Friday, August 21, 2009
அருணா சாய்ராம் நேர்காணல்
‘நான் இந்த அளவுக்கு உயரக் காரணமானவர்கள் ரசிகர்கள்’
- அருணா சாய்ராம்
அது பாரீஸில் இருக்கும் ‘லெ தியேட்டர் டெ ல வில்லி’ (Le Theatre De La Ville) அரங்கமோ, சென்னையில் இருக்கும் நாரத கான சபா அரங்கமோ, அருணா சாய் ராம் பாடுகிறாரா? அரங்கம் நிறைந்து விடுகிறது. கச்சேரி தொடங்கிய பின்பும்கூட எப்படியாவது ஒண்டிக் கொண்டு கேட்க ஓர் இடம் கிடைக்காதா, டிக்கெட் கிடைக்காதா என்று ரசிகர்கள் வெளியே காத்திருக்கிறார்கள். எல்லோரும் கேட்கும்படியான, ஒரு ஜனரஞ்சகமான, கணீரென்ற, அதே சமயம் குழைவு குறையாத குரலில், மனம் குளிர கர்நாடக இசையைத் தந்துகொண்டிருக்கிறார் அருணா சாய்ராம்.
பம்பாயில் பிறந்தவர். தாயார் ராஜலஷ்மி சேதுராமன் தான் இவருடைய முதல் குரு. அதற்குப் பிறகு, சங்கீத கலாநிதி டி. பிருந்தா, வீணை வித்வான் கே. எஸ். நாராயணசாமி, டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யர் திரு. ஏ.எஸ். மணி, டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. டி. ஆர். சுப்ரமணியம், திரு. எஸ். ராமச்சந்திரன், பத்மபூஷண் பால முரளி கிருஷ்ணா ஆகியோரிடம் சங்கீதம் கற்றிருக்கிறார்.
சங்கீத கலாரத்னா, சங்கீத கலாமணி... உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தற்போது இவருக்குக் கிடைத்திருக்கும் ‘பத்மஸ்ரீ’ விருது இவருடைய இசைப் பணிக்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான விருது.
இனி அவருடன் நேர்காணல்...
கேள்வி: நீங்க பாடற பாணி மத்தவங்களோட பாணியிலருந்து ரொம்ப வித்தியாசமாகவும் எல்லாரும் விரும்பக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்?
அருணா சாய்ராம்: என்னுடைய ஆரம்பப் பாடத்தை நான் என் தாயார்கிட்டதான் கத்துக்கிட்டேன். அப்போ ‘ஆலத்தூர் பிரதர்ஸ்’னு கர்நாடக இசையில பெரிய வித்வான்கள் இருந்தாங்க. அவங்களோட சிஷ்யை எங்க அம்மா. என்னோட பத்தாவது வயசு வரைக்கும் அவங்க ஓரளவுக்கு எனக்குக் கத்துக் குடுத்தாங்க. ஓரளவுக்குன்னா, ஆரம்பப் பாடங்கள், அகார சாதகங்கள், சரளி, ஜண்டை, கீதங்கள் ரொம்ப பால பாடங்கள் இருக்குல்லையா? ஏ,பி,சி,டி... மாதிரி. இதையெல்லாம் நான் என் அம்மாகிட்டதான் கத்துக்கிட்டேன்.
கேள்வி: எந்த வயசுல கத்துக்க ஆரம்பிச்சீங்க?
அருணா சாய்ராம்: மூணு, நாலு வயசுலயே ஆரம்பிச்சாச்சு. எங்க வீட்ல காலையில எந்திரிச்சதும் வேலையெல்லாம் முடிச்சுட்டு, பாடினாதான் பால், காபின்னு ஏதாவது குடுப்பாங்க. அப்பிடி ஒரு பழக்கம். அதனால, கர்நாடக இசையில ஏ,பி,சி,டி, ... கேட், ரேட், மேட்... திஸ் இஸ் எ பால், திஸ் இஸ் எ பேட்... அந்த லெவல் வரைக்கும் அம்மா சொல்லிக் குடுத்துட்டாங்க. அதுக்கு மேலயேன்னு கூடச் சொல்லலாம். நூறு வர்ணங்கள், நூறு கீர்த்தனங்கள் வரைக்கும் சொல்லிக் குடுத்துட்டாங்க. அந்தக் கட்டத்துலதான் பிருந்தாம்மா என்னோட பத்தாவது வயசுல என்னோட வீட்டுக்கு வந்தாங்க. அவங்க எங்க வீட்லயே தங்கும்படியான ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. எங்க வீட்டுக்கு அடிக்கடி பெரிய பெரிய வித்வான்கள் வருவாங்க.
