் ரொம்ப முக்கியம். ஒரு தகப்பனோட கையாலாகாத்தனம்தான் எனக்கு வேணும்’ அப்பிடின்னு சொல்லி அவர் எனக்குப் புரிய வச்சார். அதுக்கப்புறம்தான் என்னால பண்ண முடிஞ்சுது. இன்னிக்கும் அந்தக் காட்சியை ரொம்பப் பெருசாத்தான் எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க. மிஷ்கின் சார் எனக்கு வாய்ப்பும் குடுத்து, நான் கேக்கற கேள்விக்கு பொறுமையா உக்காந்து பதிலும் சொன்னார். பொதுவா எந்த இயக்குநரும் இப்பிடியெல்லாம் சொல்லவே மாட்டாங்க. ‘யோவ்! மெல்லமா நடய்யா!’ன்னுட்டு போயிடுவாங்க. அந்தப் படம் வெளிய வந்ததுக்கப்புறம் என்னைப் பாக்கறவங்கள்லாம் ‘என்னால அதைப் பாக்க முடியல!’ன்னு சொல்லியிருக்காங்க. ஒரு ஆண்பிள்ளையை மட்டும் பெத்த தகப்பன்கூட என்கிட்ட வந்து சொல்லியிருக்கார். அதுக்கு முக்கியக் காரணம் மிஷ்கின் சார்தான்.

கேள்வி: நடிக்கறதுதான் உங்க கேரியர்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க. அதுக்கப்புறம் ஹீரோவா நடிக்கணும், வில்லனா நடிக்கணும்னு ஏதாவது ஒரு புள்ளியைத் தேடிப் போனீங்களா?

நரேன்: அப்பிடியெல்லாம் இல்ல. எனக்கு சினிமாவுல ஏதாவது ஒரு பங்களிப்பை செலுத்தணும், அவ்வளவுதான். சினிமாவுல எந்த வேலையா இருந்தாலும் செய்யறதுக்குத் தயாரா இருக்கறவன் நான். நடிக்கணும்னு வரும்போது அந்த கேரக்டராத்தான் நடிக்கணும்னு தோணும். எனக்கு சின்ன வயசுலயே நிறைய கேள்விகள் தோணும். ‘ஏன் இவர் இவ்வளவு ஃபிரெஷ்ஷா இருக்காரு? ஆனா சோகமா இருக்காரு? நடிக்கிறாரா?’ன்னு தோணும். இன்ஸ்டிடியூட்ல போய் படிக்கும்போதுதான் அதுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுது. ஒரு குணச்சித்திர நடிகரா வரணுங்கறதுதான் என்னோட விருப்பமா இருந்துச்சு. குறிப்பா சொல்லணும்னா, திரு நாசர் அவர்களைப் போல வரணும்னு. எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். ஒரு கேரக்டரை உள்வாங்கி, அதாவே மாறுவது எப்பிடின்னு தெரிஞ்சதுக்கப்புறம் நான் அவர் மாதிரி வரணும்னு நினைச்சேன். நான் டைரக்டரோட நடிகனா இருக்கணும்னுதான் விரும்பறேன். எனக்குன்னு ஒரு பாணியோ, ஸ்டைலோ இல்லாம டைரக்டர்கள் என்ன சொல்றாங்களோ அதை உள்வாங்கி, அதை அப்பிடியே நடிப்பாக்கணுங்கறதுதான் என்னோட பாணியா இருக்க முடியும். அதுதான் ஒரு நடிகனோட கடமையா இருக்க முடியும்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.



கேள்வி: சினிமாவையும் நடிப்பையும் நம்பி இந்தக் காலத்துல வாழறது சாத்தியமா?

