Monday, December 29, 2008

கச்சேரி கேட்பவர்கள் கவனத்துக்கு!

கேட் திறந்திருந்தது. சபாவுக்குள் நுழைந்த கார்த்திகேயன் மொபெட்டை ஓரமாக நிறுத்தினார். வாட்ச்மேனைக் காணவில்லை. ஆபீஸ் ஜன்னலுக்கு அந்தப் பக்கம் சுப்ரமணியத்தின் தலை தெரிந்தது. பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு, சீப்பை எடுத்து, மொபெட்டின் 'வியூ மிரர்'ரில் பார்த்துத் தலை வாரினார். கர்ச்சீப்பில் பொதிந்து வைத்திருந்த பவுடரை எடுத்து முகத்தில் மென்மையாகப் பூசினார். திட்டுத் திட்டாகப் படிந்திருந்த பவுடரைக் கர்ச்சீப்பால் ஒற்றி ஒற்றி எடுத்தார். முகத்துக்குப் பூசிய பவுடரையே எடுத்து நெற்றியில் திருநீறு மாதிரி இட்டுக்கொண்டார். ஆபீஸை நோக்கி நடந்தார்.

அவருடைய மன வேகத்துக்குக் கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. வயதானால், நாளுக்கு நாள் நடைவேகம்கூடக் குறையுமா என்ன? நேற்று நடந்ததுபோல இன்றைக்கு நடக்க முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் முட்டிகளில் கடுமையான வலி. மிகவும் சிரமப்பட்டு இந்த உடம்பைத் தூக்கிப் போவதாலோ என்னவோ இரண்டு கால்களையும் லேசாக வளைத்து வளைத்து நடக்கவேண்டியிருக்கிறது.

ஆபீஸ் அறை என்பது சுப்ரமணியம் உட்கார்ந்திருக்கும் எட்டுக்கு நாலு அளவிலான பகுதி. கதவுக்கு எதிர்ப்பக்கம் கவுண்ட்டர். டிக்கெட் வாங்க வருபவர்கள் ரோட்டில் நின்றுதான் டிக்கெட் வாங்கவேண்டும். நடுவில் ஒரு மர டேபிள். ஒரு பெரிய லெட்ஜர் புத்தகம் விரிந்துகிடக்க, அதில் விரல்களை ஓட்டிக்கொண்டிருந்தான் சுப்ரமணியம். ஆபீஸ் அறையை ஒட்டினாற்போல இருந்த சபா செக்ரட்டரியின் அறை மூடிக்கிடந்தது. முழுக்க ஏசி செய்யப்பட்ட அறை என்பதால் ஆள் இருந்தாலும் மூடியே இருக்கும்.

“வணக்கம்னா” முகம் முழுக்க சிரிப்பாக சுப்ரமணியத்தைப் பார்த்துச் சொன்னார் கார்த்திகேயன்.

சுப்ரமணியத்துக்கு அவர் வயதில் பாதிகூட இருக்காது. ‘சார்!' என்று கூப்பிட தன்மானம் இடம்தரவில்லை. ரயில்வேயில் ஃபிட்டராக வேலை பார்த்து ரிடையர்ட் ஆனவர். அரைக்காசு சம்பளமானாலும் அரசாங்க ‘கெத்து' குறைந்துவிடுமா என்ன?

அவனைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடமுடியாது. அது அவன் மரியாதையைக் குறைப்பதாகிவிடும். எந்த நேரத்தில் சுப்ரமணியம் தன் சிடுமூஞ்சி முகத்தைக் காட்டி, ‘வள்..' என்று விழுவான் என்று யாருக்கும் தெரியாது. அதோடு, செக்ரட்டரி எல்லா விஷயங்களிலும் சுப்ரமணியத்தின் ஆலோசனைக்குக் காது கொடுப்பவராக இருந்தார். டிசம்பர் சீசன் முடிந்ததும் வழக்கமாக சபா செக்ரட்டரி அவரைத் ‘தனி'யாகக் கவனித்துக் கொடுக்கும் தொகையைக்கூடக் கொடுக்காதீர்கள் என்று அவன் சொன்னாலும் சொல்லிவிடுவான். எதற்கு வம்பு? ‘அண்ணா!' என்று கூப்பிட்டால், ‘அட மடையா! நீ எனக்கு அண்ணன் இல்லடா' என்பது போலவும் இருக்கும். அவனுக்கு மரியாதை கொடுத்தது போலவும் இருக்கும்.

சுப்ரமணியன் நிமிர்ந்து பார்த்தான்.

“வாங்க கார்த்திகேயன்! மத்த வாலண்டியர்ஸ் எல்லாம் வந்தாச்சா?”

“இப்ப வந்துடுவாங்க.”

“ம்.” அவ்வளவுதான். மறுபடியும் லெட்ஜரில் ஆழ்ந்து போனான் சுப்ரமணியம்.

கார்த்திகேயன் வாட்சைப் பார்த்தார். மணி நான்கு முப்பது. பாலுவும் முரளியும் ஐந்துமணிக்குத்தான் வருவார்கள். திரும்பி, சபாவின் பின்புறம் இருந்த கேண்டீனுக்குப் போனார்.

சங்கரய்யர் வாணலியில் இருந்து கரண்டியால் மெதுவடைகளை எடுத்து தட்டில் போட்டுக்கொண்டிருந்தார். அச்சில் போட்டு எடுத்தது போல எல்லாம் ஒரே சைஸில் இருந்தன. கார்த்திகேயனுக்குக் கை துறுதுறுத்தது. ‘ஒரு வடையை எடு!' என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்டது. ‘அவசரப்படாதே! போணியாகட்டும்.' என்று எழுந்த இன்னொரு குரல் முதல் குரலை அதட்டுப் போட்டு அடக்கியது.

