Tuesday, January 17, 2012

எழுத்துக் கிறுக்கு!

காலம் தவறித்தான் இப்போதெல்லாம் மழை பெய்கிறது. மார்கழி, தை மாதங்களில், குளிர்காலத்தில். வீட்டில் இருந்து கிளம்பும்போதே ஆரம்பித்திருந்தது. வேறு வழியில்லை. நான் ரமேஷ் குமார் சாரைப் பார்த்துத்தான் ஆகவேண்டும். சுசீலா கொடுத்த குடையில் இரண்டு கம்பிகள் ஒடிந்திருந்தன. ஆனாலும், அதை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தேன். குளிரக் குளிர அடித்த சாரல் என் தோளில் விழுந்தாலும் எனக்கு உறைக்கவேயில்லை.

விடிந்தால் பொங்கல் பண்டிகை. சார், கணிசமான தொகை ஒன்றை இன்றைக்குத் தருவதாகச் சொல்லியிருந்தார். அதைக்கொண்டுதான் வினோதினிக்கும் சுசீலாவுக்கும் எனக்கும் புத்தம்புது உடைகள் வாங்கவேண்டும். கரும்பையும் பொங்கலையும் இனிக்க இனிக்கச் சுவைக்கவேண்டும். ‘காணும் பொங்கல்’ தினத்தில் முடிந்தால் குடும்பத்தோடு எங்காவது வெளியே சென்று வரவேண்டும். குறைந்தபட்சம் உயிரியல் பூங்காவுக்காவது போய்வரலாம். வினோதினி, கரடியைப் பார்த்ததே இல்லை. தாம்பரம் சானடோரியத்திலிருந்து, வடபழனி பஸ்ஸில் ஏறினேன்.

து நடந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும்கூட என்னால் மறக்க முடியாத சம்பவம் அது. என்னத்தையாவது எழுதி, எதையாவது சாதித்துவிட மாட்டோமா என்கிற உத்வேகம் எனக்குள் கனன்றுகொண்டிருந்த காலம் அது.

மதுரைக்குப் பக்கத்தில் அரைமணி நேரம் பயணம் செய்தால் வரக்கூடிய ஊரைச் சேர்ந்தவன் நான். கால் மணி நேரத்தில் மொத்த ஊரையும் சுற்றி வந்துவிடலாம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற மனிதர்கள் மொத்தபேரும் எனக்கு அத்துப்படி. அவர்களுக்கு மிக நெருங்கிய, வெளியூரில் வசிக்கும் உறவினர்களின் முகங்கள்கூட எனக்குப் பரிச்சயம். அப்படிப்பட்ட ஊரைவிட்டுவிட்டு, சென்னையில் தஞ்சம் புகுந்த ஒருவன்!

எனக்கு ஆசை. எழுதுகிற ஆசை. மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதே, விக்கிரமாதித்யன் கதைகள் முழுத் தொகுப்பும் படித்தவன். கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பாலகுமாரன்... வளர வளர சா. கந்தசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கந்தர்வன்... என்று பட்டியல் நீண்டு, பெயர் பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய அத்தனை புத்தகங்களையும் லைப்ரரியில் தேடித் தேடி வாசித்தவன். என்னமோ எழுதுகிறவனுக்குத்தான் இரண்டு கொம்புகள் முளைத்து இருக்கிற மாதிரியான பிரமை என்னைப் பீடித்திருந்தது.

அப்பாவின் பேச்சைக் கேட்காமல் சென்னை வந்தேன். லோல்பட்டேன். இரண்டு பத்திரிகைகளில் ஃப்ரீலேன்ஸ் நிருபர். அதில் கிடைக்கிற காசைக்கொண்டு முழுதாக ஒரு நாள்கூட சாப்பிட முடியாது. ஆனாலும், எனக்கு எழுத்துப் பிடித்திருந்தது. ஒரு கட்டுரைக்குக் கீழே, அல்லது ஒரு பேட்டிக்குக்கீழே என் பெயர் சிறியதாக வெளி வரும் பக்கங்கள் எனக்கு உற்சாகம் அளிப்பவையாக இருந்தன.

