Friday, June 19, 2009

பகத்சிங் நூல் விமர்சனம்


பகத்சிங் - செவிகளைச் சாய்த்த குரலொலி

இந்நூலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு ‘முற்றும்'. இதிலிருந்தே பகத் சிங் என்கிற போராளியின் வாழ்க்கை அவரோடு முடிந்துவிடவில்லை என்பதை சூசகமாக உணர்த்திவிடுகிறார் நூலாசிரியர் முத்துராமன்.

‘இந்திய விடுதலைப் போராட்டம்' என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.

ஆட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.

இன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல். இந்நூலில் பகத் சிங்கின் சரித்திரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம். நூலைப் படித்து முடித்ததும் இப்படித்தான் தோன்றுகிறது.

பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலேற்றுகிறார்கள் போலீஸ்காரர்கள். சிறைச்சாலையின் பின்வாசல் வழியாக அவர்களுடைய உடல்களைக் கொண்டுவந்து ஒரு டிரக்கில் ஏற்றுகிறார்கள். டிரக் சிறைச்சாலையிலிருந்து கிளம்பி ஒரு நதிக்கரையில் வந்து நிற்கிறது. அது சட்லெஜ் நதியிலிருந்து பிரிந்து ஓடும் ஒரு சிறிய நதி. அந்த நதிக்கரையில் மூவரின் உடல்களும் அரைகுறையாக எரிக்கப்பட்டு, நதியில் வீசப்படுகிறது. இந்தத் தகவல்களை உள்ளடக்கித் தொடங்குகிறது முதல் அத்தியாயம். அதற்குப் பிறகு அவருடைய குடும்பப் பின்னணி, அவருடைய பிறப்பு, இளமைப் பருவம், போராட்டம் என விரிகிறது.

மிகுந்த கவனத்துடன், கொஞ்சம்கூட உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் பகத் சிங்கின் வரலாற்றைச் சொல்கிறார் எழுத்தாளர் முத்துராமன். வரலாற்றை எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையாகச் சொல்லவேண்டும் என்கிற தெளிவும் எழுத்தில் தெரிகிறது. ஆனால், நூலைப் படிக்கும்போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை.

பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவருடைய போராட்டம் ஓயவில்லை. ‘சிறையில் அரசியல் கைதிகளாக நடத்தப்படவேண்டும்', ‘அடிப்படை வசதிகள் வேண்டும்' போன்ற ஏழு கோரிக்கைகளை உள்ளடக்கி போராட்டம் நடத்துகிறார்கள் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும். சிறையில் அறுபத்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் இறந்துபோகிறார்.

“நமது கருணை நிறைந்த சர்க்கார் நீரோ மன்னனை மிஞ்சிவிட்டது. அந்த வாலிபர்களின் மரணப்படுக்கையில் உட்கார்ந்துகொண்டு வயலின் வாசிக்கிறது. தியாகமும் கடமை உணர்வும் கொண்ட இளைஞர்கள் உயிரை விடுவார்களே தவிர, உண்ணாவிரதத்தை இடையில் நிறுத்த மாட்டார்கள்” என்று சொல்லி, அடுத்த நாள் மத்திய சட்டமன்றத்தை ஒத்தி வைக்கிறார் மோதிலால் நேரு.

இப்படிச் சின்னச் சின்னத் தகவல்களையும் பொருத்தமான இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். அந்தத் தகவல்கள் பகத் சிங்கின் வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றன. மிக எளிமையான நடை, நூலோடு ஒன்றிப் போகச்செய்துவிடுகிறது. உண்மைச் செய்திகளை மட்டுமே எழுத்தில் கொண்டுவரவேண்டும் என்கிற நூலாசிரியரின் தீர்மானம் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம், பகவதி சரணின் மனைவி துர்காவுடன் ரயிலில் ஏறி பகத் சிங் லக்னோவுக்குத் தப்பிச் சென்ற நிகழ்வில் நூலாசிரியர் இப்படி எழுதுகிறார்: “இந்தச் சம்பவம் வரலாற்றில் அவரவர் விருப்பம்போல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.”

மேலும், பகத் சிங், சுகதேவுக்கு எழுதிய கடிதம், நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய துண்டுப் பிரசுரத்தின் முழு உள்ளடக்கம், லாகூர் சிறை அதிகாரிக்கு பகத் சிங் எழுதிய கடிதம், பட்டுகேஷ்வர தத்துக்கு எழுதிய கடிதம், பகத் சிங்கின் கடைசிக் கடிதம் ஆகியவை முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. பகத் சிங்கை, அவருடைய வாழ்க்கையை, அவருடைய லட்சியத்தைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:

“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”

0

நூல்: துப்பாக்கிவிடு தூது
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
விலை: ரூ. 70/-

புத்தகத்தை வாங்க.

No comments: