Monday, June 15, 2009

ஒன்றரை நிமிடத்தில் உலகத்தரம்!ஒரு பெரிய வயல் வெளி. அறுவடைக்குத் தயாராக நெற்கதிர்கள் விளைந்து தலை சாய்த்து நிற்கின்றன. சட்டென்று காட்சி மாறுகிறது. வயல் வெளி மறைந்து மிக பிரம்மாண்டமான, ராட்சசக் கட்டிடம் ஒன்று இப்போது அந்த இடத்தில் முளைத்திருக்கிறது.

ஒரு வீட்டின் உள் பகுதி. நல்ல வசதியான வீடு என்பது பார்த்தாலே தெரிகிறது. மாடியில் இருந்து ஒரு பெண் படிக்கட்டுகளில் இறங்கி வருகிறாள். நடுத்தர வயது. கோட், ஷூட் என அதி நவீனமான உடை உடுத்தியிருக்கிறாள். ஹாலில் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு ஒரு சிறுவன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு முன்னால் இருக்கும் லேப்டாப்பில் அவன் கை அலைந்துகொண்டிருக்கிறது.

அந்தப் பெண் இறங்கிவந்து அவனுக்கு எதிரே உட்காருகிறாள். கால்களில் சாக்ஸை மாட்டியபடியே அவனிடம் கேட்கிறாள்: ‘இன்னிக்கி என்ன எக்ஸாம்?’

‘மேத்ஸ்.’

இப்போது அவன் கேட்கிறான். ‘ஆபீஸுக்கா?’

‘இல்ல. ஒரு கான்ஃபிரன்ஸ். டெல்லி போறேன்.’

அந்தப் பெண் கிளம்புகிறாள்.

‘மம்மி! எனக்கு பிரேக்ஃபாஸ்ட் எடுத்து வைக்க மறந்துட்டீங்களே!’

‘ஓ! சாரி.’ என்றவள் ஃபிரிட்ஜைத் திறக்கிறாள்.

இப்போது டைனிங் டேபிளில் ஒரு தட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கை தட்டில் ஒரு மாத்திரையைப் போடுகிறது.

‘இந்த சிவப்பு கேப்ஸ்யூல் பிரேக்ஃபாஸ்டுக்கு.’

தட்டில் மேலும் இரண்டு மாத்திரைகள் வந்து விழுகின்றன.

‘இந்த வெள்ளை டேப்லெட்ஸ் லஞ்சுக்கு.’

அவ்வளவுதான். படம் முடிந்து விடுகிறது. திரையில் ‘வேளாண்மையைக் காப்போம்’ என்று பெரிதாக எழுத்தைப் போடுகிறார்கள். ‘2040-க்குப் பிறகு’ என்ற குறும்படத்தில்தான் மேலே சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

உண்மையில், விவசாயத்துக்கான முக்கியத்துவம் சமூகத்தில் மெல்ல மெல்லக் குறைந்து வரும் அபாயத்தை நம் தலையில் ஒரு தட்டுத் தட்டி உணர்த்திவிடுகிறது இந்தக் குறும்படம். ஐ.டி. தொழில், இஞ்சினியரிங், மருத்துவம்... உள்ளிட்ட பல துறைகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை நாம் வேளாண்மைக்குக் கொடுப்பதில்லை.

இப்படியே போனால், பசியை மந்தமாக்கும் அல்லது உணவாகவே மாத்திரையை சாப்பிடவேண்டிய கட்டாயத்துக்கு நாம் எல்லோருமே ஆளாக வேண்டியதுதான். நாளுக்கு நாள் அதிகமாகிவரும் ரியல் எஸ்டேட் வியாபாரம், விவசாயத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் அலட்சிய மனோபாவம், கடன் சுமையால் எலிக்கறி சாப்பிடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும் விவசாயி, விதர்ப்பாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயக் குடும்பங்கள், எதிர்காலம்... என்று பல கேள்விகளை இந்தப் படம் நமக்குள் எழுப்பி விடுகிறது.

இந்தக் குறும்படத்தை இயக்கியிருக்கும் எம்.ஆர். செந்தில் இளைஞர். சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிறார். தற்போது இயக்குநர் செல்வபாரதியின் ‘முரட்டுக்காளை’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

‘இப்படி ஒரு குறும்படத்தை எடுக்கணும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?’ என்று கேட்டால் படபடவெனப் பேசுகிறார். ‘இப்போ விளைச்சல் நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்பிடியே போனா விவசாயம் பெரிய கேள்விக்குறியா மாறிடும். அது மேல இருக்கற அக்கறையினால ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இந்தப் படத்தை எடுத்தேன்.’

இந்தக் குறும்படத்துக்கு இருபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. தன் கைக் காசைப் போட்டுத்தான் படமெடுத்திருக்கிறார் செந்தில். இதில் நடித்திருக்கும் கவிதா யாதவும், சிறுவன் பண்பரசனும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பின்னணி இசை கிடையாது. எஃபெக்ட்ஸை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வளவு அழுத்தமான செய்தியைச் சொல்லும் ‘2040-க்குப் பிறகு’ குறும்படம் மொத்தமே ஒன்றரை நிமிடம்தான் ஓடுகிறது. ஒன்றரை நிமிடத்தில் உலகத்தரம்!

0

(கல்கியில் என்னைக் கவர்ந்த குறும்படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியான கட்டுரைகளில் இதுவும் ஒன்று)

2 comments:

ஈரோடு கதிர் said...

where is the link for flim

பாலு சத்யா said...

திரு. கதிர் வணக்கம். இந்தக் குறும்படத்துக்கு லிங்க் எதுவும் கிடையாது. மக்கள் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பினார்கள். அங்கே கேட்டுத்தான் நான் இயக்குநர் செந்திலின் செல்ஃபோன் எண்ணை வாங்கினேன்.