Monday, December 27, 2010

பசும்பொன் நினைவுகள் - 3



காந்தி மீனா அம்மையார், தேவரைப் பற்றி நிறையச் சொன்னார். பசும்பொன்னில் இருந்து கிளம்பியபோது, மனமெங்கும் முத்துராமலிங்க தேவர் நிறைந்திருந்தார். எவ்வளவோ படித்திருந்தாலும், நிறையபேர் சொன்னதைக் கேட்கக் கேட்க அவரைப் பற்றிய அற்புதமான ஒரு பிம்பம் உள்ளே பதிந்து போயிருந்தது.

மெயின் ரோடு வரைக்கும் நடந்து போகத்தான் நான் நினைத்தேன். வழியில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களோடு தேவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் கேட்கலாமே என்று ஆசை. சரியாக ஒரு ஷேர் ஆட்டோ வந்து நின்றது. வெங்கிடு, ‘அண்ணே! ரொம்பப் பசிக்குது. இதுல போயிடலாம்’ என்று சொன்னான். என்னால் மறுக்க முடியவில்லை.

கமுதி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்தோம். ‘ஏதாவது நல்ல ஓட்டலா சொல்லுங்க!’ என்று மாரியிடம் சொன்னேன்.

‘புரோட்டா சாப்பிடலாமா சார்?’ என்று மாரி கேட்டார். நான் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அந்த ஊரில் அதுதான் நன்றாக இருக்கும் போல.

‘இல்ல, இல்ல. நீங்க வேணும்னா சாப்பிடுங்க. நான் சைவம். சாப்பாடுதான் வேணும்’ என்று சொல்லிவிட்டு, வெங்கிடைப் பார்த்தேன்.

‘அண்ணே! நானும் நான்வெஜ் சாப்பிடமாட்டேன். புரட்டாசி மாசம்ல?’ என்றான்.

பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த சைவ ஓட்டலுக்கு அழைத்துப் போனார் மாரி. அதை ஓட்டல் என்று சொல்லக்கூடாது. கேண்டீன் என்றுகூடச் சொல்ல முடியுமா தெரியவில்லை.

வெளியே போர்டு மாட்டியிருந்தாலும், கூரை போட்ட சிறிய ஓட்டல். ஸ்கூல் டெஸ்க் போல நீளமாக ஒன்றை நடுவில் போட்டிருந்தார்கள். இருபுறமும் மர பெஞ்சுகள். சுவரோரத்தில் அதே போல இன்னொரு டெஸ்க், பெஞ்ச். மொத்தம் பதினைந்து பேர் ஒரே நேரத்தில் சாப்பிடலாம். நாங்கள் போனபோது ஆறு, பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மதியம் அங்கே சாப்பாடு மட்டும்தானாம். டிபன் இல்லை என்றார்கள்.

மூவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்தோம்.

கல்லாவில் இருந்தவர், ‘அவங்களுக்கு இலை போடுங்க!’ என்று கை காட்டினார். நகர ஓட்டல்களைப் போல அளவுச் சாப்பாடெல்லாம் கிடையாது. அன்லிமிடெட். ஆனால், என்னாலும் வெங்கிடாலும் சரியாகச் சாப்பிட முடியவில்லை. கிராமத்துக்கே உரித்தான இயல்பான சமையல். வாசனாதி வகையறா கொஞ்சமும் சேர்க்காத பதார்த்தங்கள்.

புளி, உப்பு, மிளகாய்த்தூள், போன்ற அடிப்படைப் பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு. சம்பந்தமில்லாமல், ‘இயற்கை உணவு’ என்கிற பெயரில், காசு பிடுங்கும் சென்னை உணவகம் ஒன்று என் நினைவுக்கு வந்தது. ஆயுர்வேத சிகிச்சைக்குப் போனவர்களுக்குத் தெரியும். அவர்கள் கொடுக்கும் உணவைத்தான் நாம் சாப்பிட முடியும். உப்போ, புளிப்போ அளவோடு சேர்த்திருப்பார்கள். அது போல இருந்தது சாப்பாடு.


நானும் வெங்கிடும் எழுந்தோம். மாரி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் கை கழுவும்போது கேட்டேன்: ‘என்னா தம்பி! புரோட்டாவே சாப்பிட்டிருக்கலாம் இல்ல?’

‘இல்லண்ணே. சாப்பாடு நல்லாத்தான் இருந்துச்சு. என்னாலதான் சாப்பிட முடியல’ என்றான். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். இதற்கு மேலும் மாரி சாரை காத்திருக்கச் சொல்வது சரியாகப்படவில்லை. அவர் நேர் எதிர்த் திசையில் இருக்கும் வேறு ஒரு கிராமத்துக்குச் செல்லவேண்டியவர். நன்றி சொல்லி அனுப்பி வைத்தோம்.

‘மதுரைக்கே போயிடலாமா தம்பி?’

‘எதுக்குண்ணே? வந்த வழியிலேயே போயிடலாம்’ எங்கேயோ பார்த்தபடி சொன்னான் வெங்கிடு.

ஒரு தனியார் பஸ் வந்து நின்றது. காத்திருந்தது போல அடித்துப் பிடித்து ஏறியது கூட்டம். இரண்டு மணி வெயில் சுட்டெரித்தது. நாங்கள் கடைசியாக ஏறினோம். பின் சீட் காலியாக இருந்தது. உட்காரப் போனபோது கண்டக்டர் தம்பி திரும்பிப் பார்த்தார். நிச்சயம் அவருக்கு வெங்கிடைவிட இரண்டு வயது குறைவாகத்தான் இருக்கும்.

‘எங்க சார் போகணும்?’

‘மானாமதுரை.’

‘பஸ் கெளம்புறப்போ ஏறுங்க.’

‘சீட்டு காலியாத்தானே இருக்கு?’ என்று கேட்டான் வெங்கிடு.

‘அங்... மதுரை வரைக்கும் லாங்கா... போறவுகளுக்கு சீட் வேணாமா. எறங்குங்க சார்.’