ஏச்சு, பேச்சுகளுக்கிடையில் சொந்த அக்கா வீட்டைவிடுத்து, பெரும்பாலும் நண்பரின் வீட்டில் தங்குவதே வழக்கமாகிப் போனது. நண்பர் ரவி பெருங்களத்தூரில் இருந்தார். அவர் வீடு என்று சொல்வது தவறு. அது என் வீடு. ரவியின் அம்மா, என்னை அவருடைய மூன்றாவது பிள்ளையாகவே பார்த்துக்கொண்டார். ரவிக்கு ஒரு அண்ணன். கிருஷ்ணன். இப்படியெல்லாம்கூட உதாரணமாக ஒருவரால் வாழ முடியுமா என்பதைப் போல அத்தனை அன்பு, வாஞ்சை கிருஷ்ணனுக்கு என் மீது. அந்த வீட்டில், ஒரு மனிதன் சோம்பேறி ஆகக்கூடிய அளவுக்கு உபசரிப்பு, கவனிப்பு. ஆனாலும், நான் பத்திரிகை அலுவலகத்துக்கு ஓடினேன். ஏதேதோ பேட்டிகள் எடுத்தேன், கட்டுரைகள் கொடுத்தேன், சமயங்களில் என் கவிதைகளையும் சிறுகதைகளையும்கூடக் கொடுத்தேன். வேறு வழியில்லாமல், அவை பிரசுரமாயின.

எவ்வளவு ஓடினாலும், வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறதல்லவா! பாரதி அண்ணன் என்னை ஒருநாள் அழைத்தார். அன்போடு விசாரித்தார். ‘இப்பிடி இருந்தீங்கன்னா செத்துப் போயிடுவீங்க முரளி! பேசாம வேற வேலையப் பாருங்க! நாளைக்கு நான் ஒரு அட்ரஸ் குடுக்குறேன். உங்க படிப்பறிவுக்கு அங்க வேலை கிடைக்கும். நான் சொன்னேன்னு சொல்லுங்க!’

அவர் சொன்ன முகவரி, ஒரு பிரபல இயக்குநருடையது. முதலில் நான் மிரண்டுபோனேன். சினிமாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்? அல்லது ஒரு தீவிர வாசகனுக்கும் இயக்குநருக்கும்தான் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? ‘முடியும்’ என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார் அந்த இயக்குநர். அவர், என்னை பாரதி அண்ணன் அனுப்பிய ஆளாகப் பார்க்கவில்லை. ‘வாசிப்பு அனுபவம் ஏதாவது இருக்கா?’ என்று கேட்டார். சொன்னேன்.

‘சமீபத்துல என்ன படிச்சே?’

சொன்னேன். அன்றைக்கே அந்த இயக்குநர் என்னை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். அவருக்கு ஏற்கெனவே இருக்கும் செல்லப் பிள்ளைகளில் நானும் ஒருவனாகிப் போனேன். எவ்வளவு இன்னலிலும் மாதா மாதம் சம்பளம் கொடுக்க மட்டும் தயங்க மாட்டார். வேலை இல்லையென்றாலும், மதிய ஒரு நேர சாப்பாடாவது உறுதி அவர் அலுவலகத்தில். ஐம்பத்தாறு எபிசோடுகளைக்கொண்ட ஒரு டெலி சீரியல், ஒரு இந்தி டெலி ஃபிலிம், ஒரு முழு நேரத் தமிழ்ப்படம். அவரிடம் வேலை பார்த்தேன். அதற்கு மேல் என்னால் அங்கே தாக்குப் பிடிக்க முடியவில்லை. இடையில், சுசீலாவை காதல் திருமணம் செய்திருந்தேன்.

ர் இயக்குநரைவிட்டு வெளியே வருகிற உதவியாளர், தனியாக படம் செய்ய முயற்சிப்பதுதான் தமிழ் சினிமா உலகின் இயல்பு, மரபு. நான் அந்த வழக்கத்துக்கு மாறாக ஒரு பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். அது மாதப் பத்திரிகை. சொற்ப சம்பளம். மாதா மாதம் வாடகை கொடுக்கவேண்டும், மளிகைச் சாமான் வாங்கவேண்டும், கூடவே மருத்துவம், போக்குவரத்து, இன்னபிற... ஒரு மனிதனால் வேறு என்னதான் செய்ய முடியும்? வாழ்க்கை என்னை பயமுறுத்தியபடியே இருந்தது.

அப்போது வந்ததுதான் அந்த வாய்ப்பு. ரமேஷ் குமார் சாரைப் போய்ப் பார்க்கும்படி, பாலு அண்ணன் சொன்னார். அண்ணன் என் ஊர்க்காரர். என்மீது பிரியம் கொண்டவர். சமயங்களில், கடன் கொடுத்து உதவுபவர். பாலு அண்ணன், இரண்டு டி.வி. மெகா சீரியல்களுக்கு வசனம் வேறு எழுதிக்கொண்டிருந்தார். எனக்கு வானத்தில் மிதப்பது போல இருந்தது. ஒரு சீரியலுக்கு, ஒரு எபிசோடுக்குக் கிடைக்கும் வருமானம் என்னையும் என் குடும்பத்தையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டுபோய்விடுமே என்கிற நப்பாசை, ஒரு நாக்குப் பூச்சி போல அடி மனசில் ஊற ஆரம்பித்திருந்தது.

ரமேஷ் குமார் சார், அன்றைய தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு புள்ளி. கிட்டத்தட்ட நான்கு தினசரி சீரியல்களுக்கும், ஒரு வார சீரியலுக்கும் திரைக்கதை எழுதிக்கொண்டிருந்தார். அவர் கடைக்கண் பார்வை கிடைப்பதே பெரும் பாக்கியம். அவரைப் பார்த்தேன். அறிமுகப்படுத்திக்கொண்டவுடன் அன்பாகப் பேசினார். ஞாயிற்றுக் கிழமை புது சீரியலுக்கான டிஸ்கஷன் இருப்பதாகச் சொல்லி வரச் சொன்னார்.

டிஸ்கஷன். இதைப் போல தமிழ் சினிமாவில் பொய்யான வார்த்தை வேறு ஒன்று இருக்க முடியாது. பேருக்கு ஓர் ஒருவரிக் கதையை மட்டும் வைத்துக்கொண்டு, என்னத்தையோ பேசி, மற்றவர்களின் எண்ணங்களை, கருத்துகளை, கதையைத் திருடிப் போடுகிற லாகவம் அது. இதற்கு டி.வி. சீரியல்களும் விதிவிலக்கல்ல என்பது எனக்கு ரமேஷ் குமார் சார் ஆபீஸுக்குப் போன தினத்தில் புரிந்தது.

அவருடைய நான்கு நண்பர்கள் ஏற்கெனவே உட்கார்ந்திருந்தார்கள். அவர், என்னை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். எல்லோரும், நான் ஏன் அவ்வளவு பெரிய இயக்குநரிடம் உதவியாளராக இருந்துவிட்டு, இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தேன் என்று ஆச்சரியமாகப் பார்த்தார்கள். டிஸ்கஷன் ஆரம்பித்தது. ரமேஷ் குமார் சார், தன் லைனைச் சொன்னார்.

‘கோயம்பத்தூர் பக்கத்துல ரொம்ப பாரம்பரியமான ஒரு குடும்பம். அப்பா ஒரு கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல பெரிய போஸ்டிங்க்ல இருந்தவரு. இப்போ நரம்புக் கோளாறால நடக்க முடியாம வீட்டுல ஈசி சேரே கதின்னு கெடக்குறவரு. மூணு பொண்ணுங்க. ரெண்டு பசங்க. ரெண்டு பொண்ணு காலேஜ் முடிச்சுட்டு வீட்ல இருக்குதுங்க. ஒருத்தி ப்ளஸ்டூ படிக்கிறா. ஒரு பையன் செல்போன் கடை வச்சிருக்கான். இன்னொருத்தன் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கான். இந்த சூழ்நிலைல அப்பாவோட பங்காளி ஒருத்தன், அவங்க இருக்குற வீட்டுல தனக்கும் பங்கிருக்குன்னு கேஸ் போடுறான். ப்ளஸ்டூ படிக்கிற பொண்ணு, எப்பிடி தன்னோட சித்தப்பாவோட சண்டை போட்டு, வீட்டைக் காப்பாதுறாங்கறது கதை. கூடவே, டிராக்குல மத்தவங்களோட பிரச்னைகள், கதைகள் எல்லாம் வருது... எப்பிடி?’

எல்லோரும் கை தட்டாத குறையாக கதையை சிலாகித்தார்கள். நான் மட்டும் பேசாமல் இருந்தேன். ‘என்ன முரளி! எதுவுமே சொல்லாம இருக்கீங்க?’ என்று தூண்டினார் ரமேஷ் குமார்.

‘சார்... லைன் ஓ.கே.தான் சார். ஆனா, ஸ்கிரீன் ப்ளே பண்றதுக்கு இது பத்தாதே சார்... ஒவ்வொரு கேரக்டரோட டீடெயிலையும் பேசணுமில்ல?’

‘அதுக்குத்தானே இங்க உக்காந்திருக்கோம்?’ என்று காட்டமாகச் சொன்னார் உட்கார்ந்திருந்த ஒருவர்.

விவாதம் ஆரம்பித்தது. கதா பாத்திரங்களை அலசினார்கள். பேசினார்கள், பேசினார்கள், பேசினார்கள். இடையில் டீ குடித்தார்கள், சிகரெட் புகைத்தார்கள், மதிய உணவு சாப்பிட்டார்கள், ஸ்நாக்ஸ் கொறித்தார்கள், மாலை ஆனவுடன் எல்லோரும் ஒரு பாருக்குப் போய் குடித்தார்கள். எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை. நான் மட்டும் கதையை அசை போட்டபடி, அடுத்த நாள் காலையில் வருவதாக ரமேஷ் குமார் சாரிடம் சொல்லிவிட்டு, வீடு வந்து சேர்ந்தேன். ‘போன காரியம் என்ன ஆச்சு?’ என்கிற சுசீலாவின் கேள்விக்கு என்னால் தீர்க்கமாக பதில் சொல்ல முடியவில்லை.

இரவில் தூக்கம் பிடிக்கவில்லை. கதையையே அலசினேன். நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு, விளக்கைப் போட்டு, ஒரு பேப்பரில் எழுத ஆரம்பித்தேன். கதைப்படி, இளையபெண் எப்படியெல்லாம் பிரச்னைகளை எதிர்கொள்கிறாள், குடும்பத்தாருக்கு வரும் இன்னல்கள் என்னென்ன... எல்லாவற்றையும் குறித்தேன். முதல் பத்து எபிசோடுகளுக்கான திரைக்கதையையும் வடிவமைத்தேன். இரவு மூன்று மணிக்கு நிம்மதியாகப் படுத்து உறங்கினேன்.

டுத்த நாள் ரமேஷ் குமார் சாரின் அறைக்கு நான் போனபோது, இரண்டுபேர்தான் உட்கார்ந்திருந்தார்கள். மற்ற இருவரைக் காணவில்லை. எல்லோரும் சோர்வாக இருந்தார்கள். கதையை எப்படி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்கிற தயக்கத்தில் இருந்தார்கள் என்பது பார்த்தவுடனே புரிந்தது. நான் எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். பத்து எபிசோடுகளுக்கான திரைக்கதையையும் சொன்னேன். சார், ரொம்ப உற்சாகமாகிவிட்டார். என்னைத் தோளில் தட்டிக் கொடுத்தார். மதியம் உயர்தர உணவகத்தில் இருந்து எல்லோருக்கும் சாப்பாடு வரவழைத்தார். சாப்பிட்டோம்.

