Monday, June 27, 2011

நிழல்கள் கவிதைத் தொகுப்பு : ஒரு பார்வை
நான் விமர்சகன் அல்ல. ஆனால், எப்போதாவது, நான் வாசித்து, ரசித்த எந்தப் புத்தகத்தையாவது அறிமுகப்படுத்திவிடவேண்டும், அதை ஓரிருவராவது வாசித்துவிடவேண்டும் என்கிற மெனக்கிடல் எனக்கும் உண்டு. அந்த வகையில் அவ்வப்போது “பெண்ணே நீ” பத்திரிகையிலும், ‘அம்ருதா’ இதழிலும், “புத்தகம் பேசுது” மாத இதழிலும், என் ப்ளாக்கிலும் சில புத்தகங்களை அறிமுகம் செய்து வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு நூல்தான் “நிழல்கள்” என்கிற கவிதைப் புத்தகம். எழுதியவர் ஹரன் பிரசன்னா.

அவர் என் சக தோழர். என் அலுவலகத்தில் பணி புரிபவர். இதெல்லாம் இந்த நூலைக் குறித்த அறிமுகத்தை எழுதுவதற்குக் காரணமாகிவிடவில்லை. அவருடைய கவிதைகளை நானாகத்தான் கேட்டு வாங்கினேன். வாசித்துப் பார்த்தேன். நவீன கவிதைப் பரப்பில், மிகவும் கவனத்துக்குரிய ஒன்றாகவே அவர் கவிதைகள் எனக்குப்பட்டன. அதன் பொருட்டே இதை எழுத வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

இந்த இடத்தில் சில அரசியல்களையும் பேசவேண்டியதாக இருக்கிறது. எனக்கு மிகவும் அன்னி(ந்நி)யோன்யமான சில பத்திரிகை ஆசிரியர்களிடமும் உதவி ஆசிரியர்களிடமும் பொறுப்பாசிரியர்களிடமும் ஒரு கவிதைத் தொகுப்புக் குறித்தான விமர்சனத்தை நீங்கள் பிரசுரிப்பீர்களா என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் கவலைக்குரியது. ”ஜாலியா, அப்டேட்டா, பிரச்னை பீதியைக் கிளப்புற மாதிரி ஏதாவது எழுதுங்களேன். இது வேண்டாம், ப்ளீஸ்” என்றார்கள். நான் சிபாரிசு செய்து, ஓர் இலக்கியப் பத்திரிகையில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் மகாத்மா வாயே திறக்கவில்லை என்பது என் கஷ்ட காலம்.

ஆனால், அவை இங்கே முக்கியம் அல்ல. “நிழல்கள்” தொகுப்பில் நம்மைப் பரவசப்படுத்துகிற, யோசிக்க வைக்கிற, நெகிழச் செய்கிற, நம்மோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய பல அம்சங்கள் கவிதைகளாக விரிந்திருக்கின்றன.

”யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்” என்கிற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.

யாரோ ஒருவனின் சவ ஊர்வலம்
நான்கைந்து பேர்களுடன்
மெல்ல நகர்கிறது
அந்த நிமிடத்தைப் போல.


அந்த யாரோவுக்குத் தூவப்படும் மலர்களுள் சில
என் மீது விழ எனது ஆசாரம் விழித்துக்கொள்கிறது,
எவ்வளவு விலகிக்கொண்டும்
விலகவில்லை மலர்களின் வாச
னை

இன்னும் கவிதை மேலே மேலே போனாலும், அதைத் தாண்டி என்னால் போக முடியவில்லை. இதுதான் கவிதை. இந்த அனுபவம்தான் கவிதை. சவ ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் அந்த அனுபவம் இருக்கும். எனக்கும் இருக்கிறது. அனுபவங்கள் கவிதையாகிறபோது எப்போதுமே அதனுள் இருக்கும் நிஜம் நம்மை ஈர்க்கும். அந்த வகையில் இந்தக் கவிதை என்னை மிகவும் பாதித்துவிட்டது.