வெறுப்போடு இறங்கினோம். அந்த கண்டக்டர் டிக்கெட் போட்டுக்கொண்டிருந்தார். கீழே இறங்கி பஸ் ஸ்டாண்டில் இருந்த சிறிய ஓட்டல் வாசலில், புரோட்டா போடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு வேறு பஸ் இல்லை என்பது விசாரித்ததில் தெரிந்தது. ஓரமாக நின்றிருந்த டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

‘ஏன் சார்? சீட்டு காலியாத்தானே இருக்கு. அந்த கண்டக்டர் அப்பிடி வெரட்டுறாரே?’

‘அவன் லூஸு சார். அப்பிடித்தான் பேசுவான். கெளம்பறப்போ ஏறுங்க.’ இப்படிச் சொல்லிவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டார் டிரைவர்.

வெயில். வியர்வை. கசகசப்பு. நிழலுக்கும் பஸ் கூடாரத்துக்குள் ஒதுங்க முடியவில்லை. பெண்கள், குழந்தைகள், என்று குடும்பம் குடும்பமாக கிராமத்து மனிதர்கள்.

பக்கத்து ஊர்களுக்குச் செல்லும் டவுன்பஸ் உள்ளே நுழைந்தால், அதைப் பிடிக்க ஓடினார்கள். கொஞ்சம் இடம் காலியாவது போல இருந்தாலும் இன்னொரு கும்பல் அதைப் பிடித்துக்கொண்டது.

வரிசையாக பலகாரக் கடைகள் இருந்தன. ஜிலேபியை சின்னதாகச் சுடுகிற வழக்கம் அந்தப் பக்கத்தில் இல்லை போல. நல்ல அகலமான தட்டில் பெரியதாகச் சுற்றி, இரண்டடி உயரத்துக்கு அடுக்கி வைத்திருந்தார்கள். எல்லா கடைகளிலும் அப்படித்தான் இருந்தது.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தேன். ‘அதுவா? இனிப்பு சேவு!’ என்று சொன்னார். பிறகு, என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு நகர்ந்து போனார்.

ஒரு கிராமத்து மனிதர் ஐந்துகிலோ காராசேவு வாங்குவதைப் பார்த்தேன். என் பார்வையைப் புரிந்துகொண்டவனாக வெங்கிடு சொன்னான். ‘அண்ணே! வியாபாரம் செய்யறதுக்கா இருக்கும்ணே. கிராமத்துல கடை வச்சிருப்பாரு.’

அதற்கு அடுத்த கடையில் ஒருவர் ‘நாலு கிலோ இனிப்பு சேவு!’ என்று சொன்னது எங்கள் காதிலும் விழுந்தது. வெங்கிடு பதில் சொல்லவில்லை. அவன் கவலையோடு மதுரை பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். சீட்டுகள் நிரம்பியிருந்தன. மனிதர்கள் உள்ளே நடைபாதையில் நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.


நாங்கள் எதிர்பார்த்ததுதான் நடந்தது. பிதுங்கப் பிதுங்கக் கூட்டம். படிக்கட்டில் தொங்கிக்கொண்டுதான் போயாகவேண்டும். அடுத்த பஸ்சில் போகலாம் என்றால், அது எப்போது வரும் என்றும் தெரியாது. பஸ் கிளம்பியபோது தாவி ஏறினோம்.

மூச்சு விட முடியவில்லை. ‘ரூட் பஸ்’ என்று பெயர்தானே தவிர, ஒவ்வொரு ஊரிலும், ஊர் விலக்கிலும் நின்று நின்று சென்றது. நிறுத்தம் தோறும் கண்டக்டர் பின் வாசலில் இறங்கி, முன் வாசலுக்குப் போய் டிக்கெட் போடுவார். அல்லது, அங்கிருந்து இங்கு வருவார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாதவனாக கண்டக்டரிடம் கேட்டேன். ‘என்னாங்க! நிக்கிறதுக்கே இடத்தைக் காணோம். ஒவ்வொரு ஸ்டாப்லயும் ஆளுங்களை ஏத்திக்கிட்டே இருக்கீங்களே?’

அவர் முறைத்துப் பார்த்தார். ‘நீங்க என்னிக்கோ ஒரு நாளு வாறதுக்கே இப்பிடி அலுத்துக்குறீங்களே! நாங்க தெனோம் இப்பிடித்தான் போயாவணும். போலாம்... ரை!’

கமுதியில் இருந்து மானாமதுரைக்கு பயணம் நேரம், அதிகபட்சம் ஒரு மணி நேரம். நாங்கள் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆனது. நல்ல வேளையாக சிவகங்கைக்குப் போகிற பஸ் உடனே கிடைத்தது. சீட்டில் உட்கார்ந்ததும் வெங்கிடு எதுவும் பேசவில்லை. பேயறைந்தவன் போல இருந்தான். சார்ஜ் இல்லாத செல்போனை கையில் உருட்டிக்கொண்டிருந்தான்.

சிவகங்கையில் அரைமணி நேரம் காத்திருந்ததில், தஞ்சைக்குச் செல்வதற்கு நேரடி பஸ் கிடைத்தது. மின்னல் வீரனைப் போல் தாவி ஏறி, சீட்டைப் பிடித்தான் வெங்கிடு. மாலை ஐந்து மணிக்கு அப்படி ஒரு புழுக்கம். சட்டையைக் கழற்றி எறிந்துவிடலாமா என்று இருந்தது.

அந்த பசும்பொன் பயணத்தில் விதம்விதமான மனிதர்களைப் பார்த்த அனுபவம் கிடைத்தது. முன்னே பின்னே யார் என்று அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணிடம், மூச்சுவிடாமல் ‘சளசள’வென்று பேசியபடி வந்த ஒல்லி மனிதர். ஜுரம் தகிக்க, பேரக் குழந்தையை தூக்கி வந்த பாட்டி. யார் இடம் கொடுத்தாலும் பாட்டியின் தோளைவிட்டு இறங்காமல் அடம் பிடித்தது அந்தக் குழந்தை. சூழலுக்குக் கொஞ்சமும் பொருந்தாத குல்லாவும் முழங்காலைத் தாண்டும் ஜிப்பாவும் அணிந்து வந்த இஸ்லாமிய இளைஞர்கள் நான்குபேர். குசுகுசு பேச்சும், நமட்டுச் சிரிப்புமாக வந்த புதிதாகத் திருமணமான தம்பதி. ஏறி உட்கார்ந்ததில் இருந்து, இறங்குவரை பார்வையை அப்படி இப்படித் திருப்பாமல், பேப்பர் வரி விளம்பரத்தைக்கூட விடாமல் படித்த கண்ணாடிக்காரர். கண்டக்டருடன் சண்டைபோட்ட திருநங்கை... இப்படி நிறைய.