நரேன்: ரொம்பக் கஷ்டம். சிலபேருக்கு அது ஈசியா அமைஞ்சிடுது. சிலபேர் ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு, கடைசிவரைக்கும் அப்பிடியே இருந்துடுறாங்க. நானே ‘நான் இது இதுலதான் நடிப்பேன், எனக்கு இவ்வளவு சம்பளம் குடுத்தாத்தான் நடிப்பேன்’னு நிறைய வாய்ப்புகளை மறுத்துடுறேன். காரணம் என்னான்னா, என்னோட மனைவியும், குடும்பமும் எனக்கு சப்போர்ட் பண்றாங்க. அதனால பொருளாதாரரீதியா என்னால சமாளிக்க முடியுது. இது நிறையாபேருக்கு நடக்காது. நான் பதினஞ்சு வருஷமா போராடிக்கிட்டு இருக்கேன். என் மனைவி குடும்பத்தையும் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கிட்டு செய்யறதால, என்னால என் லட்சியத்தை நோக்கிப் போக முடியுது. ‘அஞ்சாதே!’ வந்ததுக்கு அப்புறமும் எனக்கு பெரிய கேரக்டர் வரலை. அதுக்காக காத்திருந்து நான் முயற்சி பண்றேன்னா அதுக்குக் காரணம் என்னோட குடும்பப் பின்னணிதான். இது எல்லாருக்கும் சாத்தியமில்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு மாதிரியா வாழ்க்கை அமையுது. அதை பொதுப்படையா சொல்ல முடியல. சொல்றது கஷ்டம். சினிமாவைப் பொறுத்தவரை அவங்கவங்களா அமைச்சுக்கறது, அமையறது... இப்பிடித்தான். ஒரு ஐ.டி. கம்பெனியில வேலை பாக்கணும்னா இஞ்ஜினியரிங் முடிச்சிருக்கணும், ஒரு டிகிரி முடிச்சிருக்கணும்னு என்னென்னவோ அளவுகோல்கள் இருக்கு. வழிமுறைகள் இருக்கு. சினிமாவுல இல்ல.

கேள்வி: ஒரு படத்தைப் பாக்கும்போது ‘இந்த ரோல்ல நாம பண்ணியிருக்கலாமே’ன்னு ஏதாவது ஒரு நடிகரோ, ஒரு பாத்திரமோ உங்களை பாதிச்சிருக்கா?

நரேன்: இல்ல. பொதுவா சினிமாவுல வர்ற எல்லா பாத்திரங்களையும் பண்ணணும்னு ஆசை இருக்கத்தான் செய்யும். நடைமுறையில சாத்தியம் இல்லல்ல? அந்த மாதிரி எதுவும் இல்ல. பாக்கும்போது பிரமிப்புத்தான் கூடுதே தவிர, நாம பண்ணியிருப்போமான்னு ஒரு சந்தேகம்கூட அடிப்படையிலகூட வருது. (சிரிப்பு).

கேள்வி: ‘ஆடுகளம்’ படத்தில் நடிச்ச அனுபவம் பத்தி சொல்லுங்களேன்!

நரேன்: இயக்குநர் வெற்றிமாறனோட ஒர்க் பண்றதுங்கறது ரொம்ப இண்டரெஸ்டிங்கான விஷயம். டென்ஷனே இல்லாம எல்லாத்தையும் சொல்லிக் குடுப்பார். இந்தப் படத்துல மதுரை பாஷைல பேசணும். நாம டயலாக் பேசறப்போ, அந்த மொழி சரியா வரலைன்னா, பதட்டமே படமாட்டாரு. ‘சரி. பரவால்ல இன்னொருதடவை எடுத்துக்கலாம்’னு சொல்லுவாரு. அந்த அளவுக்கு ரொம்ப சப்போர்ட்டிவா இருப்பாரு. அவரை எனக்கு பத்தாண்டுகளாத் தெரியும். அவரோட என்னால ரொம்ப சுலபமா ஒன்றி வேலை பார்க்க முடியுது. ரொம்ப ஃபிரீயா இருந்தது.