நான் கிளம்பும்போது, என்னைத் தனியாக அழைத்து இருநூறு ரூபாய் பணத்தை என் பாக்கெட்டில் உரிமையாக வைத்தார். ‘முரளி! நாளான்னிக்கி புரொட்யூஸர்கிட்டயும், சேனல்லயும் கதை சொல்லப் போறேன். எப்பிடியும் ஓ.கே. ஆயிடும். நீங்கதான் உதவித் திரைக்கதை. அவங்களுக்கு ரெகுலரா வசனம் எழுதுறது துரைன்னு ஒரு ஆளு. அவ்வளவு ஈசியா அந்த கம்பெனிலருந்து அவனைத் தூக்க முடியாது. ரெண்டு மாசம் பொறுத்துக்கோங்க. உங்களையே டயலாக் ரைட்டரா போட்டுடுறேன். அப்புறம் எபிசோடுக்கு இவ்வளவுன்னு ரேட் பேசிக்கலாம். அது வரைக்கும் மாசம் பத்தாயிரம் தர்றேன். மத்தபடி, போக்குவரத்து, இதர செலவுகளைப் பாத்துக்கலாம். என்கூட உதவியா இருங்க. என்ன?’

எனக்கு சந்தோஷமாக இருந்தது. டிஸ்கஷனில் நான் அடைந்த கடைசி சந்தோஷ தருணம் அதுதான்.

ரமேஷ் குமார் சாருடைய கதை ஓ.கே. ஆக ஒன்றரை மாதம் பிடித்தது. ஒப்பந்தம் எதுவும் தயாரிப்பு நிறுவனத்துடன் போடாமல், பணம் பெயராது. எனவே, அவரிடம் பணம் கேட்க எனக்கே கூச்சமாக இருந்தது. ஆனாலும் நிலைமை சரியாக இல்லை. இடையில் அவரிடமே ஐநூறு ரூபாய் கடன் வாங்குபடி ஆகிவிட்டது.

சீரியல் ஒப்பந்தம் ஆன பிறகு, சார் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸாகக் கொடுத்தார். இன்னும் இரண்டு மாதத்தில் சீரியல் ஆரம்பிக்க இருப்பதால், வேகமாக முதல் ஷெட்யூலுக்கான திரைக்கதையை எழுதவேண்டும் என்றார். சீன்களைச் சொன்னார். நான் குறித்துக்கொண்டேன். ‘ஏற்கெனவே ரெண்டு சீரியல் ஓடிக்கிட்டிருக்கு முரளி! அதுனால என்னால இதுல ஃபுல்லா கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. நீங்கதான் எல்லாத்தையும் பாத்துக்கணும். ஓ.கே.?’

நான் ‘சரி’ என்றேன். பத்து நாளைக்குள், முதல் ஷெட்யூலுக்கான முழுத் திரைக்கதையையும் எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன். கையோடு பிரித்துப் படித்த, ரமேஷ் குமார் சார் முகம் மகிழ்ச்சியில் பூரித்துக்கிடந்தது. அவ்வப்போது, ‘பலே’ சொன்னபடி செல்லமாக என் முதுகில் அடித்தார். கடைசியாக, ‘சின்னதா கொஞ்சம் கொஞ்சம் சேஞ்ச் பண்ணணும். நான் பாத்துக்கறேன். அடுத்த மாசம் ரெண்டாம் தேதி, புரொட்யூஸர் காண்ட்ராக்ட் போட்டு, அட்வான்ஸ் குடுத்துடுவாரு. நீங்க போன் பண்ணிட்டு வாங்க!’ என்றார்.

நான் கிளம்பும்போது எனக்கு தற்போது எந்த வேலையும் இல்லாத நிலையைச் சொன்னேன். பொங்கலுக்கு ஏதாவது பணம் வேண்டும் என்பதை நாசூக்காகத் தெரிவித்தேன்.