அந்த மனிதர்களை நிச்சயம் வெங்கிடுவும் மறந்திருக்கமாட்டான் என்றே தோன்றுகிறது.

திருப்பத்தூருக்கு அருகே வரும்போதே மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் தஞ்சாவூர் பெரிய பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கீழ வாசலுக்கு பஸ் பிடித்து வந்து சேர்ந்தபோது மணி பத்துக்கு மேல் இருக்கும். கடுமையான வேலை பார்த்து வந்ததுபோல அப்படி ஒரு சோர்வு. வெங்கிடுவுக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

‘என்னா தம்பி! டிரிப் எப்பிடி இருந்துச்சு?’

‘நல்லா இருந்துச்சுண்ணே!’

‘லட்ச ரூவா குடுத்தாகூட இப்பிடி ஒரு அனுபவம் கிடைக்காதுல்ல?’

வெங்கிடு என்னைப் பார்த்தான். முறைக்கிறானா, சிரிக்கிறானா என்று தெரியவில்லை. இந்தக் காலத்து இளவட்டங்கள் அப்படித்தான்.

Wednesday, December 22, 2010

பசும்பொன் நினைவுகள் - 2


தஞ்சாவூரில் இருந்து கமுதிக்கு நாங்கள் போன வழிதான் சிறந்தது என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பது திரும்பி ஊருக்கு வந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. நேராக மதுரைக்குப் போய், அங்கிருந்து கமுதிக்குப் போயிருக்கவேண்டும். பயணம் செய்யும் நேரம், டிக்கெட் கட்டணம் என்று எதை எதையோ யோசித்துத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்.

மானாமதுரை பஸ் ஸ்டாண்டில் ஏதோ வேலை நடந்துகொண்டிருந்தது. புதிதாக சிமெண்ட் போடப்பட்ட தரை. உள்ளே மனிதர்களும் பிராணிகளும் நுழைந்துவிடாதபடிக்கு வாசலில் கற்களையும், செடிகளையும் மறித்துப் போட்டு வழியை அடைத்திருந்தார்கள். அங்கிருந்து மதுரைக்குப் போகிறவர்களும், கமுதி, ராமநாதபுரம் போகிறவர்களும் சாலையின் இருபுறமும் எதிரெதிரே கும்பலாக நின்றுகொண்டிருந்தார்கள்.

மாரி போன் செய்தார். கமுதி பஸ் ஸ்டாண்டில் இருப்பதாகச் சொன்னார்.

‘வர்ற வழியிலதான் பசும்பொன் இருக்கு. அங்கேயே இறங்கிடுறீங்களா? நான் வந்துர்றேன்’ என்றவர், என்ன நினைத்தாரோ, ‘வேணாம். கமுதிக்கே வந்துடுங்க!’ என்று சொல்லிவிட்டார்.

‘அடுத்த பஸ்ஸுல வந்துர்றோம்.’

மதுரையிலிருந்து கமுதிக்குப் போகிற பஸ் ஒன்று வந்து நின்றது. வைக்கோலைப் போட்டு அமுக்குவது போல மக்கள் தங்களை அதில் திணித்துக்கொண்டிருந்தார்கள். ஓர் ஆள்கூட இறங்குவதாகத் தெரியவில்லை. ஏறுவதற்குக் கிட்டத்தட்ட ஏழெட்டு பேர் காத்திருந்தோம்.

நான் வெங்கிடைப் பார்த்தேன். ‘ஏறிடலாம்ணே! அடுத்த பஸ் வர்றதுக்கு அரைமணி நேரம் ஆகுமாம்.’

‘நிறையா எடம் இருக்கு. உள்ள வாங்கப்பு!’ என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் கண்டக்டர். இருவரும் ஏறினோம். கொஞ்சம் கொஞ்சமாக வழி ஏற்படுத்திக்கொண்டு, பஸ்ஸின் மத்திய பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒரு பெண்மணி நின்றுகொண்டிருந்தார். கறுப்பாக இருந்தாலும் களையாக இருந்த அந்தக் குழந்தை கண்ணை உருட்டி, உருட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. வெங்கிடு அதைப் பார்த்து சினேகமாக சிரிக்க, அது முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அது ஒரு தனியார் பஸ். அகலம் அதிகமில்லாதது. நடுவில் ஓர் ஆள் மட்டுமே நடந்து போக இருக்கிற நடைபாதையில் இரண்டு இரண்டு பேராக நெருக்கியடித்து நின்றுகொண்டிருந்தோம். நின்று பயணம் செய்வது பரவாயில்லை. முழுப் பாதத்தையும் ஊன்றக்கூட வழியில்லை. ஒரு கால், அல்லது இன்னொரு கால். அல்லது இரண்டு நுனிக் கால்கள். அதுதான் பிரச்னையாக இருந்தது. இரண்டு கையையும் மேலே தூக்கிக் கம்பியை இறுகப் பிடிக்கவேண்டியிருந்தது. பஸ், மேடும் பள்ளமுமான சாலையில் குலுங்கிக் குலுங்கி விரைந்துகொண்டிருந்தது.

பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில், நெரிசலையும் பெரிய மனிதர்கள் விடும் மூச்சுக் காற்றையும் தாங்க மாட்டாமல் குழந்தை கதற ஆரம்பித்தது. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்.

‘எங்கம்மா போகணும்?’

‘கமுதி.’

உட்கார்ந்திருப்பவர்களில் யாராவது அந்தக் குழந்தையை வாங்கி வைத்துக்கொள்ள மாட்டார்களா என்று எனக்கு இருந்தது. அவரவருக்கு அவரவர் கவலை. ஜெயம்ரவி நடித்த ஏதோ ஒரு படம் டி.வி.டி. திரையில் ஓடிக்கொண்டிருக்க, தலையை எக்கிப் பார்த்து மெய்மறந்து போயிருந்தார்கள். சிலருக்கு படம் பார்க்க முடியாமல், நின்று கொண்டிருப்பவர்களின் தலை மறைக்கிற சங்கடம்.

