Monday, December 26, 2011

அறியப்படவேண்டிய நடிகர் - 2


‘சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல!’
- நடிகர் மூணார் ரமேஷ்‘புதுப்பேட்டை’ படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்தபோது, யார் இந்த வில்லன் என்று அத்தனைபேரின் புருவத்தையும் உயர வைத்தவர் மூணார் ரமேஷ். இயற்பெயர் ரமேஷ் பாபு. சொந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘மூணார் ரமேஷ்.’ சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, கிட்டத்தட்ட நாற்பது படங்களில் நடித்துவிட்டார். ‘தோழா!’ படத்தில் பிரதான வில்லன். தற்போது, ‘வேட்டைக்காரன்’, ‘ஆடுகளம்’, இயக்குநர் செல்வராகவன், விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் முக்கிய பாத்திரம் என்று மனிதர் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்...

நீங்க நடிச்ச முதல் படம் எது?

இயக்குநர் ஏ.பி. முகன் ‘தீண்ட... தீண்ட...’ன்னு ஒரு படம் எடுத்துக்கிட்டு இருந்தார். அந்தப் படத்துல புரொடக்ஷன் சைடுல வேலை பார்த்தேன். நாங்க எல்லாருமே ஒரு டீமா அதுல வேலை பார்த்தோம். பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி வந்துச்சு. அப்போதான் முகன், ‘நீங்க ஒரு ரோல்ல நடிங்களேன்’னு சொன்னார். என்னோட நண்பர்களும் என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. எனக்கு நடிப்புல முன் அனுபவம் எதுவும் இல்ல. இருந்தாலும் நடிச்சு பாப்போமேன்னு தோணிச்சு. அதுல நடிச்சேன். ஆனா, அப்போகூட பெரிய நடிகனாகணும்னு எந்த எண்ணமும் எனக்கு இல்ல. அதுக்கப்புறம் என்னோட இன்னொரு நண்பர் சுரேஷ் ‘அது ஒரு கனா காலம்’ படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிக்க கூப்பிட்டார். அது பாலுமகேந்திரா சார் படம். சுரேஷ், அதுல அசோசியேட் டைரக்டர். அந்தப் படத்துல ஒரே ஒரு சீன்ல நடிச்சேன். அந்தப் படம்தான் முதல்ல ரிலீஸ் ஆச்சு. என்னோட நண்பர்கள் எல்லாருமே என்னை தொடர்ந்து நடிக்கச் சொல்லி, ஊக்கம் குடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஆனாலும் நான் எந்த ஆர்வமும் இல்லாமதான் இருந்தேன்.

ஒரு நாள், நண்பர்கள் எல்லாரும் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ ஒரு சினிமா கோ ஆர்டினேட்டர் வந்தார். ‘புதுப்பேட்டை’ன்னு ஒரு படத்துல முக்கியமான ஒரு ரோல் இருக்கு. அதுக்கு பொருத்தமான நடிகரைத் தேடிக்கிட்டு இருக்காங்க. எத்தனையோ பேர் வந்துட்டுப் போயிட்டாங்க. இயக்குநர் செல்வராகவன் திருப்தி ஆக மாட்டேங்கறாரு. நீங்க ஒரு ஃபோட்டோ எடுத்துகிட்டு போய் பாத்துட்டு வாங்களேன்’னு சொன்னார். நான் அதுக்கு முன்னாடி, என்னோட ஃபோட்டோவை எடுத்துக்கிட்டு எந்த சினிமா கம்பெனிக்கும் சான்ஸ் கேட்டு போனது கிடையாது. நண்பர்கள் வற்புறுத்தினதால, ரொம்ப கூச்சப்பட்டுக்கிட்டே ஒரு ஃபோட்டோவை எடுத்துட்டு போனேன். பொதுவா, ஒரு நடிகர், ஒரு கம்பெனியில புகைப்படத்தைக் குடுக்குறார்னா, அதுக்குப் பின்னாடி, ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாத்தையும் எழுதிக் குடுப்பார். அந்த அடிப்படைகூட எனக்குத் தெரியாது. ஃபோட்டோவை ஆபீஸ்ல குடுத்தேன். வந்துட்டேன்.

