Monday, September 5, 2011

தவிக்க வைக்கும் தனியார் பேருந்துக் கட்டணம்!


வெளியூருக்குப் போக சென்னைவாசிகள் பெரிதும் நம்பியிருப்பது ரயில்களையும் அரசுப் பேருந்துகளையும் அடுத்துத் தனியார் பேருந்துகளைத்தான். டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், முழுக்கக் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது, வால்வோ.. என்று விதவிதமான தனியார் பேருந்துகள். சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களுக்கும், பெங்களூர், திருப்பதி, ஹைதராபாத், திருவனந்தபுரம் போன்ற வேற்று மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கும் செல்ல பேருந்துகள் கிடைக்கின்றன.

இப்போது தனியார் பேருந்துகளில் படுக்கை வசதிகூட வந்துவிட்டது. கொஞ்சமும் அலுங்காமல், குலுங்காமல் விமானத்தில் பயணம் செய்வது போன்ற சொகுசான அனுபவத்தைத் தரும் அதி நவீன பேருந்துகள் எல்லாம் வந்துவிட்டன. ஆனாலும் இப்படிப்பட்ட தனியார் பேருந்துகள், நடுத்தர மற்றும் சாதாரண மக்களுக்கு ஏற்றவை அல்ல என்பதுதான் பல பேருடைய கருத்தாக இருக்கிறது. முதல் காரணம், இந்தத் தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் பயணச்சீட்டுக் கட்டணம். அரசுப் பேருந்துகளைவிட இரு மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கும்பகோணத்துக்குப் போக அரசுப் பேருந்தில் 130 ரூபாய் கட்டணம் என்றால், குளிர்சாதன வசதி இல்லாத தனியார் பேருந்தில் 300 ரூபாய் வரைக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுவே குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து என்றால் 450 ரூபாய் வரைக்கும்கூட வசூல் செய்கிறார்கள்.

இந்தக் கட்டணங்கள்கூட அதிகம் கூட்டம் சேராத சாதாரண தினங்களில்தான். விழாக்காலம், பள்ளிவிடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் பயணச்சீட்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரைக்குப் போக 300 ரூபாய் என்றால் 600 ரூபாய்கூட வசூல் செய்வார்கள். அவசர வேலையாகப் போகிறவர்கள், முன் பதிவு செய்யாமல் திடீர்ப் பயணம் செய்யவேண்டி இருப்பவர்களுக்கு வேறு வழியில்லை. அதிகக் கட்டணம் கொடுத்துப் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிடுகிறது.

சாதாரண தினங்களில், இன்னொரு பிரச்னையும் இந்தத் தனியார் பேருந்தில் நடக்கும். ஒருவர் திருச்சி போவதற்காக கோயம்பேடு வருவார். ‘இப்போ கிளம்பிடும். ஏறுங்க!’ என்று தனியார் பேருந்தில் ஏறச் சொல்வார்கள். உள்ளே ஏறியவர் இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்ப்பார். ஏறிய பிறகு இறங்கவும் மனம் இருக்காது. தனியார் பேருந்து நடத்துனர், இருக்கைகள் நிரம்பும்வரை பஸ்ஸை எடுக்காமல், ஆள் சேர்ப்பதிலேயே குறியாக இருப்பார். ஏறியவர் காத்திருப்பார். சில சமயங்களில் பேருந்து பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்ப இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கூட ஆகிவிடுவதுண்டு.

அதோடு ஊருக்குப் போகிற வழியில் நினைத்த இடத்தில் பேருந்துகளை நிறுத்திவிடுவார்கள். பஞ்சர், பிரேக் டவுன்.. போல பேருந்துக்கு ஏதாவது பிரச்னை என்றால், அரசுப் பேருந்துகளைப் போல், மாற்று ஏற்பாடு வசதி இல்லை.. என்று பல குறைகளை பயணிகள் சொல்கிறார்கள்.

இந்த பிரச்னைகளை எல்லாம் சொல்லி, சென்னை கோயம்பேட்டில் உள்ள சில தனியார் பேருந்து உரிமையாளர்களிடமும், நடத்துனர், ஓட்டுனர்களிடம் விசாரித்தோம்.