பார்த்திபனூர், அபிராமம் என வழியில் இருக்கும் எந்த ஊரிலும் ஜனம் இறங்கவில்லை. ஏறிக்கொண்டே இருந்தது.

நாங்கள் கமுதி வந்து சேர்ந்தபோது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. செல்போனில் தொடர்புகொண்டதும் அடையாளம் கண்டுகொண்டு கிட்டே வந்தார் மாரி. கொஞ்ச நேரம் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்.

அங்கிருந்து ஒரு ஷேர் ஆட்டோ பிடித்து பசும்பொன் கிளம்பினோம். வழியெல்லாம் மாரி தேவரைப் பற்றிப் பேசியபடி வந்தார்.

‘தேவரய்யா ஆரம்ப காலத்துல குதிரைலதான் இந்த வழியாப் போவாங்க. அதுக்கப்புறம் வில்வண்டி ஒண்ணு வச்சிருந்தாங்க. அதுல போவாங்க. இந்தா இருக்குல்ல இந்த மரம். இது மேல நின்னுக்கிட்டுத்தான் ரெண்டு மூணு பேரு தேவர் அய்யா தலை மேல கல்லைத் தூக்கிப் போடப் பாத்தாங்க. அய்யா நிமுந்து பாத்தாரு. ‘முருகா’ன்னு சொன்னாரு. அவ்வளவுதான். கல்லு அப்பிடியே அந்தரத்துல நின்னுடுச்சு...’ இப்படி நிறைய சொல்லிக்கொண்டே வந்தார் மாரி.

மெயின் ரோட்டில் இருந்து பசும்பொன்னுக்குத் திரும்புகிற இடத்தில் பிரம்மாண்டமான நுழைவு வாயில், அமர்க்களமாக வரவேற்றுக்கொண்டிருந்தது.

வாகனச் சந்தடி இல்லாமல் அமைதியாக இருந்தது கிராமம். இரண்டு ஆடுகளும், ஒரு மாடும் கடந்து போயின. ஊர்க் குளத்தில் நான்குபேர் குளித்துக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கினோம். தேவர் உறைவிடம் பூட்டியிருந்தது.

‘பக்கவாட்ல ஒரு வழி இருக்கு’ என்று சொல்லி அழைத்துப் போனார் மாரி. வருடா வருடம் தேவர் குருபூஜைக்கு வருகிறவர் என்று மாரியைப் பற்றி பாண்டியன் சொன்னது நினைவுக்கு வந்தது.

தேவர் உறங்கும் இடத்துக்குப் பின்னால் அவர் வாழ்ந்த வீடு. அதற்கு வலது பக்கம், அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் படத்தொகுப்பைக் கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அரங்கம் பூட்டியிருந்தது. முக்கியமான தினங்களில் மட்டும்தான் அது திறக்கப்படும் என்று சொன்னார்கள். பக்கவாட்டு வழிக்கு வெளியே ஒரு நூலகம். நூலக நேரம் முடிவடைந்திருந்ததால் அதுவும் பூட்டியிருந்தது.

நினைவுச் சின்னம் அப்படியே இருக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் வீட்டைச் சிதைத்துவிடாமல், கொஞ்சம் மெருகேற்றி அப்படியே வைத்திருக்கிறார்கள். வாசல் கதவும் பல நூற்றாண்டுகளாக அப்படியே இருந்தது.

அந்த வீட்டைக் கட்டியவர் பசும்பொன் தேவரின் தாத்தா ஆதி முத்துராமலிங்க தேவர். வாசலில் ஒரு கயிற்றுக் கட்டில். அதில் ஒரு பெரியவரும் ஒரு வயதான அம்மாளும் உட்கார்ந்திருந்தார்கள். அந்த அம்மாள் பெயர் காந்தி மீனா. தேவரின் மிக நெருங்கிய உறவினர். பல பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் நடுவே இந்த இடத்தைப் பராமரித்து வருபவர் என்பது பேசிப் பார்த்ததில் தெரிந்தது.

நாங்கள் மெதுவாக ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்தோம். ஒரு தேசியத் தலைவர், எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார் என்பதைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

வீடு ஒன்றும் மிக பிரம்மாண்டமானது அல்ல. காரைக்குடி பக்கத்து பழங்கால வீடுகளோடு ஒப்பிட்டால், அதில் பாதிகூட இருக்காது. நடுவே முற்றம். பக்கவாட்டில் பூஜை அறை. இன்னொரு அறை. பின்புறம் ஒரு அறை. பின்னால் போக முடியாமல் தடுப்புப் போட்டிருந்தார்கள்.

வீடு முழுக்க புகைப்படங்கள், பல்வேறு அமைப்பினர் தேவரைப் பாராட்டி எழுதிய பாராட்டுப் பத்திரங்கள்.. பிரேம் செய்து மாட்டப்பட்டிருந்தன.

நாங்கள் எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் பேசினோம். அவர்களுக்கெல்லாம் தேவர் என்பவர் தேசியத் தலைவர், மாமனிதர் என்பதையெல்லாம் தாண்டி தெய்வமாகவே இன்றைக்கும் தெரிகிறார்.

‘ஏதோ ஒரு தேர்தலு. பிரசாரத்துக்குப் போயிட்டு இங்ஙனதான் தேவர் அய்யா குதிரை மேல வந்து இறங்கினாரு. சும்மா ‘தகதக’ன்னு என்னா ஆகிருதி தெரியுமா? என் கண்ணுக்குள்ளேயே நிக்குது’ என்கிறார் ஒரு எண்பது வயதுப் பெரியவர்.

ஓர் இளைஞர் சொன்னார்: ‘தேவர் அய்யாவைப் புடிக்கிறதுக்கு போலீஸு வந்துது. வாசல்ல அய்யா நின்னுக்கிட்டிருக்காக. கிட்டப் போனா காணல. அந்தா அந்த மரத்தாண்ட சிரிச்சிக்கிட்டே நிக்காக. திடீர்னு எதுத்தாப்ல. கொஞ்ச நேரத்துல தேவர் அய்யா மாதிரியே ஏழெட்டு உருவங்க. துப்பாக்கிய தூக்கின போலீஸ்காரவுக மெரண்டு போயி ஓடிப் போயிட்டாக. இதை எங்கப்பா சொல்லிக்கிட்டே இருப்பாரு.’