ஒரு வாரம் கழிச்சு, செல்வராகவன் சார் கூப்பிட்டுவிட்டார். எப்பிடியோ, என் அட்ரஸைக் கண்டுபிடிச்சு அவரோட ஆபீஸ்ல இருந்து வந்துட்டாங்க. செல்வராகவன் சார் என்னோட நடிப்பு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் கேட்டார். நான் ஏதோ பெரிய கேரக்டரா இருக்குமோன்னு பயந்துட்டேன். அதனால பட்டும் படாமலும்தான் பதில் சொன்னேன். நான் நடிச்ச முதல் ரெண்டு படத்துலயும் என்னோட நண்பர்கள் இருந்தாங்க. அதனால பிரச்னை இல்ல. ஆனா, இது அப்பிடி இல்ல. அவர் பெரிய டைரக்டர். அந்த பயம் எனக்குள்ள இருந்துச்சு. எனக்கு காஸ்ட்யூம் போட்டு, செக் பண்ணினாங்க. போகச் சொன்னாங்க. நான் குழப்பத்தோடயே வெளியில வந்தேன். ஒரு மாசம் கழிச்சு என்னை கூப்பிட்டு விட்டாங்க. ஹைதராபாத்ல ராமோஜிராவ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல வச்சு அக்ரீமெண்ட் எல்லாம் போட்டாங்க. அப்போதான் எனக்கு நடிப்போட சீரியஸ்னெஸ் உறைச்சுது. அந்தப் படத்துல நடிச்சேன். டைரக்டர் சொன்ன மாதிரியெல்லாம் செஞ்சேன். ஆனா, அந்த கேரக்டர் எந்த மாதிரி வரும்னு எனக்குத் தெரியல. படம் ரிலீஸ் ஆச்சு. செகண்ட் ஷோவுக்கு ஒரு நண்பரோட போயிருந்தேன். இடைவேளை விட்டு வெளியில வந்தா, ஆடியன்ஸ் எல்லாரும் என்னை சுத்தி நின்னுக்கிட்டாங்க. ‘நல்லா நடிச்சிருக்கே’ன்னு பாராட்டி தள்ளிட்டாங்க. அது எனக்கு பெரிய அனுபவமா இருந்துச்சு. அந்த ஒரே படத்துல, எங்க வெளியில போனாலும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. ‘புதுப்பேட்டை’ படத்தோட மேனேஜர் பால கோபி என்னை இயக்குநர் சுராஜ்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். நான் ‘தலைநகரம்’ படத்துல நடிச்சேன். அதுக்கப்புறம் நானா வாய்ப்புத் தேடி போக ஆரம்பிச்சுட்டேன்.
சென்னைக்கு எப்போ வந்தீங்க? ஏன் வந்தீங்க?

நான் மதுரை வக்ஃபோர்டு காலேஜ்ல பி.ஏ. படிச்சிக்கிட்டு இருந்தேன். கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி. டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. அப்புறம் மூணார்லயே ஒரு டிரான்ஸ்போர்ட் நடத்தினேன். நஷ்டமாயிடுச்சு. அதுக்கப்புறம் உள்ளூர்ல இருக்க முடியல. அப்ப கல்யாணம் வேற ஆயிடுச்சு. லவ் மேரேஜ். கோயம்பத்தூருக்கு வந்தேன். நமக்கு தெரிஞ்ச தொழில் என்னன்னா வண்டி ஓட்டறது. சின்னதா டிராவல்ஸ் நடத்திப் பாத்தேன். அதுலயும் நஷ்டம். சரி. டிரைவரா வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணி நானும் பல கம்பெனிகளுக்கு ஏறி, இறங்கினேன். என் உருவத்தைப் பாத்து யாருமே வேலை தர மாட்டேன்னுட்டாங்க. ஒரு டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சொன்னார்: ‘உங்களுக்கு வேலை குடுக்குறோம்னு வைங்க. எந்த கஸ்டமராவது பெட்டியை எடுத்து டிக்கில வைங்கன்னு உங்களைப் பாத்து சொல்லுவாங்களா? இவ்வளவு ஏன்? வண்டியில ஏறக்கூட மாட்டங்க.’ அதுக்கப்புறம்தான் ஒரு ஃபைனான்ஸ் கம்பெனியில கலெக்ஷன் ஏஜெண்ட்டா வேலைக்கு சேந்தேன். அதாவது வண்டியை ஃபைனான்ஸுக்கு வாங்கிட்டு தவணை கட்டாம இருப்பாங்கல்ல? அந்த வண்டியை சீஸ் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற வேலை. கிட்டத்தட்ட கட்டப் பஞ்சாயத்து மாதிரி. அப்புறம் இயக்குநர் முகன் சென்னையில ‘தீண்ட... தீண்ட...’ படம் ஆரம்பிச்சப்போ சென்னைக்கு வந்தேன்.