“நமஸ்காரம் மாமா.”

குரல் கேட்டு, கிரைண்டரில் இருந்து மாவை வழித்துப் போட்டுக்கொண்டிருந்த பர்வதம் மாமி திரும்பிப் பார்த்தாள்.

“கார்த்திகேயன் வந்தாச்சா? அப்போ சட்னிக்குத் தாளிச்சிடவேண்டியதுதான்.” சங்கரைய்யர் சிரித்தபடி சொன்னார். ஐம்பதைக் கடந்துவிட்டதற்கான அடையாளம் அவருடைய நரைத்த தலைமுடி மட்டும்தான். மற்றபடி ‘துறுதுறு' இளைஞன் சங்கரன்.

“மாமி! ஒரு அரை டம்ளர் காஃபி தர்றேளா? அரை டம்ளர் போறும்.” குரலில் ஒரு குழைவை வரவழைத்துக்கொண்டு கேட்டார் கார்த்திகேயன். பர்வதம் மாமியின் முகம் எந்தவிதமான உணர்ச்சியுமில்லாமல் இறுகிக் கிடந்தது. மாவு வழித்தக் கைகளைக் கழுவிவிட்டு, முந்தானையால் துடைத்துக்கொண்டாள். ஃபில்டரில் இருந்து ஒரு டம்ளரில் டிக்காஷனை ஊற்றினாள்.

மாமி எப்போதுமே இப்படித்தான். அதிகம் பேச மாட்டாள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தமாட்டாள். அதிகம் பேசுவது இடைஞ்சல் என்று நினைக்கிறாளோ? அல்லது உன்னுடன் நான் ஏன் பேசவேண்டும் என்கிற விட்டேத்தி மனோபாவமா?

“நேத்து உன்னிகிருஷ்ணன் கச்சேரி பிரமாதம், இல்ல மாமி?” பர்வதம் மாமிக்கு உன்னிகிருஷ்ணனை மிகவும் பிடிக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

“ஆமா.” ஒற்றை வார்த்தை பதிலாக வந்தது.

“அதுலயும் அந்த ஜெகதோத்தாரன...அடடா! இன்னும் வெள்ளிக் கிழமையில மாமா போடற சக்கரைப் பொங்கல் மாதிரி இனிச்சுண்டே இருக்கு.”

அதற்கு மாமி பதில் எதுவும் சொல்லவில்லை. மாமி நீட்டிய காஃபியை வாங்கி ‘மடக்! மடக்!' என்று குடித்தார். டம்ளரை வைத்துவிட்டு, “அப்பறமா வர்றேன் மாமா!” என்றுவிட்டு நடந்தார்.

இவர் கேட்டுக்குப் போனபோது பாலு வந்திருந்தான்.

“ஏண்டா இவ்வளவு லேட்டு?”

“ஆபீஸ்ல பெர்மிஷன் தரணும்னா மூக்கால அழறாங்க மாமா! பேக்கை வச்சிட்டு வந்துடறேன்.”

“சீக்கிரம் வா! செக்ரட்டரி இப்போ வந்துடுவார்.”

பாலு ஆபீஸ் ரூமில் பேக்கை வைத்துவிட்டு வந்தான்.

“நீ சின்ன கேட்டுல போய் நின்னுக்கோ! மெம்பர்ஸ் பாஸ், சீசன் டிக்கட்டை மட்டும் அந்த வழியா அனுப்பு. டிக்கெட் வந்தா மெயின் கேட்டு வழியா வரச்சொல்லு.”

பாலு சபாவின் கடைக்கோடியிலிருந்த சிறிய கேட் வாசலில் போய் நின்றுகொண்டான். பாலு பக்கத்துவீட்டுப் பையன். கொஞ்சம் இசைக்கிறுக்கு. அது போதாதா? வாலண்டியர் சர்வீஸுக்கு அழைத்து வந்துவிட்டார். அதே சமயம், முரளி வியர்க்க விறுவிறுக்க சைக்கிளில் வந்து இறங்கினான்.

“மாமா! நமஸ்காரம்.”

“வாடா! சைக்கிளை கேண்டீன் பக்கமாக் கொண்டுபோய் நிறுத்து. நேத்தே சுப்ரமணியம் வாலண்டியர்ஸ் சைக்கிளை எல்லாம் ஏன் உள்ளே கொண்டு வர்றீங்கன்னு சத்தம் போட்டான். அவன் கண்ணுல படாமப் போ! அப்பிடியே வி.ஐ.பி. என்ட்ரன்ஸ்ல நின்னுக்கோ! ஃபர்ஸ்ட் நாலு ரோவுல சீசன் டிக்கட் வாங்கினவன் யாரும் உக்காராமப் பாத்துக்கோ!இன்னிக்கி சாட்டர்டே. நிறைய வி.ஐ.பி.ஸ் வருவாங்க.”

முரளி வேகவேகமாக சைக்கிளை உருட்டிக்கொண்டு சபாவின் பின்னால் ஓடினான். அவன் ஒரு எல்.ஐ.சி. ஏஜெண்ட். வாலண்டியர் சர்வீஸ் பார்க்கிறானோ இல்லையோ, இந்த சீசன் முடிவதற்குள் பத்து பாலிஸியாவது பிடித்துவிடுவான். கூட்டம் வர ஆரம்பித்திருந்தது.

இன்னும் ஒரு மணி நேரத்துக்கு இந்த டென்ஷன் இருக்கும். கச்சேரி ஆரம்பித்து அரைமணி நேரத்துக்குப் பிறகு எல்லாம் ஓய்ந்துவிடும். கார்த்திகேயன் மெயின் கேட்டின் இரு கதவுகளையும் மூடினார். ஒரு கதவை மட்டும் லேசாகத் திறந்து வைத்துவிட்டு அங்கேயே நின்றுகொண்டார்.

வாட்ச்மேன் வடிவேலு ஒரு பெரிய கூடையோடு அரங்கிலிருந்து வெளியே வந்தார். வேட்டியை மடித்துக்கட்டியிருந்தார். போட்டிருந்த பனியன் கக்கத்தில் கிழிந்திருந்தது. வடிவேலுக்கு நாற்பத்தைந்து வயது என்று யாராலும் சொல்ல முடியாது. கறுத்த, மினுமினுப்பான, திடகாத்திரமான கிராமத்து தேகம்.

“என்னா வடிவேலு இவ்வளவு நேரம் உள்ளயா இருந்தே?”

“அங்...வேற எங்க இருப்பாங்களாம்? பேருதான் வாட்ச்மேனு. எம்மாம் குப்பை பாரு. அத்தனையும் பெருக்கி அள்றதுக்குள்ள தாவு தீந்து போயிடுது. கேட்ல நிக்கறதைத் தவுர எல்லா வேலையும் பாத்தாச்சு. கக்கூஸ் ஒண்டிதான் கழுவல. உள்ள குப்பை போடக்கூடாதுன்னு ஒரு போர்டுல எழுதி வையேன் சாமி!”

“போர்டுதானே? வச்சுடலாம்...வச்சுடலாம்.”

“நானும் சொல்லிகினுதான் கீரேன். நீயும் தலையைத் தலையை ஆட்டிகினுதான்கீரே. எங்க எழுதப்போறே?...” முணுமுணுத்தபடி கூடையோடு கேட்டை அகலமாகத் திறந்து வெளியே போனார் வடிவேலு. கார்த்திகேயன் கேட்டை மறுபடியும் ஒருக்களித்ததுபோல சாத்தி வைத்தார்.

எதையும் வெளிப்படையாகப் பேசுவது கிராமத்துக்கேயான குணம். வடிவேலு செக்ரட்டரியிடம்கூட இப்படித்தான் பேசுவார். உழைப்பை முழுதாக நம்புகிறவர்கள் யாருக்கும், எதற்கும் அஞ்சுவதில்லை. ஆனால், இந்தக் காலத்தில் உழைப்பு மட்டும் போதுமா என்ன? வடிவேலுவும் என்னதான் செய்வார்? மதுராந்தகத்துக்குப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம்தான் அவருக்குப் பூர்வீகம். பக்கா விவசாயி. பஞ்சமும் விலைவாசியும் பிள்ளைகளும் விரட்டியடிக்க, யாரோ ஓர் உறவினர் தயவில் சபாவுக்கு வாட்ச்மேனாக வந்து சேர்ந்திருந்தார். வேலைக்கு அசராத தேகம். பிறகென்ன? செக்ரட்டரியின் காரைத் துடைப்பதிலிருந்து, சபா மெயின்டனன்ஸ் வரைக்கும் வடிவேலுதான்.

‘நம்மால் ஏன் வடிவேலுவைப் போல இருக்க முடியவில்லை? வீட்டு உரிமையாளரிலிருந்து கேண்டீன் மாமி வரைக்கும் ஏன் இப்படி எல்லோரிடமும் கூனிக் குறுகி நிற்க வேண்டும்?' அவருக்குப் புரியவில்லை. புரிந்தாலும் மாற்றிக்கொள்கிற வயதா இது?

அதற்குள் நன்கு வியர்த்துவிட்டிருந்தது. கார்த்திகேயன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து கர்சீப்பை எடுத்து முகத்தை அழுத்தமாகத் துடைத்துக்கொண்டார். வெளியே கார் ஹாரன் சத்தம் கேட்டது. கார்த்திகேயன் அவசர அவசரமாக கேட்டின் இரு கதவுகளையும் விரியத் திறந்தார். கார் ‘சரட்'டென்று உள்ளே வந்து வளைந்து நின்றது. செக்ரட்டரி கார்க் கதவைத் திறந்து இறங்கினார். கார்த்திகேயனைப் பார்த்துச் சிரித்தார்.

“நமஸ்காரம் அண்ணா!”

“என்ன கார்த்திகேயன்! கச்சேரிக்காரா எல்லாம் வந்துட்டாளா?”

“இன்னும் வரலைண்ணா!”

“என்னதிது? மணி அஞ்சாகப் போறது...அஞ்சரை மணிக் கச்சேரிக்கு இன்னுமா வரலை?” என்றபடியே ஆபீஸ் ரூமை நோக்கி நடந்தார் செக்ரட்டரி. டிரைவர் பேக்கைத் தூக்கிக்கொண்டு பின்னால் போக, கார்த்திகேயன் கேட்டை சாத்தினார். டிக்கெட் வாங்கிக் கொண்டு இரு பெண்கள் உள்ளே வர, டிக்கெட்டை லேசாகக் கிழித்து, “ரெண்டாவது டோர்ல போங்க!” என்று வழி காட்டினார்.

கேட் வாசலில் ஒரு காரும் இரண்டு ஆட்டோக்களும் வந்து நின்றன. காரிலிருந்து வெற்றிலைச் சாறைக் கீழே துப்பியபடி பாடகர் ரங்காச்சாரியும் தம்புரா போடும் பெண்ணும் இறங்கினார்கள். இரண்டு ஆட்டோவிலிருந்தும் பக்க வாத்தியக்காரர்கள் மூட்டை முடிச்சுகளுடன் இறங்கினார்கள்.

“நமஸ்காரம்.”

“கார்த்திகேயன் சாரா? நமஸ்காரம். போன டிசம்பர் சீசன்ல பாத்தது. சௌக்கியம்தானே? செக்ரட்டரி வந்துட்டாரா?”

“வந்துட்டார். உங்களை விசாரிச்சார். சீக்கிரம் போங்கோ!”

“நீங்கள்லாம் ஸ்டேஜுக்குப் போங்கோ. தோ வந்துடறேன்.” பக்க வாத்தியக்காரர்களிடம் சொல்லிவிட்டு ரங்காச்சாரி ஆபீஸ் ரூமை நோக்கி வேகமாகப் போனார். மெயின் கேட்டில் வருகிற கூட்டத்தைவிட, சின்ன கேட் வழியாக வரும் கூட்டம் அதிகமாக இருந்தது. மெம்பர்ஸ் பாஸ். பாலு, அட்டையில் பஞ்ச் பண்ணுவதற்குள் பொறுமை இழந்துகொண்டிருந்தது கூட்டம்.

“பாலு! மெயின் கேட் பக்கம் கொஞ்சம் பேரை அனுப்பு” என்று குரல் கொடுத்தார் கார்த்திகேயன். அரங்கத்துக்குள் ஒலித்த மைக்கில் எலெக்ட்ரீஷியன் டேனியல் ‘செக்! செக்! ஒன், டூ, த்ரீ...' சொல்லிக்கொண்டிருந்தான்.

கார்த்திகேயனுக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. சீசன் ஆரம்பித்து நான்கு நாட்கள் ஆகின்றன. சனிக்கிழமை மாலையில் நடக்கும் இந்தக் கச்சேரிக்கே கூட்டம் குறைவாகத்தான் வரும் போல இருக்கிறது. அரங்கம் முக்கால்வாசியாவது நிரம்புமா என்பது சந்தேகம். கேட் கலெக்ஷன் குறைவாகத்தான் இருக்கும்.

இப்போதெல்லாம் எந்த சபாக்காரர்களும் கேட் கலெக்ஷனை மட்டும் நம்பி கச்சேரிகளை நடத்துவதில்லை. ஸ்பான்சர்களால் சூழப்பட்டிருக்கிறது உலகம். மேடையின் பின்னால் இருக்கும் பேனரிலிருந்து, டிக்கெட் வரைக்கும் விளம்பரம் தருவதற்கு டூத்பேஸ்ட் கம்பெனிக்காரர்களும் ஊதுபத்தி உற்பத்தியாளர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் கேட் கலெக்ஷன் முக்கியம். ஒவ்வொரு நாளும் கைநிறையப் புரள்கிற காசைப் பார்க்கிற சந்தோஷம் சபாவுக்கு முக்கியம். அது இன்று நடக்காதுபோல இருக்கிறது. இந்த லட்சணத்தில் கச்சேரி மிகத் தாமதமாக வேறு ஆரம்பித்திருக்கிறது.

இத்தனை யோசனைகளுக்கு மத்தியிலும் கார்த்திகேயனுக்கு, ரங்காச்சாரி கச்சேரியை எப்படி ஆரம்பிக்கப் போகிறார் என்பதிலேயே கவனம் இருந்தது. வழக்கமான கச்சேரிகளுக்கே உரித்தான ‘ஹம்சத்வனி'யிலோ, ‘நாட்டை' ராகத்திலோ ஆரம்பிக்கிற வழக்கம் ரங்காச்சாரிக்கு இல்லை. அவர் தனி ரகம். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும். ‘முதல் பத்து நிமிட படத்தை மிஸ் பண்ணாதீர்கள்' என்று சில சினிமாப் படங்களுக்குச் சொல்வார்களே, அதுபோல ரங்காச்சாரி கச்சேரியில் முதல் கீர்த்தனை ரொம்ப முக்கியம். அதற்காகவே முதல் ஆளாக வருகிறவர்கள் இருக்கிறார்கள்.

ஸ்பீக்கர் வழியே தம்புராவின் ஒலி மெல்ல மெல்லக் காற்றில் மிதந்து வந்தது. ரங்காச்சாரியின் அரசாங்கம் ஆரம்பித்துவிட்டது.

“ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ...” பாடலின் முதல் வரி வந்ததுமே, கார்த்திகேயனின் மனம் கணக்குப் போட்டது. ‘மாயமாளவகௌளை ராகம். முத்துத்தாண்டவர் கீர்த்தனை.' வாய்ப் பாட்டுக்கு மட்டுமல்ல. வயலின், வீணைக் கச்சேரியாக இருந்தாலும்கூட ‘என்ன ராகம், யாருடைய கீர்த்தனை?' இப்படி மனம் கணக்குப்போட ஆரம்பித்துவிடுகிறது.

ரங்காச்சாரி அசகாய சூரர். மாயமாளவகௌளை ராகத்தில் கச்சேரி தொடங்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பார்வையாளர்களை நோக்கி வில்லை வளைத்திருந்தார் ரங்காச்சாரி. இது முதல் அம்பு. மிகச் சரியாகத் தைக்கிற அம்பு. அவ்வளவுதான். எல்லோரும் அவருடைய குரலுக்குக் கட்டுப்பட்டு அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இனிமேல், மிருதங்கத்துக்கான தனி ஆவர்த்தனத்தின்போதுதான் கூட்டம் கேண்டீன் பக்கம் நகரும்.

கார்த்திகேயன் பதினைந்து வருடங்களாக இந்த சபாவுக்கு வாலண்டியர் சர்வீஸுக்கு வருகிறார். அதற்குக் காரணம், சக ஊழியர் பார்த்தசாரதி. இவருடைய இசை ஆர்வத்தைப் பார்த்துவிட்டு, “வாலண்டியரா இருங்களேன். ஏதோ சில்லறை கிடைக்கும். காதுகுளிரக் கச்சேரியும் கேட்கலாம்” என்று அவர் சொன்னபோது இவரால் ‘சரி' என்றுதான் சொல்ல முடிந்தது.

ஆனால், ஒரு நாள், ஒரு கச்சேரியைக்கூட முழுதாக உட்கார்ந்து, தாளம்போட்டு ரசிக்க முடிந்ததில்லை. காதில் பாட்டு விழுகிறதே அது போதாதா? இல்லை. காரணம் அது இல்லை. கேண்டீனில் கொடுக்கிற கிச்சடி, வடை, காஃபியும், வாலண்டியர் சர்வீஸுக்குக் கிடைக்கிற முப்பது, நாற்பது ரூபாய்க் கூலியும்கூடத் தேவையாகத்தான் இருக்கிறது. “சந்துரு! இன்னிக்கி பஸ்ல போயிடேன். அப்பா சபாவுக்கு போறார். வண்டி எடுத்துட்டுப் போகட்டுமே!” என்று சுசீலா சொல்லும்போது, தலையை ஆட்டிவிட்டு மகன் போவதுகூட இந்த ‘வேலை'யின் பொருட்டுத்தானே! கார்த்திகேயனுக்கு சிரிப்பு வந்தது.

மூன்று மகள்களைக் கரையேற்றி, ஒரு பையனைப் படிக்க வைத்து வேலை வாங்கிக் கொடுப்பதற்காக எவ்வளவு இழக்கவேண்டியிருக்கிறது. பிடித்த பாடகரின் கேஸட்டுகளை வாங்கி, ஏகாந்தமாக உட்கார்ந்து, டேப்பில் போட்டு, காதாரக் கேட்பதற்குக்கூட சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. வாழ்க்கை விரட்ட விரட்ட சதா ஓடிக்கொண்டிருந்தார் கார்த்திகேயன். வேலை, வீடு, சிக்கனம் என்று இருந்ததால்தான் கடனில்லாமல் வாழ்க்கையை ஓட்ட முடிந்திருக்கிறது.

அரங்கத்துக்குள்ளிருந்து ஒருவர் காதில் செல்ஃபோனை வைத்தபடி வெளியே வந்தார்.

“சார்! கொஞ்சம் தள்ளிப் போய்ப் பேசுங்க!”

அவர் தலையை ஆட்டிவிட்டு, கேட்டுக்கு வெளியே நின்று சத்தமாகப் பேச ஆரம்பித்தார். அதே நேரம் அடுத்த கீர்த்தனையை ஆரம்பித்திருந்தார் ரங்காச்சாரி.

“சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்...” கிட்டத்தட்ட மிரண்டே போனார் கார்த்திகேயன். ஊரில் கச்சேரி செய்கிறவர்கள் எல்லாம் பாரதி பாடல்களை துக்கடாவுக்கு என்று ஒதுக்கியிருக்க, இந்த மனுஷன் இரண்டாவது கீர்த்தனையிலேயே பாரதியைக் கொண்டுவந்துவிட்டாரே!

வெளியே செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவர், உள்ளே வந்தார். “இது காபி ராகம்தானே?”

“இல்ல சார். கீரவாணி.”

“ஆமாமா.” அவர் அரங்கத்துக்குள் போனார். ஆபீஸ் வாசலில் நின்று சுப்ரமணியம் கத்தினான். “கார்த்திகேயன்! செக்ரட்டரிக்கு காஃபி சொல்லுங்கோ!”

கார்த்திகேயன் “பாலு! கேட்டை மூடிட்டு ஒரு காஃபி வாங்கிட்டு வாடா!” என்று கத்தினார். பாலு சின்ன கேட்டை மூடிவிட்டு கேண்டீன் பக்கம் ஓடினான். டபரா டம்ளரில் காஃபி வாங்கி, ஒரு தட்டில் வைத்து பவ்யமாக செக்ரட்டரியிடம் கொடுத்துவிட்டு வந்தான்.

“கேண்டீனுக்குப் போய்ட்டு வந்துடு. முரளியையும் கூட்டிட்டுப் போ! டிபன் சாப்டுட்டு நீ உள்ள போய் கச்சேரியைக் கவனி. முரளி கேட்ல நிக்கட்டும்.”

“சரி மாமா!” பாலு அரங்கத்துக்குள் நுழைந்தான். அவன் முரளியை அழைத்துக்கொண்டு பின் பக்கமாக கேண்டீனுக்குப் போய்விடுவான். மெயின் கேட்டில் ஒரு மடிசார் மாமி, “இன்னிக்கி ரொம்ப லேட்டாயிடுத்து” என்றபடி, ஹேண்ட் பேக்கிலி இருந்து மெம்பர்ஷிப் கார்டை எடுத்து நீட்டினார்.

“பரவாயில்ல. பஞ்ச் பண்ணல்லாம் வேண்டாம். உள்ளே போங்கோ!” என்றார் கார்த்திகேயன். மாமி மிக மெதுவாக எட்டு வைத்து உள்ளே போனார்.

உள்ளே ரங்காச்சாரியின் குரல் உருகிக்கொண்டிருந்தது. ‘கல்யாண வசந்தம்' ராகத்தில் தியாகராஜரின் ‘நாதலோலுடை...'யை எடுத்து, குழந்தையைத் தூக்கி, பவுடர் போட்டு, பொட்டு வைத்துக் கொஞ்சுவது போலக் கொஞ்சிக்கொண்டிருந்தார் ரங்காச்சாரி. உடனே, கதவைத் திறந்து உள்ளே போய் உட்கார்ந்து தாளம் போடவேண்டும் போல இருந்தது கார்த்திகேயனுக்கு.

ஆபீஸ் ரூமிலிருந்து வேகவேகமாக சுப்ரமணியம் வெளியே வந்தான். இது, வழக்கமாக சுப்ரமணியம் டாய்லெட்டுக்குப் போய் சிகரெட் பிடித்துவிட்டு வருகிற நேரம். கார்த்திகேயன் கேட்டுக்கு வெளியே பார்வையை ஓட்டினார். ஒரு ஷேர் ஆட்டோ ‘தடதட'த்தபடி போனது.

“கார்த்திகேயன்!...” சுப்ரமணியத்தின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

“பசங்க யாரும் இல்லையா?”

“கேண்டீனுக்குப் போயிருக்காங்க.”

“பரவால்ல. கவுண்ண்டரைக் க்ளோஸ் பண்ணிட்டேன். பக்கத்துக் கடைக்குப் போய் ரெண்டு ஃபில்டர் வில்ஸ் சிகரெட் வாங்கிட்டுப் பின்னாடி வந்துடுங்க.” பத்து ரூபாய் நோட்டை அவர் கையில் திணித்துவிட்டு, ‘விறுவிறு'வென்று கேண்டீன் பக்கம் போனான் சுப்ரமணியம்.

‘பொளேர்' என்று யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது கார்த்திகேயனுக்கு. ஆபீஸ் வாசலில் செக்ரட்டரி நின்றுகொண்டிருந்தார்.

‘அவர் நிற்பதால்தான் சுப்ரமணியம் என்னை சிகரெட் வாங்கி வரச் சொன்னானோ! இதுதான் வாலண்டியர் சர்வீஸா? இதற்குத்தானா இத்தனை வருடங்களாக இங்கே வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன்?' வெளியே நடந்தபோது கால்கள் ரொம்பவும் வளைந்த மாதிரி இருந்தது.

“சட்டுபுட்டுன்னு வரமாட்டீங்க? அசைஞ்சு அசைஞ்சு நடந்து வர்றீங்களே? சரியான ஆளுய்யா.” என்றபடி அவர் கொடுத்த சிகரெட்டையும் சில்லறையையும் வாங்கிக்கொண்டு டாய்லெட் பக்கம் போனான் சுப்ரமணியம்.

உள்ளே ‘குறிஞ்சி' ராகத்தில் அமைந்த ‘முத்துகாரே யசோதா'வை ஒரு கல்யாண ஆல்பத்தை ஆர்வத்தோடு புரட்டும் புதுமணத் தம்பதி போலப் புரட்டிக் கொண்டிருந்தார் ரங்காச்சாரி. அன்னமாச்சார்யாவே அருகே வந்து நின்று, காதுக்குள் பாடுவதுபோல இருந்தது கார்த்திகேயனுக்கு.

அரங்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் எழுந்து கேண்டீன் பக்கம் வர ஆரம்பித்திருந்தது. கேட்டில் முரளி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். கார்த்திகேயன், ‘வா!வா!' என்று கூப்பிட்ட கேண்டீனை சட்டை செய்யாமல், அரங்கத்துக்குள் நுழைந்தார். ஹாலின் நடு மையத்தில், வசதியான இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்தார்.

“முரளீதர கோபாலா! முகுந்தா ஸ்ரீ வைகுந்தா!...” ‘மாண்டு' ராகம். பெரியசாமி தூரன் எழுதிய கீர்த்தனை. அவருடைய கைகள் தொடையில் தாளம்போட ஆரம்பித்தன.

அந்தக் கீர்த்தனை முடிந்ததும், ‘ராகம், தானம், பல்லவி'க்கு சங்கராபரணத்தை எடுத்திருந்தார் ரங்காச்சாரி. அரங்கத்தில் அவரும் ரங்காச்சாரியும் மட்டுமே இருப்பதுபோல இருந்தது கார்த்திகேயனுக்கு. அப்படியே கசிந்து, நெக்குருகிப் போய் இசையில் தன்னைக் கரைத்துக்கொண்டிருந்தார் அவர்.

ரங்காச்சாரி ‘நானொரு விளையாட்டு பொம்மையா?' பாடும்போது, முரளி பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்.

“மாமா! இங்கயா உக்காந்திருக்கீங்க? எங்கல்லாம் தேடினோம் தெரியுமா?”

அவர் அதைக் கவனிக்காமல், “பாட்டைக் கேளு. என்ன ராகம் தெரியுமா? நவரஸ கானடா. பாபநாசம் சிவன் எழுதினது. மனுஷர் என்னமாப் பாடறார் பார்!”

“சுப்ரமணியம் பேமெண்ட் வாங்கக் கூப்பிடறார் மாமா.”

“நீயே கையெழுத்துப் போட்டு வாங்கிடு. பாலுக்குக் காசைக் குடுத்து வீட்டுக்கு அனுப்பு.”

“நீங்க எங்கன்னு கேட்டா என்ன சொல்லட்டும்?”

“கச்சேரி கேட்டுண்டிருக்கேன். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லு.”

0

(கல்கி தீபாவளி மலர்- 2008-ல் வெளியான என் சிறுகதை)

Monday, December 8, 2008

இறுதி ஆட்டம்

நகரத் தெருக்களில்
விளையாடுவது
அத்தனை சுலபமாயில்லை
சிறுவர்களுக்கு.

பெற்றவர்களின் அடிவயிறை
கதிகலங்கச் செய்தபடிதான்
வீதியில் இறங்குகிறார்கள்.

பிரேக்கை மறந்துவிட்ட
வாகனங்களின் உறுமல் சத்தம்
போதும் அவர்களுக்கு
ஒதுங்கி நிற்க.

கடந்துபோகும் பாதசாரிகளின்
வசைச் சொற்களை
மென்று விழுங்குகின்றன
அவர்களுடைய நமட்டுச் சிரிப்பும்
சகிக்கப் பழகிய மௌனமும்.

மனிதர்கள் மீதும்
காம்பவுண்டுச் சுவர் தாண்டியும்
சாக்கடைக் கழிவிலும்
பந்துவிழும் கணங்களில்தான்
பதறிப் போகிறார்கள்.

மொட்டைமாடியில்
பட்டம்விடும் காற்றுக்காலம் தவிர
நிரந்தர மைதானம் ஆகிப்போனது தெரு.

நகரில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள்
சில சிறுவர்களுக்கு வெகுதூரத்தில் இருக்கின்றன.
பல சிறுவர்களுக்குப் பூட்டியே கிடக்கின்றன.

தெருவில் விளையாடும்
நகரச் சிறுவர்கள்
பரிதாபத்துக்குரியவர்கள்
அவர்களைப் பழிக்காதீர்கள்!

அவர்களிடம் மீதமிருக்கும்
விளையாட்டு
‘கிரிக்கெட்’ மட்டும்தான்.

Friday, September 19, 2008

பழைய காலண்டரில் இரு தினங்கள் - பாலு சத்யா

தினம் - 1

யாசகம் கேட்பதற்கு சற்றும் குறைந்ததில்லை, வேலை கேட்டு பரிந்துரைக்காக ஒருவர் முன் நிற்கிற தருணங்கள். ஒவ்வொரு கணமும், உலகின் ஏதோ ஒரு மூலையில் அப்படியான ஒரு நிகழ்வு நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முன்னால் அப்படி ஏன் நிற்க வேண்டும் என்பது இன்றைக்கும் விளங்கிக்கொள்ள முடியாத சோகம்.

சென்னை சி.ஐ.டி. நகரில் இருந்தது ஜெகதீசன் சார் வீடு. அவரைப் பார்த்தால் நிச்சயம் வேலை கிடைக்கும் என்று கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தார். காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு பெரிய மனிதர் வீட்டைவிட்டுக் கிளம்பியிருக்கமாட்டார் என்கிற நம்பிக்கையில் அவர் வீட்டுக்குப் போனேன்.கேட்டில் அழைப்புமணி இல்லை. அது உட்புற வாசல் நிலைப்படியருகே இருந்தது. கேட்டுக்கும் உட்புற வாசலுக்கும் நடுவில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

நான் இரண்டு மூன்று முறை “சார்! சார்!” என்று குரல் கொடுத்துப் பார்த்தேன். பதிலில்லை.

நாய் சங்கிலியில் கட்டப்பட்டிருப்பதை மறுபடியும் ஒருமுறை உறுதி செய்துகொண்டு, கேட்டைத் திறந்து உள்ளே போனேன். அதுவரை பேசாமல் படுத்துக்கிடந்த நாய் பயங்கரமாகக் குரைத்தது. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஒரு அம்மாள் வெளியே வந்தார். நாற்பதைக் கடந்துவிட்ட வயதைக் குறைத்துக் காட்ட, மிகவும் பிரயாசைப்படுபவர் என்பது பார்த்தாலே தெரிந்தது.

“யாருப்பா?” விரோதியைப் பார்ப்பது போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி.

“சாரைப் பாக்கணும். நான் தாம்பரத்துலருந்து வரேன். ஒரு வேலை விஷயமா...”

“அவரு வெளியில போயிருக்காரு. திரும்பி வர்றதுக்கு ஒம்பது மணிக்கு மேல ஆவும்...”

சொல்லிவிட்டு என் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அந்தப் பெண்மணி உள்ளே போய்விட்டார்.

நான் திகைத்துப் போனேன். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? அல்லது மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களா? இப்படி நடந்துகொள்ள அந்தப் பெண்ணுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? ஒரு வேளை நகரம் குறித்துத் தொன்று தொட்டு இருந்து வரும் பிம்பம், மனிதர்கள் குறித்தான பயம் இப்படி வெளிப்படுகிறதா?

எவ்வளவு நேரமானாலும் ஜெகதீசன் சாரைப் பார்த்துவிடுவது என்ற முடிவோடு வெளியில் வந்து காத்திருந்தேன். பசித்தது. அவர் வருவதற்குள் ஒரு டீயாவது குடித்துவிடலாம் என்று பக்கத்திலிருந்த டீக்கடைக்குப் போனேன். ஒரு டீயும் வடையும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்தேன்.

வீடு அமைதியாக இருந்தது. நாய் பழைய இடத்தில் படுத்துக்கிடந்தது. நான் சுளீரென்று விழுந்த காலை வெயிலைப் பொருட்படுத்தாமல் காத்திருந்தேன்.

மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. ஜெகதீசன் சார் வரவில்லை. ஒன்பதே முக்கால் வரைக்கும் வரவில்லை.

‘அவர் வந்திருப்பாரோ!' இந்த எண்ணம் தோன்றியதும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதற்கும் சாத்தியம் இருந்தது. ஒருவேளை நான் டீ குடிக்கப் போயிருந்த நேரத்தில் அவர் வந்திருக்கலாம்.

கார்? அவரை இறக்கிவிட்டுவிட்டு வேறு வேலையாகப் போயிருக்கலாம். எனக்குத் தவிப்பு அதிகமானது. ஒரு முடிவோடு கேட்டைத் திறந்தேன். சங்கிலியிலிருந்து நாயை அவிழ்த்துவிட்டிருந்ததை நான் அதுவரை கவனிக்கவில்லை. என் குரல்வளையைக் கடிப்பது போல் பாய்ந்து வந்தது. குரைத்தபடி, முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி என் மார்பு மீது வைத்தது. ‘உர்ர்...' என்று உறுமியது. என்னால் அலறக்கூட முடியவில்லை.

அந்த அம்மாள் வெளியே வந்தார்.

“ஏம்ப்பா! உனக்கு எத்தனை தடவை சொல்றது? அறிவு வேணாம்? நாய் இருக்குல்ல. இப்பிடி சடார்னு உள்ளே நுழையுறியே? போப்பா. அவரு இல்ல...”

அந்த அம்மாள் நாயைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். நான் தலை குனிந்தபடி வெளியே வந்தேன். அந்த அம்மாள்தான் நாயை அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும் என்று நினைக்கும்போதே உடம்பு நடுங்கியது.