பூஜை அறை பூட்டியிருந்தது. இரும்புக் கம்பிக்குப் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, மாரி சொன்னார். ‘தேவர் அய்யா எப்பவும் புலித் தோல் மேல உக்காந்துக்கிட்டுதான் பூஜை செய்வாங்க. இங்க இருக்குமே!’

புலித்தோல் இல்லை. ஒருவரிடம் கேட்டபோது சாவதானமாகச் சொன்னார். ‘யாராவது எடுத்துட்டுப் போயிருப்பாங்க. இல்ல, வேற எங்கயாவது இருக்கும்.’

- தொடரும்

Tuesday, December 21, 2010

பசும்பொன் நினைவுகள் - 1



தேவர் வாழ்க்கை எந்த அளவுக்கு சுவாரஸ்யமோ அதில் கொஞ்சம்கூட குறையாமல் இருந்தது அவர் வாழ்ந்த பசும்பொனுக்கு நான் போய் வந்த அனுபவம்.

தமிழில் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறுப் புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. அதோடு அவர் பேசிய உரைகள், எழுதிய கட்டுரைகள், அவர் குறித்த சர்ச்சைகள் எல்லாமே நூல் வடிவில் இருக்கின்றன, குறிப்பாக சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்திலும், கன்னிமாராவிலும்.

புத்தகம் எழுதுகிற அளவுக்கு போதும், போதும் என்கிற அளவுக்குத் தகவல்கள் கிடைத்துவிட்டாலும், ஒரு முறை பசும்பொன்னுக்குப் போய்வரவேண்டும் என்கிற ஆசை உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது. உறவினர் ஒருவர் வீட்டுத் திருமணத்தை முன்னிட்டு தஞ்சாவூர் போகவேண்டியிருந்தது. அப்படியே பசும்பொன்னுக்கும் ஒரு டிரிப் அடித்துவிடலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன்.

தஞ்சாவூரில் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு நான் மட்டும் கமுதிக்கும் பசும்பொன்னுக்கும் போய்வருவது என்று திட்டம். ஆனால், தனியாகப் போகக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பேச்சுத் துணைக்காவது ஒருவர் இருந்தால்தானே நன்றாக இருக்கும்?

வெங்கிடு என்கிற வெங்கடேஷ், மனைவி வழியில் சொந்தம். தஞ்சாவூரில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். வகையாக மாட்டினான். ‘தம்பி! காலைல கெளம்பிப் போய் சாயந்தரம் வந்துடலாம். கூட வாயேன்!’

‘கண்டிப்பா வர்றேண்ணே!’ என்று நம்பிக்கை தந்தான். தஞ்சையில் இருந்து கமுதிக்கு நேரடி பஸ் ஒன்றுதான் இருந்தது. அதுவும் ஒன்பது மணிக்கு மேல்தான் கிளம்பும் என்பதால், அது வசதிப் படாது என்று முடிவெடுத்தேன்.

மைத்துனர் நடராஜன், ‘சிவகங்கைக்கு நிறையா பஸ் இருக்கு. அங்கருந்து கமுதிக்குப் போய்விடலாம்’ என்று நம்பிக்கையாகச் சொன்னார்.

அதிகாலை நான்கரை மணிக்கு எழுந்து, ஐந்து மணிக்கு கீழ வாசல் பேருந்து நிறுத்தத்தில் நானும் வெங்கிடுவும் முதல் பஸ்ஸைப் பிடித்தோம், தஞ்சாவூர் பெரிய பஸ் ஸ்டாண்டுக்கு.

பஸ் ஸ்டாண்டில் சூடாக ஒரு டீயை அடித்துவிட்டு, உள்ளே போனோம். சிவகங்கைக்கு நேரடி பஸ் ஒன்பது மணிக்கு மேல்தான் என்றார்கள்.

‘திருப்பத்தூருக்குப் போயிடுங்க. அங்கருந்து சிவகங்கைக்கு நெறையா பஸ் இருக்கு’ என்றார் ஒரு கண்டக்டர். நான் வெங்கிடுவுடன் பேச்சுக் கொடுத்தேன். கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் என்று ரொம்ப நேரம் தயங்கிக் கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வரும்போது திருப்பத்தூர் வந்துவிட்டிருந்தது.

திருப்பத்தூரிலேயே காலை டிபனை முடித்துவிட்டு, அங்கிருந்து சிவஙகங்கை. இந்த இடத்தில் தெக்கத்தி சீமைக்காரர்களின் பரந்த மனசை சொல்லியே ஆகவேண்டும். கை கழுவிட்டு சாப்பிட உட்கார்ந்ததும், பெரிய சாப்பாட்டு இலையாகக் கொண்டு வந்து போடுகிறார்கள்.

‘இலைக்கும் சேத்து பில்லைப் போட்டுறப் போறாங்கண்ணே!’ என்று கிசுகிசுத்தான் வெங்கிடு.

பூரி ஆர்டர் செய்தோம். ஒரு செட் பூரிக்கு துக்கிணியூண்டு கிண்ணத்தில் உருளைக் கிழங்கைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். சப்ளை செய்பவர் இரண்டு பூரிகளை இலையில் போட்டுவிட்டு, வாளியில் கரண்டியைவிட்டு,(பெரிய சைஸ்) அள்ளி அள்ளி இலையில் பூரிக் கிழங்கைப் போட்டார். மேலும் இரண்டு பூரி சாப்பிடுகிற அளவுக்குக் கிழங்கு. காபி கேட்டால், மிகப் பெரிய டம்ளர் வட்டைக் கப் சகிதமாக வந்திறங்கியது. அபார ருசி. மிக மிகச் சாதாரணமான பில் தொகை.

அங்கேயும் ஒரு கண்டக்டர் சொன்னார். ‘கமுதிக்கெல்லாம் நேரடியா பஸ் இல்லைங்க. மானாமதுரை போயிடுங்க.’ வேறு வழி? அங்கிருந்து மானாமதுரை போனோம்.