‘ஆடுகளம்’ பட அனுபவத்துல ஒண்ணே ஒண்ணை நான் சொல்லணும். வெற்றிமாறன் ‘நீங்க மதுரை மொழிதான் பேசணும்’னு எங்களுக்கு சொல்லிக் குடுத்தாருன்னா, அதுக்குக் காரணம் இருக்கு. அவரு அதுக்கு முன்னாடி மதுரைக்குப் போய்த் தங்கி, கிட்டத்தட்ட ஒருவருஷம் மதுரைத் தமிழைக் கத்துக்கிட்டாரு. இது எனக்கு ரொம்பப் புதுசா இருந்தது, ஆச்சரியமா இருந்தது. அவரு கத்துக்கிட்டு எங்களுக்குக் கத்துக் குடுக்கறாரு. இன்னும் அவர் அந்த மதுரைத் தமிழை சரியா பேசிக்கிட்டு இருக்காரு. டப்பிங்ல நாங்க பேசறதை சரி பண்ணினார்.

கேள்வி: வெற்றிமாறன், பாலுமகேந்திராவின் சீடர். இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது? ஏதாவது வித்தியாசம் உண்டா?

நரேன்: பாலுமகேந்திரா சார்கிட்ட சில சீரியல் நடிகர்கள் எல்லாம்கூட நடிச்சிருக்காங்க. அவர்கிட்ட அவங்க சொல்லுவாங்க, ‘சார்! என்ன பண்ணணும்னு சொல்லுங்க. அப்பிடியே பண்றோம்’னு சொல்லுவாங்க. நான் அவர்கிட்ட ஆர்வக்கோளாறோட போய், ‘சார், நானே புதுசா ஏதாவது பண்றேன்’னு சொல்லி எதையாவது செய்வேன். அதுல அவருக்கு திருப்தியே வராது. கடைசியில ‘எப்பிடி பண்ணினா நல்லா இருக்கும் சார், எனக்குப் புரியல சார்!’னு அவர்கிட்டேயே கேப்பேன். அவர் சின்னதா ஏதாவது பண்ணிக் காமிப்பார். அப்போதான், ‘அய்யய்யோ! இது நமக்குத் தோணலியே!’ன்னு நினைப்பேன். அவர்கிட்ட நிறையா கத்துக்கிட்டேன். அவர் எல்லாத்துக்கும் காரணம் சொல்லுவாரு. அவருடைய பாணி ஒண்ணு இருக்கும். பேசுற தொனி, அங்க அசைவுகள் எல்லாம் இருக்கும். வெற்றிமாறன் எல்லாத்தையும் நேச்சுரலாத்தான் வேணும்னு சொல்லுவாரு. அவர்கிட்ட அந்த கேரக்டரா நடந்து காட்டணும். கொஞ்சம் ஜாஸ்தியாவோ, குறைச்சலாவோ பண்ணிடக்கூடாது. ரொம்ப யதார்த்தமா அந்தப் பாத்திரமாவே வாழணும். ஆனா, வெற்றி சார்கிட்ட ரொம்ப ஜாலியா ஒர்க் பண்ணலாம். எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். பொதுவா, இந்த இரண்டு இயக்குநர்கள்கிட்டயுமே எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். நம்ம சந்தேகத்தை அவங்க கிளியர் பண்ணி புரிய வச்சிடுவாங்க. ஸ்டைல் மட்டும் வேற, வேற.

கேள்வி: நடிப்புல உங்களோட குறிக்கோள் எதுவா இருக்கு?

நரேன்: நான் ஒரு கேரக்டர் பண்ணி, படம் வெளியாயிடுச்சு. அந்த கேரக்டர்ல நான் பண்ணினது ரொம்ப சரியா இருக்கணும். யாராவது, ‘இவருக்கு பதிலா வேற யாராவது பண்ணியிருக்கலாமே!’ன்னு சொல்லிடக்கூடாது. நான் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் அது பொருத்தமா, சரியா இருக்கணும். இதை வேற யாராலயும் பண்ண முடியாதுன்னு சொல்ல வரலை. ‘அய்யய்யோ! இதை நல்லாப் பண்ணியிருக்கலாமே!’ன்னு ஒரு அவப்பெயர் வந்துடக்கூடாது. எந்த பாத்திரமா இருந்தாலும் சிறப்பா பண்ணணுங்கறதுதான் என் லட்சியமே.

0

(கனடாவில் இருந்து வெளிவரும் ‘விளம்பரம்’ பத்திரிகைக்காக நான் நடிகர் நரேனுடன் செய்த நேர்காணல்)

No comments: