Tuesday, June 16, 2009

ஏழுமலை ஜமா


திருவிழாவைப் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவிழாக்கள் மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவை. இப்போதெல்லாம், ஆடி, சித்திரை மாதங்களில் மூலை முடுக்குகளில் இருக்கும் கோவில்களில்கூட வசூல் பண்ணி, ஒலிபெருக்கியை அலறவிட்டு, கூழ் ஊற்றி, பொங்கல் வைத்து, சமீபத்தில் வெளியான படங்களை சூட்டோடு சூடாக விசிடியில் போட்டு, அல்லது ‘ஆடலும் பாடலும்' என்ற பெயரில் ரெகார்ட் டான்ஸை ஆடவிட்டு, ஏதாவது ஒரு ஆர்கெஸ்ட்ராவை மேடையேற்றித் திருவிழாவை ஒப்பேற்றிவிடுகிறார்கள்.

ஆனால், ஒரு காலத்தில் திருவிழா என்றால் தவிர்க்க முடியாத சில அம்சங்கள் இருந்தன. நம் மண்ணின் கலைகளான தெருக்கூத்து, கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்...போன்றவை. நவீன கலாசாரம் என்ற சூறாவளிக் காற்றில் அடித்துப் போகப்பட்ட கலைகளில் ஒன்று தெருக்கூத்து. அந்தக் கலையை மையமாக வைத்து, இயக்குநர் எஸ். கருணா எடுத்திருக்கிற குறும்படம் ‘ஏழுமலை ஜமா.'

ஏழுமலை, அந்த சுற்றுவட்டாரத்தில் பேர்போன தெருக்கூத்துக் கலைஞர். துரியோதனன், நரசிம்மம், அர்ச்சுனன் என்று அவர் எந்த வேஷம் கட்டி ஆடினாலும், விடியவிடிய கண் அயராமல் பார்த்து ரசிக்கும் ஊர்ஜனம். ஏழுமலையை ‘வாத்தியார்' என்று மரியாதையோடுதான் ஊரே அழைக்கும். ஒரு நாள், ஏதோ ஓர் ஊரில் ‘பாஞ்சாலி சபதம்' தெருக்கூத்தைப் போட்டுவிட்டு, தன் குழுவினரை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவர் மட்டும் ஒரு வீட்டுக்குப் போகிறார். அந்தவீட்டில் இருக்கும் ஏழுமலையின் ரசிகை, மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, கைகால் பிடித்துவிடுகிறாள். அந்தப் பெண்ணோடு இரவைக் கழித்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார் ஏழுமலை.

ஏழுமலைக்குக் கூத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வருடா வருடம் நடக்கும் ஊர்த் திருவிழாவில் ஏழுமலையின் கூத்து கண்டிப்பாக இருக்கும். அந்த வருடம் கூத்துக்கு பதிலாக சினிமா போடுகிறார்கள். நொந்து போகிறார் ஏழுமலை. மெல்ல மெல்ல அவருடைய கூத்துக்கு மவுசு குறைந்துபோகிறது. ஏழுமலையின் ஜமாவில் இருந்தவர்கள் எல்லாம், கூத்தை விட்டுவிட்டு கல் உடைப்பது, கட்டட வேலை பார்ப்பது, ரிக்ஷா ஓட்டுவது என வேறு வேறு வேலைகளைப் பார்க்கப் போகிறார்கள். ஏழுமலையும் உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல், பிழைப்புக்காக பெங்களூருக்குப் போய், மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார். ‘வாத்தியார்!' என்று மரியாதையாக அழைக்கப்பட்ட ஏழுமலை, ‘டேய் ஏழுமலை!' என்று அழைக்கப்படுகிறார்.

கூத்துக் கலையின் மேல் இருந்த வெறியில், திரும்ப ஊருக்கு வருகிறார் ஏழுமலை. சக கலைஞர்கள் எல்லாம் அவரை வேறு வேலை பார்க்கச் சொல்கிறார்கள். துடித்துப் போகிறார். வெறுப்பும் வேதனையும் மனத்தில் மண்ட, குடித்துவிட்டுத் தன்னந்தனியே ஆடுகிறார். ஏதோ ஓர் இடத்தில், வேறொரு கூத்துக் குழுவினர் இரவு நேரத்தில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வரும் ஏழுமலை ‘இப்பிடியா ஆடுவாங்க?' என்று திட்டிவிட்டு, சுழன்று சுழன்று ஆடிக்காட்டுகிறார். அப்படியே மயங்கி, சரிந்து கீழே விழுந்துவிடுகிறார்.

இப்படிக் கேள்விக்குறியாகிப் போயிருப்பது ஏழுமலையின் வாழ்க்கை மட்டுமல்ல; எத்தனையோ கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையும்தான். எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் ‘ஏழுமலை ஜமா' சிறுகதையைத்தான், குறும்படமாக எடுத்திருக்கிறார் கருணா. புரிசை துரைசாமி, கண்ணப்பதம்பிரான், பரம்பரை தெருக்கூத்து மன்றம் ஆகியோர் இணைந்து இசைத்திருக்கும் இசையும், சுரேவின் ஒளிப்பதிவும், பீ. லெனினின் எடிட்டிங்கும் இந்தப் படத்திற்கு வளம் சேர்த்திருக்கின்றன. ஒரு நல்ல படைப்புக்கான அத்தனை அம்சங்களும் ஏழுமலை ஜமாவில் இருக்கின்றன.

சினிமா குத்துப் பாடல்களில் ரசிகர்கள் ஒருபுறம் சொக்கிக் கிடக்கிறார்கள். மற்றொருபுறம் உயிரை உரசும் உண்மைகளை குறும்படங்கள் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதற்கு சமீபத்திய உதராணம் ‘ஏழுமலை ஜமா.'

No comments: