Friday, February 27, 2009
நூல் அறிமுகம்
எதிர்பாராமல் பெய்த மழை
தமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை மூன்றிலிருந்து எட்டாம் வகுப்புப் படிக்கிற காலத்துக்குள் எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை ‘எதிர்பாராமல் பெய்த மழை’ என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சுகானாவும் சிறுமிதான். திருவண்ணாமலை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார். ஆனால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே இந்நூலை மொழிபெயர்த்துவிட்டார் சுகானா.
குழந்தைகள் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகத்தில் ஓவியங்கள் இல்லாமலா? இதிலும் ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் வரைந்தவர் பிரபல ஓவியர் இல்லை. இரண்டாம் வகுப்புப் படிக்கும் வம்சி என்கிற சிறுவன்.
ஆச்சரியங்களுக்குக் குறைவில்லாத இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கும் சுகானாவின் அம்மா கே.வி. ஜெயஸ்ரீயும் அப்பா உத்திரகுமாரனும் மொழிபெயர்ப்பாளர்கள்.
சரி! சுகானாவுக்கு மலையாள மொழி எப்படித் தெரியும்? ஜெயஸ்ரீ சொல்கிறார்: ‘சுகானா அஞ்சாவது வரைக்கும் கேரளாவுலதான் படிச்சா. அப்போ நாங்க அடிமாலியில இருந்தோம். ஒரு நாள் என் கணவர் உத்திரா இரண்டு மலையாளப் புத்தகங்கள் வாங்கிட்டு வந்தார். அதுல ஒண்ணு ‘மறையும் தீரம்.’ ரெண்டு புத்தகத்தையுமே சுகானா படிச்சா. ஒரு நாள் அம்மா இந்தப் புத்தகத்தை மொழி பெயர்க்கறேம்மான்னு சொன்னா. சரி முயற்சி பண்ணுன்னு விட்டுட்டேன். ஒரே வாரத்துல எல்லாக் கதைகளையும் அழகா மொழிபெயர்த்துட்டா.’
‘என் சகோதரி ஷைலஜாவோட மகன்தான் வம்சி. அப்போ அவன் ரெண்டாவது படிச்சுக்கிட்டு இருந்தான். ஒரு நாள் சுகானாகிட்ட ‘அக்கா! உன் கதைக்கு நான் படம் போடவா’ன்னு கேட்டான். அவளும் சரின்னு சொன்னா. ஒரு படம் போட்டதுமே எல்லாக் கதைகளுக்கும் அவன் ஓவியம் வரையறதுதான் சரியா இருக்கும்னு தோணிச்சு. அவனையே வரையச் சொல்லி வீட்டுல இருக்கற எல்லாரும் சொன்னோம். அழகா வரைஞ்சுட்டான்.’
‘பொதுவாவே வாசிப்பும் எழுத்துமா இருக்கற குடும்பம் எங்க குடும்பம். என் சகோதரியின் கணவர் பவா செல்லத்துரை ஒரு எழுத்தாளர். அவரைப் பார்க்க பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவாங்க. அதுனால எழுத்துங்கறது எப்பவுமே புழங்கிக்கிட்டு இருக்கற ஒண்ணா எங்க வீட்ல ஆயிடுச்சு. நானும் என் சகோதரி ஷைலஜாவும் அப்பப்போ எதையாவது மலையாளத்துலருந்து தமிழ்ல மொழிபெயர்த்துக்கிட்டு இருப்போம். சில சமயங்கள்ல ஒரு வார்த்தைக்கு என்ன தமிழ்வார்த்தைன்னு தெரியாம தடுமாறிக்கிட்டு இருப்போம். அப்போல்லாம் சுகானா என்னம்மான்னு கேப்பா. நாங்க அந்த வார்த்தையைச் சொன்னதும் போற போக்குல சரியான தமிழ் வார்த்தையைச் சொல்லிட்டுப் போயிடுவா.’
உற்சாகத்தோடு பேசுகிறார் ஜெயஸ்ரீ. அடுத்து என்ன செய்யப் போகிறார் சுகானா. ‘அம்மா எனக்கு உலகின் சிறந்த சிறுகதைகள்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச ‘சின்ட்ரல்லா’ மாதிரியான கதைகள்தான். அதை எப்படித் தமிழ்ல புதுசாச் சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லாக் கதைகளையும் பண்ணாம, பதினைந்து கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணலாம்ங்கிற யோசனையும் இருக்கு.’ சந்தோஷம் கண்களில் மின்னச் சொல்கிறார் சுகானா.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் கிருஷி இப்படிச் சொல்கிறார்: ‘எப்பொழுது பார்த்தாலும் பெரியவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம்! பேச்சுகளால் மண்டிக்கிடக்கிறது வீடும் வெளியும். குழந்தைகள் உலகைத் தொலைத்துவிட்டோம். கல்வி சிறை ஆகிவிட்டது. இந்த இறுக்கத்தில் மின்னற்கொடிபோல் வந்திருக்கிறது ‘எதிர்பாராமல் பெய்த மழை.’
0
(பெண்ணே நீ - மாத இதழில் வெளியானது)
Subscribe to:
Posts (Atom)