வில்லனா நடிக்கறதுல ஒரு சிக்கல் இருக்கு. பொதுவா, ஆடியன்ஸ் யாருக்கும் நல்ல அபிப்ராயமே வராது. உங்க அனுபவம் எப்படி?

எனக்கும் அப்படித்தான். முதல்ல கிட்ட வர்றதுக்கே யோசிப்பாங்க. நாமளா போய் என்னன்னு கேட்டதும் பேச ஆரம்பிச்சுடுவாங்க. நெருங்கிட்டா, நாம நடிகன், சினிமா வேற, உண்மையில வேறன்னு புரிய ஆரம்பிச்சுடும்.

வாழ்நாள்ல, தனியா தெரியற மாதிரி ஒரு கதாபாத்திரத்துல நடிக்கணும் அப்படின்னு ஆசை ஏதாவது உங்களுக்கு இருக்கா?

அப்படி எல்லாம் இல்ல. நான் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வரணும். அவ்வளவுதான். ஒரு நடிகனா என்னிக்கி வாழ்க்கையை ஆரம்பிச்சேனோ, அப்பவே எல்லாத்தையும் நல்லா உள்வாங்க ஆரம்பிச்சுட்டேன். லைட்டிங்லருந்து, புரொடக்ஷன் வேலைலருந்து, இயக்குநர் எப்படி சொல்லித் தர்றாருங்கறது வரைக்கும் அப்சர்வ் பண்றேன். எந்த கேரக்டர்ல நடிச்சாலும் ‘இது நல்ல பேரை வாங்கித் தரும்’னு நினைச்சுத்தான் நடிக்கிறேன். ‘பந்தயக் கோழி’ன்னு ஒரு மலையாளப் படம். மூணே சீன்லதான் நடிச்சேன். ஆனா, முக்கியமான பாத்திரம். என்ன காரணமோ அந்தப் படம் ஹிட் ஆகலை. அதனால, மலையாளத்துல நான் யாருன்னு தெரியாம போச்சு. ‘தோழா!’ன்னு ஒரு படம். அதுல முழுக்க முழுக்க நாந்தான் வில்லன். சில சமயங்கள்ல இந்த மாதிரியும் அமைஞ்சு போயிடுது. அதே மாதிரி கடமைக்கு ஷூட்டிங்குக்குப் போய்ட்டு வர்ற சோலி நம்மகிட்ட கிடையாது. சினிமாவை முழுக்க தெரிஞ்சவங்க யாரும் இல்ல. அதே மாதிரி நமக்கு எதுவுமே தெரியாதுன்னும் சொல்ல முடியாதும். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உழைக்கிறேன். அவ்வளவுதான்.

சினிமாவுல போராட்டம் ஜாஸ்தி. எத்தனையோ பெரிய நடிகர்கள்கூட காணாமல் போயிருக்காங்க. நடிப்புத் தொழிலை எப்படி தேர்ந்தெடுத்தீங்க? உங்களுக்கும் அது மாதிரியான போராட்டம் இருக்கா?