கேள்வி: அப்போ நீங்க எங்க இருந்தீங்க?
அருணா சாய்ராம்: பம்பாய்ல. நான் பிறந்தது பம்பாய், வளர்ந்ததும் பம்பாய்தான். என்னோட அப்பாவுக்கு பூர்வீகம் திருவாரூர். அம்மாவுக்கு திருச்சிராப்பள்ளி. பக்கா தமிழர்கள். ஆனா, கல்யாணத்துக்கப்புறம் அப்பா பம்பாய்ல செட்டில் ஆனதால அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனா, வீடு முழுக்க எங்களுக்கு தமிழ்நாட்டுக் கலாசாரம்தான். காலையில எந்திரிச்சுப் பாடுறதுலருந்து சமைக்கிறது வரைக்கும் எல்லாமே தமிழ்நாட்ல எப்பிடிப் பண்ணுவோமோ அப்படித்தான் நடக்கும். தமிழ்நாட்லருந்து வர்ற எந்தப் பெரியவங்களா இருந்தாலும், அது கர்நாடக சங்கீத வித்வான்களா இருந்தாலும் சரி, நாட்டியக் கலைஞர்களா இருந்தாலும் சரி, பேச்சாளர்களா இருந்தாலும் சரி, நாடகக் கலைஞர்களா இருந்தாலும் சரி எங்க வீட்டுக்கு வந்துட்டுதான் போவாங்க. அந்த மாதிரி, என் பெற்றோர் இருந்தாங்க. அம்மா, அப்பா ரெண்டுபேருக்குமே கலைகள்ல ஆர்வம் இருந்தது. அப்போ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம், நேர்ல அவ்வளவு ஈஸியா பார்க்க முடியாதவங்க எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. அரியக்குடி சார், மதுரை மணி, எம்.எஸ். அம்மா, பால சரஸ்வதி அம்மா, டி.ஆர். மகாலிங்கம், கி.வா.ஜ., இந்த மாதிரி எல்லாருமே எங்க வீட்டுக்கு வருவாங்க. கீரன் சார் வந்தார்னா எங்க வீட்லயே ஒரு பிரசங்கம் நடத்துவார். நாற்பது அம்பது பேர் உக்காந்து கேட்டுட்டுப் போவாங்க. இது ஒரு பக்கம் நடக்கும்.
இன்னொரு பக்கம் நார்த் இண்டியன் மியூசிசியன் வருவாங்க. நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலிதான். அப்பா ரயில்வேலதான் வேலையா இருந்தார். ஆனா, அது என்னவோ ஒரு கலை ஆர்வம். கூடவே விருந்தோம்பல் பண்பு. யாரையுமே நாம அன்பா வீட்டுக்கு அழைச்சு, நல்லா விருந்தோம்பல் செஞ்சோம்னா அந்த அன்புக்கு யாருமே கட்டுப்படுவாங்க இல்லையா? அது. நான் இவங்க எல்லாரையும் பாத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, யார்கிட்டயும் கத்துக்கலை. பிருந்தாம்மா அப்போ பெரிய பெரிய ஆர்ட்டிஸ்டுகளுக்கு சொல்லித் தரத்தான் வந்திருந்தாங்க. இடைச் செருகலா நானும் அவங்ககிட்ட கத்துக்க ஆரம்பிச்சேன்.