‘எல்லா தனியார் பேருந்து உரிமையாளர்களும் இஷ்டத்துக்கு டிக்கெட் காசு வசூலிக்கறது இல்லீங்க. ஒரு தடவை இவ்வளவுதான்னு டிக்கெட் விலையை நிர்ணயம் செஞ்சுட்டாங்கன்னா அதுக்கு மேல ஒரு பைசாகூட வசூல் செய்யாத எத்தனையோ நல்ல பேருந்து நிறுவனங்கள் எல்லாம் வந்துடுச்சு. இப்போல்லாம் இண்டர்னெட்லயே டிக்கெட் புக் பண்ணலாம். அதோட எட்டு மணிக்கு ஒரு பஸ் கிளம்பணும்னா, யாருக்காகவும் காத்திருக்காம, டயத்துக்குக் கிளம்பிடுற எத்தனையோ நல்ல பஸ்கள் இருக்கு.’ என்கிறார் ஒரு தனியார் பேருந்து ஓட்டுனர்.

இன்னொரு தனியார் பேருந்து உரிமையாளரோ வேறு விதமாக பதில் சொல்கிறார். ‘தனியார் பேருந்துகளுக்கு இருக்கை வரின்னு ஒண்ணு இருக்கு. அதுவே பஸ்ஸோட வருமானத்துல பெரும்பாலான தொகையை முழுங்கிடும். ஒரு பஸ் ஓடுதோ, இல்லையோ மூணு மாசத்துக்கு ஒரு தடவை ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபா இருக்கை வரி கட்டியாகணும். அதாவது முப்பத்தி ஆறு சீட்டுகள் கொண்ட ஒரு பஸ்ஸுன்னு வச்சுக்குவோம். ஒரு சீட்டுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 60 ரூபா இருக்கை வரி கட்டணும். எங்களுக்கு அரசு பேருந்துகளைப் போல மானியமோ, இலவச டீசலோ, வேற எந்தச் சலுகையோ கிடைக்கறதில்ல. வேற வழி இல்லாமத்தான் டிக்கெட் விலையை ஏத்தவேண்டியதா இருக்கு.’

வழியில் எல்லாம் நிறுத்தி, நிறுத்தி டிக்கெட் போடுவதுகூட ஒரே ஒரு பஸ்ஸை மட்டும் வைத்துக்கொண்டு, அலுவலகம்கூட இல்லாமல் இருக்கும் சிறு பேருந்து உரிமையாளர்கள்தான் என்கிறார் ஒரு நடத்துனர்.

உண்மையில், ஒரு தனியார் பேருந்து நடத்துவது என்பது இன்றைக்கு அசாத்தியமான காரியம். இருக்கைவரி போக, டீசல் செலவு, ஊழியர்களுக்குக் கட்டணம், பராமரிப்புச் செலவு என்று என்னென்னவோ இருக்கின்றன. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் போய் வருகிற ஒரு தனியார் பேருந்து, தனியார் டோல்கேட்டுகளில் கட்டும் கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு ரூபாய் ஆகிறது என்கிறார் ஒரு பேருந்து உரிமையாளர். ஆனால், அரசுப் பேருந்துகளுக்கு இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

சென்னை கோயம்பேட்டில் தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவர் அலுவலகம் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பத்துக்குப் பத்து சதுர அடி கொண்ட அந்த இடத்துக்கு அவர் வாடகையாகக் கொடுக்கவேண்டிய தொகை மாதம் ஒன்றுக்கு 18,000 ரூபாய். இந்தக் கட்டணமும் வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது. விபத்துகள் நடக்கும்போது பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால், ஏற்கெனவே வெளியூர் போக்குவரத்துக்குப் போதிய வாகன வசதி இல்லாமல் தவிக்கிறது சென்னை. இந்தச் சூழ்நிலையில், தனியார் பேருந்துகளை ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி, அவர்களுக்கான வசதிகளையும், சில சலுகைகளையும் செய்துதர அரசு முன் வந்தால், டிக்கெட் கட்டணம் குறையும். பொது மக்களும் பயன் அடைவார்கள்.

(ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலியில் ‘நகர்வலம்’ பகுதியில் வாசிக்கப்பட்ட என் கட்டுரை)

5 comments:

Unknown said...

அருமை பாலு...

காவ்யா said...

Very good. U hav impartially analysed.

Pl follow it up with stories on other issues of general concern.

பாலு சத்யா said...

கிருஷ்ண பிரபுவுக்கும் காவ்யாவுக்கும் மிக்க நன்றி

Balaraman said...

தற்போதைய அரசுப் பேருந்துக் கட்டணங்கள் உண்மையிலேயே அரசுக்கு கட்டுப்படியாகத கட்டணங்கள்.
தென் மாநிலங்களிலேயே, தமிழகத்தில் தான் பேருந்துக் கட்டணங்கள் இவ்வளவு குறைவு. விளைவு? புதிய பஸ்கள் வாங்க
பணம் இல்லை! எவ்வளவு தான் அரசு மானியம் கொடுக்க முடியும்?. பஸ் கட்டணங்கள் பொருளாதாரத்தோடு சம்பந்தப் படுத்தப்படாமல், அரசியலோடு இணைக்கப் பட்டுள்ளது. கட்டணங்களை உயர்த்தினால், காத்திருந்து பஸ்களை எரிக்கக் காத்திருக்கும் சில கட்சிகள்.
என்ன தான் செய்வது? தனியார் பேருந்துகள் கட்டணங்களை அரசே நியாயமான அளவில் நிர்ணயிக்கலாம். நடுவே உள்ளூர் தேர்தல் வேறு வருகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சி கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது சந்தேகம் தான்.

சாதரண பஸ் கட்டணங்களை விட்டு விட்டு, நெடுந்தூர பஸ்களுக்கு, புதிய அதிக அளவில் பஸ்களை வாங்கி, கட்டுப்படியாகும் நிலையில்
கட்டணங்களை வைக்கலாம். அதற்கெல்லாம் 'பொலிடிகல் வில்' வேண்டும். அதற்கான சூழ்னிலை தமிழகத்தில் இருக்கிறதா என்பது சந்தேகம் தானே?
Balaraman R (orbekv.blogspot.com)

ULAGAMYAAVAIYUM (உலகம்யாவையும்) said...

ஒரு தேர்ந்த எழுத்தாளனின் மைவரிசை. அமெரிக்கையான எழுத்து. ஆழ ஊடுருவிப் பார்க்கும் வன்மை. அடித்துத் துவண்டதுபோலச் செய்யும் ஆற்றல். மனசை உலுக்கிவிடும் மாயம். சாதாரண வார்த்தைகளில் நடந்திருக்கும் அசாதாரணம். சட்டென்று இதயத்தை யாரோ பிடுங்கி எறிந்ததைப் போன்ற படபடப்பு. சுண்டி இழுக்கின்ற சூட்சுமம். வலியைப் புரியவைக்கும் வலிமை. தான் சுமந்திருந்த சுமையை வாசகன் நெஞ்சில் இறக்கி வைத்துவிடுகிற எளிமை.

ஒரு நடுத்தர குடும்பத்து மனிதர்களின் அவசத்தைப் பகிர்ந்துகொள்கிற அனுபவங்கள் மிகவும் இயல்பாய் அமைந்துள்ளன. கொஞ்சமும் மிகைப்படுத்தல்கள் இல்லை. வணிகமயமாகிப்போன வாழ்க்கையில் ஒரு சாதாரண மனிதன் தன் குடும்பத்துத் தேவைகளை எப்படிச் சமாளிக்கிறான் என்பதற்கான யதார்த்தச் சித்தரிப்புகள்.

சப்பாத்தி வேண்டும் என்று கேட்கிற பிரியா, தோசை வேண்டும் என்று கேட்கிற கிருஷ்ணா, பில்லர் அருகில் இருக்கிற மாடி ஓட்டல் எல்லாம் மறந்து போகிற சுசீலா. எல்லாரையும் இடம் மாற்றிப் போட்டுவிடுகிற சௌமியா...

பாலு நீங்கள் ஒரு ஆளுமை மிக்க எழுத்தாளர். அசொகமித்திரனாக, சா கந்தசாமியாக பரிமாணம் கொள்கிறீர்கள். இது தொடக்கம்தான். பலே.