சுசீலாவால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தோடும் கொஞ்சம் பரவசத்தோடும் அவள் குரல் ஒலிப்பதை செல்போனில் பேசும்போதே என்னால் உணர முடிந்தது.
‘நெஜமாவேதான் சொல்றீங்களா? கௌம்பி ரெடியாயிருக்கட்டுமா? சீக்கிரம் வந்துடுவீங்களா?’
‘ஆமா சுசீ! நாலு மணிக்கெல்லாம் வந்துடுறேன். பார்க்குக்குப் போயிட்டு, வெளியில எங்கயாவது ஓட்டல்ல சாப்பிடலாம். நைட்டுக்கு டிபன் எதுவும் செஞ்சுடாதே!’
இடையில், பேசுவதை நிறுத்திவிட்டு அவள் கிருஷ்ணாவிடம் பேசுவதும், அவன் ஏதோ சொல்வதும் கேட்டது. கிருஷ்ணா அவளிடமிருந்து செல்போனை வாங்கி என்னிடம் பேசினான்.
‘அப்பா!... ம்... அப்பா... பீச்சுக்கு... பீச்சுக்கு போலாம்ப்பா.’
‘போலாண்டா செல்லம்!’
‘ம்... ம்... அப்புறம் எனக்கு... எனக்கு... தோசை!’
‘வாங்கித் தர்றேண்டா கண்ணு!’
கிருஷ்ணாவுக்கு இன்னும் பார்க்குக்கும் பீச்சுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. பூங்கா, அவனுக்குக் கடற்கரையாகத் தெரிகிறது. அலைகள் கரையில் மோதாத, ‘ஜிலு ஜிலு’ காற்று வீசாத, கால்களில் மண் ‘நறநற’க்காத கடற்கரை.
‘அதுக்கு பேரு பீச் இல்லடா, பார்க்கு...’ என்று சொன்னால் அப்போதைக்கு ‘பா...க்கு’ என்பான். ஆனால், திரும்பவும் வெளியே போகவேண்டும் என்று சொல்லும்போது ‘பீச்’ என்கிற சொல்லைத்தான் பயன்படுத்துவான். ஆனால், ப்ரியாவுக்கு நன்கு விவரம் தெரிந்திருந்தது. அவள் கிருஷ்ணாவைவிட நான்கு வயது பெரியவள்.
காலையில் ஆபீஸுக்குக் கிளம்புகிற நேரத்தில், ‘எங்கேயாவது வெளியில கூட்டிட்டுப் போங்கப்பா. நாம எல்லாரும் பார்க்குக்குப் போய்கூட ரொம்ப நாளாச்சுப்பா!’ என்று ப்ரியா சொன்னபோது, அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
‘போலாண்டா பட்டு!’ என்று அவள் கன்னங்களைச் செல்லமாகத் தட்டிவிட்டுக் கிளம்பினேன். ஆபீசுக்குப் போவதற்கே அலுப்பாக இருந்தது. ‘என்னடா வாழ்க்கை!’ என்று வெறுப்பாக வந்தது.
நகர வாழ்க்கையில் குடும்பத்தோடு கழிப்பதற்கான நேரம் என்பது நம் கையில் இல்லை. அலுவலகமும், அங்கே போய் வருவதற்கான பயண நேரமும், போக்குவரத்து நெரிசலும் தின்று எறிந்த சக்கைதான் மீதம் இருப்பது. அகாலத்தில் வீடு புகுந்ததும் படுக்கையில் விழத்தான் மனம் வேட்கை கொள்கிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு உதவ, ஓய்வெடுக்க என்று பொழுது ஓடி விடுகிறது. ‘அடடா! குடும்பத்தோட வெளில போய் ரொம்ப நாளாச்சே!’ என்று தோன்றுகிற கணங்களில் குற்ற உணர்ச்சி ஒரு சைத்தானைப் போல மென்னியைப் பிடிக்கிறது.
அவகாசம் இருந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு பல விஷயங்கள் கட்டுபடியாவதில்லை. நகருக்கு வெளியே இருக்கும் தீம் பார்க்குகளுக்கு ஒரு முறை குடும்பத்தோடு போய்வரும் செலவு என்பது மாத சம்பளத்தில் பாதியை விழுங்குகிற சமாசாரம். நல்ல தியேட்டரில் சினிமா பார்க்கலாம் என்றால், நான்குபேருக்கு ஆயிரம் ரூபாயையாவது தனியாக எடுத்து வைக்கவேண்டும். ‘நவீனம்’ என்கிற பெயரில் தியேட்டர்களெல்லாம் பெரிய பெரிய ‘மால்’களாக ஆகிக்கொண்டிருக்கின்றன. சினிமா பார்த்தோம், வந்தோம் என்பது இயலாத காரியம். ரெஸ்டாரண்ட், விளையாட்டு, வினோத அரங்கங்களையும், பலவிதமான விளையாட்டுப் பொருட்களை விற்கிற கடைகளையும் கடந்துதான் தியேட்டருக்குச் செல்லவேண்டியிருக்கிறது. குழந்தைகளின் கண்களையும் வாயையும் என்ன செய்வது?
சில காலம் சுசீலாவே வியந்துபோகும்படிக்கு அவளை கோயில் கோயிலாக அழைத்துச் சென்றேன். கோலவிழியம்மன், முப்பாத்தம்மன், துலுக்கானத்தம்மன், முண்டகக்கன்னியம்மன்... என்று சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அத்தனை அம்மன்களுக்கும் சுசீலா நன்கு பரிச்சயம் ஆகிவிட்டாள். மற்ற செலவினங்களோடு ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கவாசிகளுக்கு கோயில்கள் வரப்பிரசாதம். போக்குவரத்து, சாமிக்கு பூ, தட்டில் போட கொஞ்சம் சில்லறை... அவ்வளவுதான். ‘குடும்பத்தோட நாங்களும் வெளிய போய்ட்டு வருவம்ல?’ என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.
ஒரு ஞாயிற்றுக் கிழமை சட்டை, பேண்ட் போட்டுக்கொண்டு கிளம்பியபோது, சுசீலா தயங்கித் தயங்கி சொன்னாள். ‘ஏங்க! கோயிலுக்கு மட்டும் வேணாங்க... ‘இந்த வாரம் எந்தக் கோயிலு, என்ன பிரசாதம்?’னு பக்கத்து வீட்டு மாலதி கிண்டல் பண்றாங்க...’
எனக்குக் கோபம் வந்தது. நான் பத்திரிகைக்காரன். தமிழின் மிக முன்னணி நாளிதழில் நிருபர். யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக்கொள்ளத் தேவையில்லைதான். ஆனால், சுசீலாவுக்கு இதையெல்லாம் புரிய வைக்க முடியாது. கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசினால்கூட அழுதுவிடுகிற ரகம். அவளும் என்னதான் செய்வாள்? ஒண்டுக் குடித்தனத்தின் இறுக்கத்தையும் பிசுபிசுப்பையும் தவிர்க்க மாதம் ஒரு முறையாவது எங்கேயாவது வெளியே போகத்தான் வேண்டியிருக்கிறது.
கோயில்களுக்கு அடுத்தபடியாக நகரத்தில் என் போன்றவர்களுக்கு பூங்காக்களும் கடற்கரையும் கொஞ்சம் ஆசுவாசம் தருபவையாக இருக்கின்றன. குறிப்பாக பூங்காவில் குழந்தைகள் துள்ளிக் குதித்து விளையாட இடம் இருக்கிறது. அந்தக் கணங்களில் அவர்கள் வீடு, பள்ளி சிறைகளை மறந்து போகிறார்கள்.
அதன் பின், மாதத்துக்கு ஒரு முறையாவது நாங்கள் பூங்காவுக்குப் போவது வழக்கமானது. குடும்ப விஷயங்களை பேசிக்கொள்ள, குழந்தைகளைக் கொஞ்ச நேரம் உற்சாகமாக வைத்துக்கொள்ள, எதிர்காலம் குறித்துப் பேசிக் கவலைப்பட... அது எங்களுக்கு கற்பக விருட்சமாக இருந்தது.
கடந்த மூன்று மாதங்களாக நாங்கள் வெளியே போக முடியாதபடிக்கு விடுமுறை தினங்கள் அமைந்து போயின. நண்பருடைய தந்தையின் மரணம், சுசீலாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது, அலுவலகத்தில் வேலைப் பளு... என்று என்னென்னவோ காரணங்கள்.