மானாமதுரை பஸ் பிடித்தோம். என் அலுவலகத்தில் மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் பாண்டியன், தன் சகோதரர் மாரி என்பவரின் மொபைல் நம்பரைக் கொடுத்திருந்தார். அவர், கமுதியில் இருந்து எங்களை பசும்பொன்னுக்கு அழைத்துச் செல்வதாக ஏற்பாடு.

அரைமணி நேரத்துக்கு ஒரு முறை செல்போனில் அழைத்தபடி இருந்தார் மாரி.

‘எங்க இருக்கீங்க?’

‘இப்பத்தான் சிவகங்கைக்குப் போய்க்கிட்டு இருக்கோம்.’

‘எங்க வந்துக்கிட்டு இருக்கீங்க?’

‘மானாமதுரைகிட்ட வந்துட்டோம்.’

மானாமதுரை வரைக்கும்கூட அதிகம் பிரச்னை இல்லாமல் வந்து சேர்ந்துவிட்டோம். அங்கிருந்து கமுதிக்குப் போன அனுபவம் இருக்கிறதே அடடா! நான் மறந்தாலும் வெங்கிடு மறக்கமாட்டான்.

வெங்கிடு பரபரப்பான இளைஞன். தஞ்சாவூரிலேயே பைக்கில் 80 கிலோ மீட்டருக்குக் குறையாத வேகத்தில் பறப்பான் என்று கேள்வி. ஓர் இடத்தில் அவனை சும்மா உட்கார வைப்பதே பெரிய காரியம்.

செல்போனில் யார் யாருக்கோ மெசேஜ் அனுப்பியபடியும், ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடியும் வந்தான். வெளியேயும் சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றும் இல்லை.

சிவகங்கையை நெருங்கும்போதே கள்ளிச்செடிகளும் கருவேல முள்செடிகளுமாகத்தான் கண்ணுக்குத் தெரிந்தன. ஆங்காங்கே இருந்த சின்னச் சின்னக் குட்டைகளில்கூட செம்மண் ஏறிய கலங்கலான தண்ணீர். மழை பெய்ததால்தான் அந்த அளவுக்காவது தண்ணீர் இருந்தது. இல்லையென்றால் வறண்ட பொட்டல்காடாகத்தான் அந்தக் குட்டைகள் காட்சியளித்திருக்கும்.

மானாமதுரையை நெருங்கும்போது வெங்கிடுவின் முகம் மாறியிருந்தது.

‘என்ன தம்பி! பதில் மெசேஜ் வரலியா?’

‘இல்லண்ணே! செல்போன்ல சார்ஜ் தீர்ந்துபோயிடுச்சு!’

-தொடரும்

Saturday, December 18, 2010

கேர்ள்ஸ் ஹாஸ்டல்

அன்புள்ள அத்தைக்கும்
அருமை மாமாவுக்கும்
அம்சவேணி எழுதுவது.

நலம் நாடுவதும் அதுவே.

வண்ணக் கனவு தரும்
வளமான வாழ்க்கை தரும்
வருங்காலம் கருதித்தான்
என்னை
விடுதியில் விட்டீர்கள்.

வருங்காலம் கிடக்கட்டும்
வாழ்க்கை நசிந்து போகுமென்ற
நடுக்கம் வந்துவிட்டதெனக்கு.

அரசினர் விடுதி
அப்படித்தான் இருக்கும் -
என ஆயிரம் சொல்லலாம் நீங்கள்!

அந்த ஆயிரமும் தாண்டி
அநியாயம் நடப்பதைத்தான்
அங்கீகரிக்க முடியவில்லை.

மூட்டைப் பூச்சியை
நசுக்கி நசுக்கி
விரல்முனை
தேய்ந்துவிட்டது.
அது பரவாயில்லை.

முதல் நாள் இரவின்
தூக்கம் போனதில்
முதல் பீரியடிலேயே
உறக்கம் வந்துவிடுகிறது.
‘மூதேவி!’ என்று
திட்டுகிறார் ஆசிரியை.
அதுவும் பிரச்னையில்லை.

முடை நாற்றம் வீசும்
புழுத்துப் போன
புழுங்கரிசிச் சோற்றை
வாயில் வைத்தாலே
வாந்தி வருகிறது.
அதையும் நான்
குறையாகச் சொல்லவில்லை.

ஐநூறு மாணவிகளுக்கு
ஐந்து கழிப்பறைகள்
அசுத்தச் சகதி நினைத்தால்
அசூயையாக இருக்கிறது.
அதையும் நான்
சகித்துக்கொள்வேன்.
சங்கடங்கள் ஏதுமில்லை.

விடுதியில் சேர்ந்த
அடுத்த தினமே
சோப்பு சீப்பு
பவுடர் ஸ்டிக்கர் பொட்டு... என
நீங்கள் வாங்கிக் கொடுத்துப் போன
எதையும் காணவில்லை.
இதில் ரேவதி
எனக்குப் பிரியமாய்க் கொடுத்த
வண்ணத்துப்பூச்சி வடிவ ஹேர் க்ளிப்பும் அடக்கம்.
அதற்கும் நான் வருந்தவில்லை.

ஆதரவற்ற
முகம் தெரியாத
அந்தச் சகோதரி
என்னைக் கேட்டிருந்தால்
கொடுத்திருப்பேன்.

அவள் திருடவேண்டிய
நிர்ப்பந்தம் நேர்ந்திருக்காது.
அதுகூட பிரச்னையில்லை.

மிகச் சிறிய அறையில்
புழுக்களைப் போல
எட்டுப் பெண்கள்
சுருண்டு கிடக்கிறோம்.
அதுவா பிரச்னை. இல்லை.

பிரச்னை பெரியதாகயிருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை
அடுத்த அறை வளர்மதியை
வார்டன் அழைத்துப் போனார்.

மல்லிகை மலராகப் போனவள்
மரவட்டையாக சுருங்கிப் போய்த் திரும்பி வந்தாள்.

உதட்டில் காயம்
உடம்பெல்லாம் கீறல்கள்
உசுப்பிக் கேட்டாலும்
ஊமையாக நிற்கிறாள்.
உறுத்து விழிக்கிறாள்
குலுங்கி அழுகிறாள்.