ஹரன் பிரசன்னா மிகச் சாதாரணமான ஆள் இல்லை. பழகிப் பார்த்தவர்களுக்கு அது தெரியும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எந்தக் கேள்வியாக இருந்தாலும் அதற்கு அவரிடம் ஒரு பதில் இருக்கும். குறிப்பாக, இலக்கியம், சினிமா, அரசியல். இவற்றையும் தாண்டி பேசுவதற்கு வேறு முக்கிய விஷயங்கள் இருக்கிறதா என்ன? அவரைப் பொறுத்தவரை எதுவும் பேசு(பாடு)பொருளுக்கு அப்பாற்பட்டதல்ல. விவாதப் பொருள் எதுவாக இருந்தாலும், ஒரு வலுவான வாதத்தை முன் வைக்கிற போது அமர்ந்த குரலில் சொல்லுவார். அவர் சொன்னால் யாராலும் மறுக்க முடியாது. கட்டைக் குரலில், அவர் பாடுகிற பழைய பாடலைக் கூட பார்வையாளனை பதில் பேசாமல் கேட்க வைக்கிற மாதிரியான திறமை அவருக்கு இருக்கிறது. அவர் பாடுகிறபோது, அந்தப் பாடலின் வரிகள் நம்மை அந்தப் பாடலுக்குள் இழுத்துப் போட்டுவிடும். இவையெல்லாம் பிரசன்னாவின் தனிப்பட்ட ஆளுமைகள். ஆனால், கவிதை அப்படி கிடையாது. முன் பின் முகம் அறியாத ஒரு வாசகன் வாசிக்கிறபோது, அதில் ஈர்ப்பிருந்தால் ஒழிய அதில் அவனால் ஒன்ற முடியாது. கன்னியாகுமரியில் இருந்து கடல் கடந்த தேசம் வரைக்கும் தமிழ் படிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், “ஹலோ! ஒரு நிமிடம்! இதை வாசித்துவிட்டு நகருங்கள்!” என்று உரிமையோடும் அதே சமயம் அதற்கான அத்தனை தகுதிகளோடும் “நிழல்கள்” தொகுப்பு மூலமாக அறைகூவல் விடுகிறார் பிரசன்னா.

கவிதை என்பது அனுபவம், மொழி ஆளுமை, ஒரு சங்கதி, ஓர் உணர்ச்சி, ரசனை... இப்படி ஏதோ ஒன்றை வாசகனுக்கு நுட்பமாக உணர்த்த முயல்கிற சங்கதி. இந்த இலக்கணம் மட்டுமே கவிதை என்று நான் சொல்லவில்லை. இவை நல்ல கவிதையின் சில முக்கியக் கூறுகள். கவிதை என்பது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் நடக்கிற ஓர் உரையாடல். அது ஒரு சங்கமம். அந்த வகையில் கவிஞர் எழுதிய கவிதையில் வாசகனுக்கும் பங்கு உண்டு. அது அப்படித்தான். கவிதையின் முழுமை இப்படித்தான் இருக்கும் என்று உணர்தலும், ஒரு கவிதையின் பூரணத்துவம் இது போலத்தான் அமையும் என்று முடிவு செய்தலும்... ஒரு தீவிர, சரியான வாசகனால் மட்டுமே முடிகிற காரியம். அப்படிப்பட்ட ஒரு தேர்ந்த வாசகர், தன் கவிதையில் இனம் கண்டுகொள்ளும் சரியான இடங்களை கவிஞரும் தெரிந்துவைத்திருப்பார். அதைச் சரியாகச் சுட்டிக் காட்டவும் செய்திருப்பார். அப்படிப் பார்க்கையில், இத் தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் பெரும்பாலானவை நம்மை நமக்கே அடையாளம் காட்டுபவை. அந்த வகையில் சிறப்புப் பெறுபவை.

எனக்கு முன்பு எழுந்துவிடுகிறது என் கடிகாரம்

ஓர் உண்மையைக்கூட கவிதையாகச் சொல்வதில் அர்த்தமிருக்கிறது என்பதை உணர்ந்திருப்பவர் ஹரன் பிரசன்னா.

‘சுயசரிதை எழுதுதல்’ என்னும் கவிதை.

நான் நினைத்தது போல்
எளிதாக எழுத இயலாமல் போன
அடித்து அடித்து
எழுதப்பட்ட
சுயசரிதைக்குள்
நான் அடைந்துகொண்டேன்
கடைசியில் ஒரு குறிப்புடன்,
இது வளைந்து நெளிந்து செல்லும்
நேரான பாதை.


இந்தக் கவிதையைப் படிக்கும்போது, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நான் படித்த காந்தியிலிருந்து மார்ட்டின் லூதர்கிங் வரைக்குமான மனிதர்களின் சுய சரிதை என் கண்ணுக்குள் வந்து வந்து போகிறது. சுய சரிதை குறித்தான என் பழைய மதிப்பீடுகள் முறிந்து போகின்றன.