0

தினம் - 2

சென்னை, வாழ்வின் குரூரப் பக்கங்களை எனக்குப் புரட்டிப் போட்ட வருடம் அது. ஜெகதீசன் சார் வீட்டுக்குப் போய்விட்டு வந்த பிறகு ஒடிந்து போயிருந்தேன். அடுத்து என்ன என்கிற கேள்வி சதா ஒலித்துக்கொண்டிருந்தது. என்ன செய்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாமல் திரிந்தேன். இலக்கில்லாமல் சுற்றிவிட்டு ஒரு கோயிலில் உட்கார்ந்திருந்தபோதுதான் உத்திரகுமாருக்கு ஃபோன் செய்யலாம் என்று தோன்றியது.

உத்திரா கேரளாவில் இருக்கும் அடிமாலியில் அப்போது இருந்தார். எல்லாவற்றையும் அவரிடம் கொட்டினேன். ஆறுதலாகப் பேசிவிட்டு அவர்தான் அந்த யோசனையைக் கூறினார்.

“மெட்ராஸை விட்டுட்டு வெளியில எங்கயாவது கொஞ்ச நாள் போய்ட்டு வாயேன்.”

எனக்கும் எங்கேயாவது போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், எங்கே போவது? அவரே யோசனையும் சொன்னார்.

“ஒண்ணு பண்ணு. திருவண்ணாமலையில என் நண்பர்கள் சில பேரு இருக்காங்க. நாளான்னிக்கி கலை நிகழ்ச்சி மாதிரி ஒண்ணு நடத்தறாங்க. விடிய விடிய நடக்கும். போய்ட்டு வா. மனசுக்கு ஆறுதலா இருக்கும்” என்று சொல்லி, நண்பர்களின் பெயரையும் முகவரியையும் கொடுத்தார்.

நான் திருவண்ணாமலையில், பஸ்ஸிலிருந்து இறங்கியபோது இரவு இரண்டு மணி. உத்திரா சொல்லியிருந்த ‘பல்லவன் ஆர்ட்ஸ்' பூட்டிக் கிடந்தது.

‘இனி என்ன செய்வது?'

நான் திக்குத் தெரியாமல் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த ஆட்டோ ஸ்டேண்டிலிருந்து ஒரு டிரைவர் இறங்கி வந்தார்.

“பல்லவன் ஆர்ட்ஸுக்கு வந்தீங்களா?”

“ஆமா.”

“அடடா! எல்லாரும் இப்பத்தான் போனாங்க. அட்ரஸ் தெரியுமா?”

“தெரியாது.”

“சரி. வாங்க!”

எங்கே கூப்பிடுகிறார், ஆட்டோவில் போக எவ்வளவு கேட்பார் என்று எதையும் யோசிக்காமல், அவர் பின்னால் போனேன். ஆட்டோ வளைந்து வளைந்து ஊரைத் தாண்டிப் போனது. எனக்கு பயமாக இருந்தது. இவர் எங்கே போகிறார்? வழியில் நிறுத்திக் கத்தியைக் காட்டினால் என்னிடம் கொடுப்பதற்குக்கூட ஒன்றுமில்லையே.

இருட்டைக் கிழித்துப் பார்க்க முயற்சித்து, தோற்றுப் போனது ஆட்டோவிப்ன் முன் விளக்கு வெளிச்சம். ஒரு வழியாக ஆட்டோ நின்றது. அது ஒரு சிறிய வீடு. ஆட்டோ டிரைவர் இறங்கி, அந்த வீட்டுக் கதவைத் தட்டினார்.

கன்னங்கரேலென்று இருட்டு நிறத்தில் ஒரு மனிதர் வெளியே வந்தார். அடர்த்தியான தாடி வேறு. கைலியை இறுக்கிக்கொண்டு, “யாரு?” என்று கேட்டார்.

“உங்களைப் பாக்கத்தான் வந்திருக்காரு. வரட்டா?” ஆட்டோ டிரைவர் காசுகூட வாங்காமல் திரும்ப, அந்த மனிதர் சொன்னார்.

“காலையில கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போப்பா. வேலையிருக்கு.”

“சரி.”

ஆட்டோ கிளம்பிப் போனது.

அவர் சிரித்த முகமாக என் பக்கம் திரும்பினார்.

“சொல்லுங்க.”

“உத்திரா அனுப்பினாரு.”

அவ்வளவுதான். அதற்குப் பிறகு அவர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. உள்ளே அழைத்துப் போனார்.

“சாப்பிட்டாச்சா?” என்று கேட்டார்.

நான் தலையசைத்தேன். ஒரு கட்டிலைக் காண்பித்தார். போர்வையும் தலையணையையும் கொண்டுவந்து கட்டிலில் போட்டார். ஒரு செம்பில் தண்ணீர் கொண்டுவந்து தலை மாட்டுக்கருகே இருந்த திண்டில் வைத்தார். டேபிள் ஃபேனின் காற்று நன்கு மேலே விழும்படி திருப்பி வைத்தார்.

“நல்லா தூங்குங்க. காலையில பேசிக்கலாம்.”

அவர் கட்டிலுக்கருகே தரையில் படுத்தார். உடனே தூங்கிப் போனார். அடுத்த நாள் காலையில்தான் அவருடைய பெயர்கூட எனக்குத் தெரியும்.

இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? அல்லது இப்படித்தான் மனிதர்கள் இருப்பார்களா?

ஜூன் 2008ல் ஆனந்தவிகடனில் வெளியான என்னுடைய சிறுகதை.

வணக்கம்

அனுபவங்களும் சிறுகதைகளும் அணிவகுக்க இருக்கின்றன தோழர்களே. காத்திருங்கள்.

அன்புடன்

பாலு சத்யா