புரியாத வயதா எனக்கு?
அவளும் ப்ளஸ் ஒன்
நானும் ப்ளஸ் ஒன்.

எங்கே, யாருக்கு, எதற்கு
எதுவும் தெரியாது எனக்கு.

இது ஞாயிறு தோறும்
தொடர்கிற சங்கதியாகிவிட்டது.

எதிர்த்துக் கேட்டால்
ஏச்சுப் பேச்சு.
விடுதியை விட்டு
உடனே நீக்கம்.

அடுத்த ஞாயிறை நினைத்தால்
நடுக்கமாயிருக்கிறது.

அடுத்த பலிகடான் நான்தானோ
அச்சமாயிருக்கிறது.

அன்புள்ள மாமா!
அதற்குள் வந்து
அழைத்துப் போங்கள் என்னை!

அப்பா அம்மா
இல்லாத எனக்கு
நீங்கள்தானே எல்லாம்!

அவசியம் வாங்க!

நம்பிக்கையோடு
அம்சவேணி

பி.கு. எதிர்வீட்டுப் பூனை குட்டி போட்டுடுச்சா?

Tuesday, December 7, 2010

பல்கலைக்கழகத்துக்குப் போன பழக்கடைக்காரர்




‘பஸ்ஸு வந்துரும்டா’ என்றேன் நான்.

‘பத்தே நிமிசம்டா. பஸ்ஸு வர்றதுக்குள்ள வந்துரலாம் வாடா!’ என்றபடி, என்னை இழுத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டுக்கு எதிர்ப்புறம் இருந்த கற்பகம் ஓட்டலுக்குப் போனான் ரமேஷ்.

வாசலில் ஒரு தள்ளுவண்டியில் பழங்கள் பரப்பியிருக்க, அவர் ஆப்பிள் பழங்களைத் துணியால் துடைத்து, அடுக்கிக் கொண்டிருந்தார். முகத்தின் கால் வாசியை மறைத்ததுபோல சோடாபுட்டிக் கண்ணாடி. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். ரமேஷைப் பார்த்து சிரித்தார்.

‘வணக்கம் தோழர்!’ என்றான் ரமேஷ்.

‘வணக்கம். வாங்க! என்னா காலேஜுக்குப் போகலியா?’

‘கௌம்பிட்டோம். பஸ்ஸு வர்றதுக்கு டைம் இருக்கு. புதுசா ஒரு கதை எழுதினேன். அதான் படிச்சுக் காட்டலாம்னு...’

‘படிங்க. படிங்க. இது யாரு?’

‘என் ஃபிரெண்டு. பாலு...’

ரமேஷ் தன் கையில் வைத்திருந்த காலேஜ் நோட்டில் ஒரு பக்கத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்தான். அவர் பழங்களை அடுக்கியபடியே கேட்டார். அவன் படித்து முடித்ததும் முதலில் மனமாரப் பாராட்டினார். பிறகு விமர்சனம் சொன்னார். எங்கேங்கே தவறு, எப்படி திருத்தினால் சரியாக இருக்கும் என்று அவன் காயப்பட்டுவிடாமல் சொன்னார். ரமேஷ் குறித்துக் கொண்டான். நாங்கள் விடைபெற்றோம். காலேஜ் பஸ்ஸில் ஏறும்போது அவர் பெயர் தேனி சீருடையான் என்று சொன்னான் ரமேஷ்.

‘எழுத்தாளரா இவர்? பழக்கடை வைத்திருக்கிறாரா?!’ எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரைப் பற்றி அவன் மேலும் சொன்னான். சிறு வயதில் அவருக்குப் பார்வை பறிபோய்விட்டது. பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். பிறகு கண்ணில் ஆபரேஷன் நடந்து பார்வை வந்தது. சிறுகதைத் தொகுதி, நாவல் வெளியிட்டிருக்கிறார். அவை இரண்டு பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இருக்கின்றன. நான் பிரமித்துப் போனேன்.

ரமேஷ் வைத்யா எழுதி, அவரிடம் வாசித்துக் காண்பித்த அந்தச் சிறுகதை, எழுத்தாளர் பொன் விஜயன் தொகுத்த ஒரு தொகுப்பில் வெளியானது. பிறகு ரமேஷோடு நானும் சேர்ந்துகொண்டேன். படைப்பாளியாக. சிறுகதை, கவிதை என்கிற பெயரில் எதை எழுதிக் கொண்டுபோனாலும் பொறுமையாகக் கேட்பார். பொறுப்பாக விமர்சனம் செய்வார். தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துவார். இன்றைக்கும் தேனியில் எழுத்தாளர்கள் ம. காமுத்துரையோ, அல்லி உதயனோ, இதயகீதனோ எதை எழுதினாலும் முதலில் அவரிடம் காண்பிக்கத்தான் ஓடுகிறார்கள்.

‘நிறங்களின் உலகம்’ நாவலை விமர்சிப்பதற்கு முன்பாக, தேனி சீருடையானைப் பற்றிய ஒரு அறிமுகம் தேவை என்று தோன்றியது. அதற்காகத்தான் இந்த முன்னுரை.

0

பார்வையை இழந்த ஒரு சிறுவன், சென்னை பூந்த மல்லியில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பத்து ஆண்டுகள் படிக்க நேர்கிறது. இந்த ஒற்றைவரி வாழ்க்கைதான் இந்த நாவல். கண்ணிலாத ஒருவனின் உலகம் அந்தந்தக் கால மன நிலையில் விரிகிறது. தமிழில் இப்படி ஒரு நாவல் இதுவரை வந்திருக்கிறதா என்பது சந்தேகமே.

‘வெளிச்சம் நிறைந்த கும்மிருட்டில் மூழ்கியிருந்தது அறை. ஒளியின் நிறமும் இருட்டின் நிறமும் பின்னிப் பிணைந்து முகத்தில் அப்பிக் கொண்டன. சொதசொதத்த முகவெளியில் சோகக் கோடுகள் பதியமிட்டன. ரம்பம் ஒன்று கண்களைக் கீறி ரத்தம் வராத ரணத்தை ஏற்படுத்தியது. சப்தமும் சப்தமின்மையுமான எல்லைகளுக்குள் சிறைப்பட்டுக் கிடந்தேன் நான்.’