கவிதை என்பது ஏதோ ஒன்றை உணர வைத்தல். அது, நாம் ஏற்கெனவே அறிந்த ஒன்றாக இருப்பின் அந்தக் கவிதை உயிர்ப்புடன் இருப்பதற்கான அர்த்தம் புரிந்துவிடும்.

மேடைக் கவிதைகளுக்கும் மனத்துக்குள் வாசித்து அதனோடு பயணம் செய்கிற கவிதைகளுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்திருப்போம். மேடையில் வாசிக்கப்படும் கவிதைகள் கவிதைகளே அல்ல, அவை அந்தக் கணத்துக்கான எக்ஸ்டஸியை கேட்கிறவர்களுக்கு உண்டாக்குபவை; ஒரு பட்டி மன்ற பேச்சாளனுக்கும் மேடையில் கவிதை முழங்குகிறவனுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிரசன்னாவின் கவிதைகள் மனத்தில் அசைபோட்டுப் போட்டு, நமக்குள் ஆழ்ந்து போகச் செய்பவை. உரத்த குரலில் வாசிக்கும்போது அவருடைய கவிதைகள் அவற்றுக்கான அர்த்தத்தை இழந்துபோகக்கூடிய அபாயமும் உண்டு.

உதாரணமாக, “உயிர்த்தெழும் மரம்” என்கிற கவிதை:

காலையில் கண்விழிக்கிறது மரம்
இரவின் மௌனத்திற்குப் பின்
பறவைகளின் கனவுக்குப் பின்
பூமியிறங்கும் பனியுடன்
அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்
பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது
பெருங்காற்றில் அசையும்போது
விலகும் தாளம், சுருதி பேதத்தை
அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்
வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது
முன்பனியில்
அல்லது பின்னோர் மழைநாளில்
உயிர்த்தெழுகிறது
குழந்தைக்கான உத்வேகத்துடன்
இத்தனையின் போதும்
எப்போதும் ஓய்வதில்லை
மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்
அதன் பேரமைதிக் கச்சேரி.


இந்தக் கவிதையை மேடையில் வாசித்தால், பார்வையாளனுக்கு என்ன உணர்வு ஏற்படும்? ஒருவேளை, அதீத கவன் ஈர்ப்புடன் கேட்டால்கூட, மௌனமாக வாசிக்கும்போது கிடைக்கிற பரவசத்தில் மிகக் குறைந்த சதவிகிதத்தைக்கூட இக்கவிதை ஒரு வாசகனுக்கு ஏற்படுத்தாது என்பது என் யூகம்.

இத்தொகுப்பில், பிரசன்னா எழுதிய கவிதைகள், மெல்ல மெல்ல ஒரு முழுமையையும் முதிர்ச்சியையும் அடைவதையும் காண முடிகிறது. ஆரம்ப எழுத்தில் இருந்து அவர் எந்த அளவுக்கு வளர்ந்துகொண்டே இருக்கிறார் என்பது புரிகிறது.

நிலையம் சேர்ந்தபின்
தேர்வந்த பாதையில்
சிதறிக் கிடக்கின்றன
தொலைந்த செருப்புகள்


என்கிற பிரசன்னாவின் கவிதை வரிகளைத் தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இது, நூலுக்கான விமர்சனம் இல்லை. நான் ரசித்த, மிகவும் ரசித்த, மனத்தில் பதிந்து போன பிரசன்னாவின் அத்தனை கவிதைகளையும் இங்கே கொட்டி விடுவது அத்தொகுப்புக்கு நான் செய்யும் நேர்மை அல்ல. எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கவிதைத் தொகுப்பு “நிழல்கள்.” அதுவும் ஹரன் பிரசன்னாவின் நிழலைப் போலவே அவரைத் தொடர்ந்து வருகின்றன அவருடைய கவிதைகள். “நிழல்களை” வாசிப்பது பிரன்னாவை வாசிப்பது போல என்று உறுதியாகச் சொல்லலாம்.

நூல்: நிழல்கள்
ஆசிரியர்: ஹரன் பிரசன்னா
வெளியீடு: தடம் வெளியீடு,
4/31 D, மூன்றாவது மெயின் ரோடு,
ராயலா நகர்,
ராமாபுரம்,
சென்னை - 89.
தொலைபேசி: 98842 79211.