அவள்
கிளிகளைக் கூட்டமாய்ப் பார்த்து
வெகு நாளாகிறது.
அவை கதறியபடி
சீட்டுகளைப் பொறுக்கமட்டும்
வெளியே வருகின்றன.
கிளிகளுக்கு ஒரு கூண்டு
அவளுக்கு இரண்டு.
வீடு - அலுவலகம்.
வீடு பரவாயில்லை.
தெருவில் இறங்கினால்
மார்பகங்களை வெறிக்கும்
ஆண்களின் பார்வை -
பேருந்துப் பயணத்தில்
வியர்வைக் கசகசப்போடு
அசிங்கமான உரசல்-
இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசும்
வயதான சூப்பர்வைசரின் நாக்கு -
முகத்தைப் பார்க்காமல்
எங்கெங்கோ அலைபாயும்
மேலாளரின் கண்கள் -
இப்படி...
அவளைக் காமப்பண்டமாய்
உணரவைத்துக் குறுக வைக்கும்
அசிங்கத் தொந்தரவுகள்
அதிகம் இல்லை வீட்டில்.
எட்டுவீடுகள் கொண்ட
தொகுப்புக் குடியிருப்பில்
பொதுக் கழிவறையும்
பொதுக் குளியலறையும்
பெருந்தொல்லை அவளுக்கு.
காக்காய் குளியலைக்கூட
நிறுத்தி நிதானமாகச்
செய்ய முடியாது.
அலுவலகம் செல்லும்
அவசரத்திலும்
குளியலறைக் கதவுக்கு வெளியே
காத்திருக்கும் ஆண்களின்
எக்ஸ்ரே பார்வை
அவளை தகித்தபடிதான் இருக்கிறது.
கழிவறைக்கு வெளியேயிருந்து
‘சுசீலா! இன்னுமா முடியலை?’
குரல் கேட்கும்போதெல்லாம்
புழுவாய் உணர்வாள்.
ஒவ்வொரு நாளும்
ஆடை மாற்றும் தருணங்களில்
ப்ளஸ்டூ படிக்கும் தம்பியையும்
ஆஸ்துமா வந்த அப்பாவையும்
வெளியே அனுப்பி
கதவைச் சாத்தவேண்டியிருக்கிறது.
ஒற்றை அறைதான்
அவளையும் சேர்த்து
நான்குபேருக்கான முழுவீடு.
இரவில் - அடுத்த வீட்டுத்
தொலைக்காட்சிப் பெட்டியின்
இரைச்சலைத் தாங்கியபடி
சுவரோடு ஒட்டிக்கொண்டு
அவள் உறங்கும்போது
கனவில் வருபவர்கள்
ராஜகுமாரர்கள் அல்ல.
சுகமான ஆற்றுநீர்க்
குளியல் -
வேப்பம் பூக்கள்
உதிர்ந்து கிடக்க
சுற்றிலும் மரங்கள் படர்ந்த வீடு -
சுதந்தரமாய் சுற்றிவர
சின்னதாய் ஒரு
மாந்தோப்பு -
இனிய தோழிகள் -
கண்களை மட்டும்
நேருக்கு நேராய்ப்
பார்த்துப் பேசும்
கண்ணியமான ஆண்மக்கள் -
இவைதான் நித்திய கனவு
எப்போதும்.
அவள் ஒருத்தியில்லை
ஆயிரம் லட்சம் கோடியாய்
வசிக்கிறாள்
இந்திய நகரங்களில்.
0
Sunday, March 7, 2010
Subscribe to:
Posts (Atom)