Thursday, January 8, 2009

மால்கம் எக்ஸ் - ஓர் அறிமுகம்

‘இது பச்சைப் படுகொலை. இதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’

மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்ன வார்த்தைகள் இவை. வெறும் ஒப்புக்காக வெளிவந்தவை அல்ல. மனத்திலிருந்து வந்தவை. அதற்குக் காரணமும் இருக்கிறது. இருவருமே அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். ஒரே வித்தியாசம் மார்ட்டின் அஹிம்சாவாதி. மால்கம் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர். எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு போராளி இன்னொரு போராளிக்கு நேர்ந்த அநீதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். அதற்கு இன்றைக்கும் சாட்சியமாக இருப்பவைதான் மார்ட்டின் சொன்ன வார்த்தைகள்.

சமீபத்தில் எழுத்தாளர் மருதன் எழுதி, கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘மால்கம் எக்ஸ்’ நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘விறுவிறுப்பான நடை, புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாது’ என்று சொல்வதெல்லாம் ‘மால்கம் எக்ஸ்’ புத்தகத்துக்கு அப்படியே பொருந்தும் என்றாலும் இந்தப் பாராட்டு மிகச் சாதாரணமான ஒன்றாக ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிய ஒரு வசீகரம் இந்நூலில் இருக்கிறது. அது மருதனின் எழுத்து நடை. கூடுதலாக நம்மைப் புத்தகத்தில் இழுத்து ஆழ்த்துகிற இன்னொரு அம்சம் மால்கமின் வாழ்க்கை.

கண்முன்னால் எரிந்துபோன வீடு, படுகொலை செய்யப்பட்ட தந்தை, மென்னியை இறுக்கிப் பிடித்து வாழ்க்கையின் குரூரப் பக்கங்களைப் புரட்டியபடி இருக்கும் வறுமை, எல்லாவற்றுக்கும் மேல் ‘நீ கறுப்பன். நாயினும் கீழானவன். நீ காலம் முழுக்க இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று தினமும் நெஞ்சைச் சுடுகிற இனவெறி. இத்தனை இன்னல்களிலும் சுருண்டுபோய்விடாமல், நெஞ்சை நிமிர்த்துக்கொண்டுப் போராடத் துணிந்ததால்தான் மால்கமைக் கொண்டாடவேண்டியிருக்கிறது. சின்னஞ்சிறு வயதிலேயே துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுப்பழகியிருந்த மால்கமுக்கு சாவு என்கிற சாத்தான்கூட துப்பாக்கி மூலமாகத்தான் வந்து சேர்ந்தது.

நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதி இருவருக்குமே அவரவர் வாதம் அவரவர்க்கு நியாயமாகத்தான் படும். அதே போல, மால்கமைப் பொறுத்தவரை அவர் கையிலெடுத்த தீவிரவாதம் என்கிற வழிமுறை நியாயமாகப்பட்டிருக்கிறது. அதைக்கூட அவர் தன் சொந்த துவேஷத்துக்காகக் கையாளவில்லை. அமெரிக்காவில் வேர்விட்டுக் கிளைப்பரப்பிக் கொண்டிருக்கும் இனப்பாகுபாட்டுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினார்.

அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது கறுப்பின மக்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டின் தீவிரம் கொஞ்சமாவது குறையுமா? இது உலகமெல்லாம் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு கேள்வி. காலம் காலமாக ஒடுக்கப்பட்டுவரும் கறுப்பின மக்களின் பிரச்னைகளையும், அவர்களுக்காகக் குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த ஒரு மாமனிதரின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அந்த அவசியத்தை மிகச் சரியாகப் பூர்த்தி செய்கிறது இந்தப் புத்தகம்.

1 comment:

butterfly Surya said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றி பாலு.

விரைவில் படிக்க வேண்டும்..

வாழ்த்துகள்.