வாழுறதுக்கு ஒரு தொழில் வேணும். வண்டி வச்சிருந்தா வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம். பணம் வச்சிருந்தா வட்டிக்கு விடலாம். கூலி வேலைக்குப் போகலாம். ஆனா, நடிப்பு அப்படி இல்ல. இதுல மூலதனமே நம்மதான். மாசம் 1-ம் தேதி ஆனா வாடகை குடுக்கணும். திடீர்னு ஆஸ்பத்திரி செலவு வரும். பொதுவா, எந்தக் குடும்பத்துலயும் சினிமாவுல நடிக்கிறேன்னா, ஆதரவு குடுக்க மாட்டாங்க. வேணும்னா, கடை வச்சுத் தர்றேன். பொழைச்சுக்கோன்னு சொல்லுவாங்க. என் விஷயத்துலயும் அதுதான் நடந்துச்சு. இப்ப நான் நடிகனா நிக்கறதுக்குக் காரணம், நம்பிக்கை, மனைவி, நண்பர்கள். இவங்க இல்லைன்னா, என்னால வாழ முடியாது. இப்போ நானும் ஃபெப்சியில உறுப்பினர். ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாவும் இருக்கேன். ‘படிக்காதவன்’ படத்துல நடிகர் ஷாயாஜி ஷிண்டேவுக்கு நான் தான் டப்பிங் பேசினேன். தெலுங்குல ஒரு படத்துக்கு டப்பிங் பேசினேன். ஒண்ணுமே இல்லைன்னாலும், டப்பிங் பேசியாவது ஓட்டிடலாம்னு நம்பிக்கை இருக்கு. அதுக்காக எனக்கு குறைஞ்ச பட்ச நம்பிக்கைன்னு நினைச்சிடாதீங்க. பெரிய நம்பிக்கை.நீங்க முன்மாதிரியா யாரையாவது நினைக்கிறீங்களா?யாரையுமே நினைக்கலை. எனக்கு கமர்ஷியல் கனவுகள் கிடையாது. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே வாழ்க்கையில எதையெல்லாம் அனுபவிக்கணுமோ, அதையெல்லாம் அனுபவிச்சு வாழ்ந்துட்டேன். நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டுன்னு பேர் வாங்கணும். முடிஞ்ச வரைக்கும் எந்த பாத்திரத்துல நடிச்சாலும் நல்லா பண்ணணும். அவ்வளவுதான்.

நீங்க நடிச்சதுலயே ரொம்ப கஷ்டமான காட்சின்னு ஏதாவது இருக்கா? அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்.

‘புதுப்பேட்டை’ படத்துல என்னை உயிரோட புதைக்கிற மாதிரி ஒரு சீன். நான் கேமராவைப் பாத்து பேசிக்கிட்டு இருப்பேன். பின்னாடி இருந்து என்னை உதைச்சு குழியில தள்ளுவாங்க. எல்லாத்தையும் கவனமா ஃபாலோ பண்ணி நடிக்கணும். அந்தக் காட்சி சரியா வரலை. செல்வராகவன் சார் ரொம்ப அன்பா பேசிப் பார்த்தார். அப்புறம் கோபமா பேசினார். மறுபடியும் அன்பா... ஒரு கட்டத்துல, ‘என்னடா பொழப்பு இது! திருப்பிப் பாக்காம ஓடிப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். ஆனா, அந்த சீனை எடுத்து முடிச்சதுக்கு அப்புறம் சரியாயிட்டேன். அந்தப் படம் வெளியில வந்ததுக்கு அப்புறம் என் வாழ்க்கையே மாறிப் போச்சு. என்னைப் பாக்குறவங்க எல்லாருமே நான் தனுஷைக் கூப்பிடுற மாதிரி ‘குமாரு...’ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க.

0

(ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் “விளம்பரம்” பத்திரிகைக்காக நான் செய்த நேர்காணல்)

3 comments:

manjoorraja said...

வளரும் ஒரு நடிகரைப் பற்றிய அருமையான பதிவு.

பாராட்டுகள்.

பால கணேஷ் said...

அவரைப் பற்றிய முழு விபரங்களையும் வெளிக் கொணரும் அருமையான கேள்விகள் பாலுண்ணா. உங்க பேட்டி பிரமாதம். உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பாலு சத்யா said...

நன்றி கணேஷ் சார். நன்றி Manojoorraja.