நான் அவங்ககிட்ட கத்துக்க ஆரம்பிச்சப்போ எனக்கு பத்து, பதினோரு வயசு இருக்கும். அதுவும் வருசம்பூரா கிடையாது. வருசத்துக்கு மூணு, நாலு மாசம் கத்துப்பேன். மீதம் இருக்கற நாள் பூரா அவங்க சொல்லிக் குடுத்ததை பிராக்டீஸ் பண்ணணும். திரும்ப மெட்ராஸ் போயிடுவாங்க. திரும்ப ஏப்ரல், மே, ஜூன் இந்த மூணு மாசம் வருவாங்க. இப்பிடித்தான் நான் அவங்க கிட்ட கத்துக்கிட்டேன். இப்போ நான் அவங்க பாணியில பாடுறது இல்லன்னு சொல்றீங்க இல்லையா? முதல்ல பிருந்தாம்மா பாணி என்னன்னு பாப்போம். அவங்களோடது அழுத்தமான சங்கீதம். அதாவது அடி வயித்துலருந்து பாடறது. மொதந்துண்டு பாடறது, மேலெழுந்தவாரியாப் பாடறது இதெல்லாம் அவங்களோட பாணில கிடையாது. அழுத்திப் பிடிச்சுப் பாடறது அவங்களோட தனித் தன்மை. அவங்க எது பாடினாலும் ரொம்ப ஸ்லோவா இருக்கும். ஃபாஸ்ட்டா எல்லாம் பாட மாட்டாங்க. அதி விளம்பத்துல அகாரம் எல்லாம் வரும். அவுட் வாணம் மாதிரி. ஆனா, பேஸிக்கா வெரி ஸ்லோ மியூசிக். அது ஒரு இண்டெலக்ச்சுவல் மியூசிக். இப்போ இலக்கியத்துல ஆஸ்கர் ஒயில்ட், ஜார்ஜ் பெர்னாட்ஷாவோட ரைட்டிங்க்ஸை எல்லாம் எல்லாரும் படிக்க மாட்டாங்க. சில பேருதான் படிப்பாங்க. இதே வுட் ஹவுஸை எல்லாரும் படிப்பாங்க. பிருந்தாம்மா அது மாதிரி ஒரு லெவல்ல இருக்கறவங்க. செம்மங்குடி மாமா சொல்லுவார்: ‘பிருந்தாவா! அந்தம்மா பெரியாளாச்சே!’ன்னு. அந்த அளவுக்கு அவரே மதிப்புக் குடுக்கக்கூடிய ஒரு ஆர்ட்டிஸ்ட் பிருந்தாம்மா. அவங்ககிட்ட நான் பாடம் படிச்சது பெரிய கொடுப்பினை.
அதுக்குப் பிறகு நான் கச்சேரி செய்ய ஆரம்பிச்சிட்டேன். பல வருசங்கள் ஓடிப் போச்சு. நான் சங்கீதத்துல என்னோட வார்ப்புன்னு சில விஷயங்களைப் பண்ணியிருக்கேன். கிரியேட்டிவ் சைடுல. ஏன்னா, எந்த குருவும் தன்னோட கார்பன் காப்பியா சிஷ்யன் இருக்கணும்னு விரும்ப மாட்டாங்க. சிஷ்யன் தன்னோட மனசை தானே தேடிக்கணும்னுதான் எந்த நிஜமான குருவும் விரும்புவாங்க. அப்பிடித்தான் எங்க பிருந்தாம்மாவும். என்னை அவங்க வளத்தப்பவே அப்பிடியான ஒரு மைண்டோடதான் வளத்தாங்க. கிருதிகள் மட்டும்தான் சொல்லித் தருவாங்க. கற்பனை சங்கீதத்தை சொல்லித் தர மாட்டாங்க. ராகம் பாடறப்போ ஒரு கற்பனை வேணும். ஸ்வரத்தோட பாடறப்போ ஒரு கற்பனை வேணும். அதெல்லாம் பாடினாத்தான் அது சங்கீதம். வெறும் கிருதியை கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிச்சா அது சங்கீதம் கிடையாது. பிருந்தாம்மா கிருதியை கரெக்டா சொல்லித் தருவாங்க. ராகம் பாடறப்போ சொல்லித் தர மாட்டாங்க. பக்கத்துலயே உக்காந்திருப்பாங்க. ‘பாடு!’ம்பாங்க. அந்த ராகத்தை நான் பாடும்போது ‘ம்! ம்!’னு என்னை மேல மேல பாடச் சொல்லுவாங்களே தவிர, ‘நான் பாடறேன். என் பின்னாடியே பாடு’ன்னு அந்த கற்பனை சங்கீதத்தை சொல்லித் தர மாட்டாங்க. ஏன்னா நம்ம மனசைத் தூண்டி விடணுங்கறதுக்காக. இதுதான் அவங்க சொல்லிக் குடுக்கற வழி.