‘அவ்வளவுதானே! பொங்கலுக்கு முதல் நாள் ஈவினிங் வந்துடுங்க. நான் இல்லைன்னாலும், ரூம்ல யாராவது இருப்பாங்க. குடுத்துட்டுப் போயிடுறேன். வாங்கிக்கங்க! அப்புறம் கணக்குப் பாத்துக்கலாம்.’

வர் சொன்ன தினத்தில், நான் மழையில் பாதி நனைந்தபடி அவர் ஆபீஸுக்குப் போனபோது, பூட்டியிருந்தது. பதறிப் போனேன். அலுவலக எண்ணுக்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. அவர் செல்போன் ஸ்விட்ச்டு ஆஃப். நான் அவர் இருந்த கட்டடத்துக்கு எதிர்த் திசையில் எப்படியாவது அவர் வந்துவிடமாட்டாரா என்கிற ஆதங்கத்தில், ஒரு டீக்கடை வாசலில் ஆவலோடு காத்திருந்தேன்.

பக்கத்து வீட்டுக்கு போன் செய்து, சுசீலாவிடம் நான் வர கொஞ்சம் தாமதமாகும் என்று சொன்னேன். இடை இடையில், ரமேஷ் குமார் சாருடைய செல்போனுக்கு போன் செய்யவும் தவறவில்லை. ஒரே பதில். ‘சுவிட்ச்டு ஆஃப்.’ அன்றைக்கு பைத்தியம் பிடித்தது போலப் பெய்துகொண்டிருந்தது மழை. ஆழ்வார் திருநகரில், மழை பெய்தால், சாலைகளில் இவ்வளவு நீர் தேங்கும் என்பதே எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது.

நம்பிக்கை முழுவதுமாக அற்றுப் போன கணத்தில், இரவு ஒன்பதே கால் மணிக்கு ரமேஷ் குமார் சார் என் லைனுக்கு வந்தார். ‘என்னா முரளி! இப்பதான் பாத்தேன். உங்கட்டருந்து இவ்வளவு மிஸ்டு காலு...’ அவர் குரல் குழறியபடி இருந்தது.

‘சார்! உங்கட்ட பணம் கேட்டிருந்தேனே சார்... இன்னிக்கி வரச் சொன்னீங்களே... நாளைக்கு பொங்கல்...’

‘ஆமா இல்ல. சாரி, சாரி. ஒண்ணு பண்ணுங்க. நம்ம ஆபீஸ் வாசல்லயே நில்லுங்க. இன்னும் டென் மினிட்ஸ்ல நம்ம ஆள் ஒருத்தன் வந்து உங்களுக்கு ஒரு கவர் கொடுப்பான். ஹேப்பி பொங்கல்!’

அவர் போனை வைத்துவிட்டார். எனக்கு உற்சாகம் பிறந்தது. என்னவெல்லாம் வாங்கலாம், எப்படி பொங்கலைக் கொண்டாடலாம் என்கிற கனவில் மிதந்தபடி இருந்தேன்.

சரியாக பத்து நிமிடத்தில், சார் சொன்ன ஆள் பைக்கில், மழைக்கோட்டு அணிந்தபடி வந்தார். ஒரு கவரை நீட்டினார். நான் ஆவலோடு பிரித்துப் பார்த்தேன். ஒரே ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு.

‘இவ்வளவுதான் குடுத்தாரா?’

‘ஏன் பத்தாயிரம் ரூபா கேட்டிருந்தீங்களா? டவுட்டுன்னா நாளைக்கி சார்கிட்ட பேசிக்கங்க!’ அந்த மனிதர் நக்கலாகச் சொல்லிவிட்டு, பைக்கை ‘விருட்’டென்று எடுத்துக்கொண்டு போனார்.

எனக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. ‘வினோதினியால் காணும் பொங்கலன்று கரடியைப் பார்க்க முடியாது.’

*

(இந்த மாதம் “தீக்கதிர் பொங்கல் மலரில்” வெளியான சிறுகதை)