மேலே சொன்ன வர்ணனையை எந்த எழுத்தாளரும் எழுதிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. இது தேனி சீருடையான் பார்வையிழந்திருந்த காலத்தில் அனுபவித்த அவலத்தில் முகிழ்த்த வர்ணனை.

குடும்பத்தை இறுக்கிப் பிடித்திருக்கும் வறுமை, பார்வையிழந்த அக்கா, வீட்டை கவனிக்காமல் திரியும் தந்தை, அப்பாவி அம்மா என்கிற குடும்பப் பின்னணியில் பாண்டியின் கதை விரிகிறது. இடையில் பார்வை பறிபோக, அவனுடைய மாமா பாண்டியை அழைத்துப் போய் சென்னையில் உள்ள ஒரு பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்துவிடுகிறார். அங்கிருந்து புதுப் புதுப் பாத்திரங்கள் கதையில் பாண்டியுடன் சேர்ந்து கொள்கின்றன.

பார்வையில்லை, புது இடம், புது மனிதர்கள், புதுவிதமான (பிரெய்லி முறை) கல்வி. தடுமாறிப் போகிற பாண்டி கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாழ்க்கைக்குப் பழகி கொஞ்சம் கொஞ்சமாக அதில் கரைந்து போகிறான். பத்மநாபன், கன்னியம்மாள், சென்னியப்பன், பொன்னுச்சாமி சார், பாண்டுரங்கன்... என நாவல் முழுக்க மறக்க முடியாத பாத்திரங்கள்.

படிப்பு முடிந்து பள்ளியை விட்டு வெளியேற வேண்டிய சூழல். நண்பன் பத்மநாபன் அழுதுகொண்டிருக்கிறான். பாண்டி அவனைத் தேற்றுகிறான். நண்பன் சொல்கிறான்: ‘என் பசியை இன்னக்கி வரக்யும் அரசாங்கம் தீத்து வச்சுச்சு; இனிமே யார் அதைச் செய்வா?’ வெகு சாதாரணமாக சொல்லப்படும் இந்த வசனம் நம்மை அதிர்ந்து போக வைத்துவிடுகிறது. உண்மையில், பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான சிறுவர்களின் முதல் பிரச்னை வறுமையாகத்தான் இருக்கிறது.

இந்த வறுமை பாண்டியின் வாழ்க்கையில் அழுத்தமாகக் காண்பிக்கப்படுகிறது. ஒரு முறை விடுமுறைக்கு வீட்டுக்குப் போகிறான். அவனுடைய பிரெய்லி புத்தகங்களையும் அவன் வாங்கியப் பதக்கத்தையும் விற்றுவிட்டிருக்கிறாள் அம்மா. அதிர்ந்துபோகிற பாண்டியிடம், ‘கோவிச்சுக்காதய்யா! அக்காவுக்கு நடு முதுகுல ராஜ பிளவை பொறப்பட்டு சாகக் கெடந்தப்போ, வைத்தியச் செலவுக்குக் காசு இல்லாம ஒம் புஸ்தகத்தையும் பதக்கத்தையும் வித்துட்டோம். கஞ்சி இல்லாட்டிக்கூட ஈரத் துணிய இறுக்கிக் கட்டிப் படுத்துக்கலாம். ரத்த உசுர். சாகக் கெடக்கறப்போ எப்படிய்யா பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்கிறாள் அம்மா.

கிராமத்து வாழ்க்கையும் பிரமிப்பூட்டும் சென்னை வாழ்க்கையும் பார்வையற்ற ஒருவனின் மன நிலையில் இருந்து சொல்லப்படுவது இந்நாவலின் புதிய அணுகு முறை. மிக எளிமையான உரையாடல்களும், மிரட்டாத, தெளிவான நடையும்தான் இந்த நாவலின் பலம் என்றுகூடச் சொல்லலாம்.

முழு நாவலையும் படித்து முடித்ததும் பார்வையற்றவர்களோடு கலந்து வாழ்ந்த உணர்வு ஏற்படுகிறது. அவர்களுக்கேயான இயல்பான வாழ்வியல் சிக்கல்கள், இருட்டைப் போலவே பயமுறுத்தும் எதிர்காலம் எல்லாவற்றையும் கொண்டுவந்து கண்முன் நிறுத்துகிறார் சீருடையான். ஆனாலும் நாவலின் முடிவில் கீற்றாகக் கிளம்பும் நம்பிக்கைதான் அவரை யார் என்று நமக்கு இனம் காட்டுகிறது.

‘படிப்பு வெள்ளை நிறம். முடிப்பு கருநீல நிறம்; முடித்துவிட்டேன் என்ற கருத்து வெளிர் மஞ்சள் நிறம். ஏன் இப்படி நிறங்கள் உண்டாகின்றன? மனக் கற்பனைக்குத் தகுந்தபடி நிறங்களா? நிறங்கள் கற்பனையை உண்டாக்குகின்றனவா? ஒரு வேளை பிறவிக் குருடனாய் இருந்தால் நிறங்கள் புரியாமல் போயிருக்குமோ? அப்படியும் சொல்ல முடியவில்லை. கங்காதரன் பிறவிக் குருடன். பச்சை நிறம் எப்படி இருக்கும் என்று கேட்டபோது இலை போலக் கையை விரித்துக் காட்டினான். ‘வெள்ளை நிறம்?’ ‘பகல் முடிந்த இருள் போல இருக்கும்.’

இப்படி ‘நிறங்களின் உலகம்’ நாவலில் விரிகிற தேனி சீருடையானின் உலகம் மிகப் புதியதாக இருக்கிறது. கதையின் நாயகன் பாண்டி அனுபவிக்கிற அத்தனை உணர்வுகளையும் படிக்கிற நம்மையும் தொற்றிக்கொள்ளச் செய்கிறது. வான வில்லைப் போல அழகான, அதே சமயம் யதார்த்தமான படைப்பு.

நூல்: நிறங்களின் உலகம்
ஆசிரியர்: தேனி சீருடையான்
வெளியீடு: அகரம், மனை எண். 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007.
விலை: ரூ. 150/-.

(அம்ருதா இலக்கிய இதழில் வெளியானது)