அன்று சனிக் கிழமை. அலுவலகத்தில் வந்து உட்கார்ந்ததுமே எடிட்டர் அழைத்தார்.
‘வேணு! அடுத்த வாரம் சப்ளிமெண்ட்டரி ஒண்ணு போடப் போறோம். ‘பெண்கள் சிறப்பிதழ்.’ ஒரு திருநங்கையோட பேட்டி இருந்தா நல்லா இருக்கும்...’ அவரே ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து பேசச் சொன்னார். பேசினேன்.
அவர் பெயர் சௌமியா. ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியபடியே, பிரபல நாடகக் குழு ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தார். அன்று மாலையே பேட்டிதர ஒப்புக்கொண்டார்.
‘என் வீட்ல வேணாங்க. ஹவுஸ் ஓனர் என்னை பொண்ணுன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. யாராவது பாக்க வந்தா சந்தேகப்படுவாங்க. உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க. நான் அங்க வந்துர்றேன். இல்லன்னா, பொதுவா ஏதாவது ஒரு இடம் சொல்லுங்க. மீட் பண்ணலாம்.’
எனக்கு ப்ரியா காலையில் சொன்னது நினைவுக்கு வந்தது.
‘ஏதாவது பார்க்ல மீட் பண்ணலாமா?’
சௌமியா ஒப்புக்கொண்டார். இருவரும் கே. கே. நகரில் இருக்கும் ஒரு பூங்காவில் மாலை ஐந்து மணிக்கு சந்திப்பதாக முடிவு. நான் உடனே சுசீலாவுக்கு போன் செய்து நாலரை மணிக்கு பூங்காவுக்குப் போகலாம் என்று தகவல் சொன்னேன். நான்கு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டேன். ப்ரியாவும் கிருஷ்ணாவும் தயாராக இருந்தார்கள். ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். கிளம்பும்போது, நான் சுசீலாவிடம் ‘வாய்ஸ் ரெக்கார்டரை’ எடுத்து வைக்கச் சொன்னேன். அவள் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
‘இல்லம்மா. ஒருத்தங்களை இண்டர்வியூ பண்ண வேண்டியிருக்கு. அரை மணி நேரம்தான். அப்புறம் நாம நம்ம வேலையைப் பாக்கலாம்.’
‘அப்போ ஆபீஸ் வேலைக்காகத்தான் எங்களைக் கூப்பிடுறீங்களா?’
நான் சுசீலாவிடம் நிலைமையை விளக்கிச் சொல்லவேண்டியிருந்தது. பைக்கில் வருகிறபோது ப்ரியா, ‘அப்பா! பில்லர்கிட்ட மாடியில ஒரு ரெஸ்டாரண்ட் இருக்குல்ல... அங்க போகலாம்ப்பா. எனக்கு சப்பாத்தி...’
‘எனக்கு தோசை...’ என்றான் கிருஷ்ணா. நடுத்தர வர்க்கத்துக் குழந்தைகளுக்கு தோசையையும் சப்பாத்தியையும் தாண்டி யோசிக்க முடிவதில்லை.
நாங்கள் பூங்காவுக்குள் நுழைந்த பத்து நிமிடத்தில் சௌமியா வந்துவிட்டார். அதிகம் போனால் இருபத்தைந்து வயது இருக்கும். படிய வாரிய தலைமுடி. ஜீன்ஸ், டீ சர்ட் போட்டிருந்தார். சிரித்த, குழந்தை போன்ற முகம். நான் சுசீலாவையும் குழந்தைகளையும் அறிமுகப்படுத்தினேன். சுசீலாவை குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, நானும் சௌமியாவும் புல் தரையில் அமர்ந்தோம்.
நான் உரையாடலை எங்கிருந்து தொடங்கலாம் என்ற யோசனையோடு, வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்தேன். சற்று தூரத்தில் அமர்ந்தபடி சுசீலா எங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். நான் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
‘ம்... உங்களைப் பத்தி சொல்லுங்க... உங்க சொந்த ஊரு, உங்க அப்பா அம்மா, உங்க இளமைக் காலம்...’