அப்போ எனக்கு ஒரு own thingking வந்துடுச்சு. அதை அவங்களேதான் வளத்துவிட்டாங்க. அதோட எனக்கு மத்த influcences இருந்தது. பம்பாய்ல இருந்ததால மராட்டி சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம்லாம் நிறையா கேட்டேன். வெஸ்டர்ன் மியூசிக், பக்தி சங்கீதமும் நிறையா கேட்டேன். எங்க வீட்ல அப்பப்போ சம்பிரதாய பஜனை நடக்கும். ஒரு பக்கம் பிருந்தாம்மா சொல்லிக் குடுத்துக்கிட்டு இருந்தாங்க. பஜனை பாடற எல்லாரும் எங்க வீட்டுக்கு வருவாங்க. பிருந்தாம்மா ஒரு aspect. அவங்க எனக்கு குரு. ஆனா, இந்த மத்த விஷயங்கள் எல்லாமே என்னை பாதிச்சிருந்தது. பிருந்தாம்மா சொல்லிக் குடுத்த சங்கீதமும் இது எல்லாமும் சேந்து புது விதமா ஒரு சங்கீதத்தை நான் பாடறதுக்குக் காரணமா ஆச்சு.
கேள்வி: அப்போ சங்கீதத்துல நீங்க ஒரு ஸ்டைலை உருவாக்கியிருக்கீங்க?
அருணா சாய்ராம்: உருவாக்கியிருக்கேன்னா, எனக்கு வேற வழியில்ல. என் லைஃப்ல எனக்கு கிடைச்ச influcencesஐ நான் எடுத்து, அதை ஒரு வடிவமா அமைச்சுத்தானே நான் குடுக்க முடியும்? என்னால என்ன முடியறதோ, அதைத்தானே நான் செய்ய முடியும்? ஆனா, இப்போ நான் ஒரு ‘அபங்’ பாடறேன்னு வச்சுக்கோங்க. அதுக்கு ரொம்ப தம் பிடிக்கணும். அடி வயித்துலருந்து பாடணும். ஃபுல் ஃபோர்ஸ்ல பாடணும். அப்போதான் அந்த passion கேக்கறவங்களை பாதிக்கும். பிருந்தாம்மாவோட ட்ரெயினிங் இல்லைன்னா, அப்படி பாட முடியாது. அதே சமயம் அவங்களோட ஜெராக்ஸ் காப்பியாவும் நான் இருக்கக் கூடாதுங்கறது என் மனசுல இருந்தது.
இப்போ தியாகராஜ சுவாமியை எடுத்துக்கோங்க. மும்மூர்த்திகள்ல ஒருத்தர். அதுலயுமே அவரோட ரீச் ரொம்ப அதிகம். அவரை பாதிச்சது யாரு? பத்ராச்சல ராமதாஸரோட கிருதிகள், புரந்தரதாஸரோட கிருதிகள் இதையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தான் வளந்தார். ஆனாலும் அவர் சங்கீதத்துல வேற ஒரு ஸ்டைலைக் கொண்டு வந்தார். அவரோட சொந்த கற்பனையை சங்கீதத்துல வச்சார். அதனாலதான் அவரோட ‘ஓ! ரங்கசாயி!’ தனித்துவமா இருக்கு. ‘கிரிராஜ சுதா’ அதுவும் தனித்துவமா இருக்கு. உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் தனித்துவமா இருக்கு. ரொம்ப ரொம்ப சிம்பிளா Folk song கூடப் போடறார். அவர் பத்ராச்சல ராமதாஸர் மாதிரியே பாடணும்னு நினைச்சிருந்தா, இவ்வளவு பெரிய கிரேட் ஆளா வந்திருக்க முடியுமா? Being part of an institution is one approach. Trying to become an institution is another approach. I am going for the second. And I'm attempting. அதோட, We should exceed our limit. இல்லையா? அதைத் தாண்டிப் போகணுமே! நீங்க அதுல succeed பண்ணணும்னு அவசியம் இல்ல. அதை நீங்க ட்ரை பண்ணினாலே உங்களுக்கு மார்க்ஸ் உண்டு. முயற்சிக்கே நல்ல அங்கீகாரம் உண்டு. ‘இவங்க ஏதோ பண்ணணும்னு முயற்சி பண்றாங்க’ன்னு ரசிகர்கள் ஒப்புத்துப்பாங்க. ரசிகர்களோட ஒப்புதல் வேணுமே! அதுக்குத்தான் நான் இப்படிப் பாடறேன்.
கேள்வி: நீங்க ஏன் ‘பதம்’ பாடறதில்ல?