சௌமியா பேச ஆரம்பித்து சிறிது நேரம்தான் ஆகியிருக்கும். திடீரென்று ப்ரியா ஓடி வந்து, ‘அப்பா! கிருஷ்ணா சருக்குல ஏறணும்னு அடம் பிடிக்கிறாம்ப்பா...’ என்றாள். அதற்குள் சுசீலா வந்து அவளை இழுத்தாள். ‘அப்பாவை தொல்லை பண்ணக்கூடாது. வா!’ குழந்தைகள் விளையாட, சுசீலா தனியாக அமர்ந்திருக்க நான் அடிக்கடி அவர்களையே திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘என்ன சார்! ரொம்ப அன் ஈசியா இருக்கா? வேணும்னா அவங்களையும் இங்க வந்து உட்காரச் சொல்லுங்களேன். எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல...’
நான் நன்றியோடு சௌமியாவைப் பார்த்துவிட்டு, சுசீலாவை கை காட்டி அழைத்தேன். என் பக்கத்தில் அமரச் சொன்னேன். சங்கடத்தோடுதான் அமர்ந்தாள். ‘அக்கா! இதுல தனியா பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல. நான் பேசுறதெல்லாம் பத்திரிகையில வரப் போகுது. ஊரே படிக்கப் போகுது. அப்புறம் என்ன...? கூச்சப்படாம உக்காருங்க...’ என்று சௌமியா, சுசீலாவின் கையைப் பிடித்து உரிமையோடு அழுத்தினார். அதற்குப் பிறகு குழந்தைகள் அடிக்கடி எங்களருகே ஓடி வருவதும், கூச்சல் போடுவதும், என்னையும் சுசீலாவையும் பிடித்து இழுப்பதும்கூட அந்த நேர்காணலுக்குப் பெரிய தொந்தரவாக இல்லை.
சௌமியா, கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொன்னார். அவருக்குள் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், விஷயம் தெரிந்து வெளியே துரத்தப்பட்டு வீடு அன்னியமாகிப் போனது, தெருவில் இளைஞர்கள் கேலி செய்து அடித்து விரட்டியது, மும்பைக்கு ஓடிப் போய் ரயிலில் பிச்சை எடுத்தது, அறுவை சிகிச்சை செய்துகொண்டது, ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் திரிந்தது... என்று அவர் பேசப் பேச கலங்கிப் போய் கேட்டுக்கொண்டிருந்தாள் சுசீலா. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார் சௌமியா.
நேர்காணல் முடிந்ததும் நான் ஒரு ஆட்டோ பிடித்து வந்தேன். சௌமியா ஆட்டோவில் ஏறுவதற்கு முன்னால் சுசீலா, அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். ‘கண்டிப்பா ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும்...’ சௌமியா சிரித்துத் தலை அசைத்து, கிருஷ்ணாவின் கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போனார்.
நானும் சுசீலாவும் பூங்காவில் இருந்த பெஞ்ச் ஒன்றில் பேசுவதற்கு விஷயம் இல்லாதது போல கொஞ்ச நேரம் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். சுசீலாதான் மௌனத்தை உடைத்தாள். ‘கிளம்பலாமா?’ என்றாள். விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை அழைத்தாள்.
நான் பைக்கைக் கிளப்பினேன்.
‘சாப்பிடுறதுக்கு எங்க போலாம் சுசீ?’
‘ஓட்டலுக்கெல்லாம் வேணாங்க. வீட்டுக்கே போயிடலாம். ஃபிரிட்ஜுல மாவு இருக்கு. தோசை ஊத்திக்கலாம்.’
(கல்கி 30.10.2011 இதழில் வெளியான சிறுகதை)
*
Friday, October 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
முடிவில் நெகிழவைத்த அருமையான கதை.
அசல் நடுத்தர வர்க்கக் கதை நண்பா.
அது சரி ‘முண்டகக் கண்ணி அம்மன்’, கன்னியம்மன் ஆனது ப்ரூப் மிஸ்டேக்காப்பா? - சிவா 08050444267
Enter your comment...very super
Enter your comment...Very interesting story
Post a Comment