அருணா சாய்ராம்: பதம்ங்கறது சிருங்கார பாவம் கொண்டது. சிருங்கார ரஸம்தான் அதோட பிரதான எமோஷன். சங்கீதபூர்வமா பாக்கும்போது பதம்ங்கறது பெரிய விஷயம். சமீப காலமா பொது இடங்கள்ல பெரும்பாலானவங்க அதைப் பாடறதில்ல. ஏன்னா, அது ரொம்ப இழுத்து... வரும். அதி விளம்ப காலத்துல அப்பிடியே மூச்சு நிக்கறாப்ல இருக்கும். ஒரு வார்த்தையை சொல்லிட்டு, அடுத்த வார்த்தையை சொல்றதுக்குள்ள, நீங்க ‘போய்ட்டு வர்றேம்மா’ன்னு எழுந்து போயிடுவீங்க. அவ்வளவு ஸ்லோவான இசை. அதே சமயம் அழகான இசை. ஒண்ணு, ரொம்ப குவாலிஃபிகேஷன் இருந்தாத்தான் அதைப் பாட முடியும். இரண்டாவது, அதுல இருக்கற சிருங்கார பாவம். இடம், பொருள், ஏவல் இதைப் பொறுத்துதான் நாம எந்தக் காரியத்தையும் செய்யணும். நாம எங்க இருக்கோம்? யாருக்காக எதைப் பண்றோம்? அப்பிடிங்கறதை யோசனை பண்ணி எதையும் நாம வாழ்க்கையில செய்யணும். இப்போ நீங்களே நாலு பேரு இருக்கறப்போ ஒரு மாதிரியா பேசுவீங்க. ரெண்டு பேர் மட்டும் இருக்கறப்போ வேற மாதிரிப் பேசுவீங்க. இல்லையா? ஏன்னா, ஒரு கூட்டம் இருக்கறப்போ அதனோட வார்ப்பு வேற. ரெண்டு பேர் மட்டும் இருக்கறப்போ இருக்கற intimacy வேற. ஒரு நாள் பிருந்தாம்மாவோட நினைவு நாளுக்காக வீட்லயே பாடினேன் நான். நண்பர்கள், ஆர்வலர்களைக் கூப்பிட்டு சும்மா வீட்லயே பாடினேன். ரொம்ப நெருக்கானவங்க மட்டும்தான் இருந்தாங்க. அன்னிக்கி நான் நிறைய பதம் பாடினேன். அந்த மாதிரி ஒரு intimate crowd ல இதனோட பொருள், அர்த்தத்தை விகல்பமா எடுத்துக்காம, அந்த மியூசிக்கை அங்கீகரிக்கறவங்க மத்தியில நான் பாடலாம்.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்காங்க. அதுல எல்லாத் தரப்பு மக்களும் இருக்காங்க. சங்கீதம் தெரியாதவங்களும் வர்றாங்க. சங்கீதம் தெரிஞ்சவங்களும் வர்றாங்க. ‘இவங்க என்ன புதுசா கர்நாடக சங்கீதம் பாடிறப் போறாங்க?’ன்னு கேக்கறதுக்கு வர்றவங்களும் வர்றாங்க. நையாண்டி பண்றதுக்கு வர்றவங்களும் வர்றாங்க. பல தரப்பட்ட Groups அது. எல்லாரையும் நாம திருப்திபடுத்தியாகணும். விமர்சகர்களையும் திருப்திபடுத்தியாகணும். அவங்க இருக்கறதாலதான் நம்மளோட தரம் (Standard) உயர்ந்துண்டே போகுது. அவங்க இல்லன்னா, நம்ம தரம் கீழ போயிடும்.‘இதை சரியாப் பாடலை, அதை சரியாப் பாடலை. இதை இப்படிப் பாடணும்’ அப்பிடின்னு சொல்றதுக்கு நாலுபேரு வேணும். காம்போஜில சரியா அந்த இடத்தைப் பிடிக்கலைன்னு சொல்றதுக்கு நாலு பேரு வேணும். அப்பதான் நாம எந்தக் காரியத்தையும் சரியா செய்வோம். இல்லையா? அவங்களும் இருப்பாங்க. அதனால, இத்தனைபேரையும் திருப்திபடுத்தணுங்கறப்போ, சில விஷயங்களை தவிர்த்துடனும். நான் ‘பதம்’ நிறையா பாடறேன். தனி இடங்கள்ல.
கேள்வி: இப்போ நிறைய பேர் இசை விமர்சனம் பண்றாங்க. வெகுஜனப் பத்திரிகைகள்ல சங்கீத சீசன் சமயத்துல நிறைய இசை விமர்சனங்கள் வருது. அந்த இசை விமர்சகர்களோட தகுதி தெரியாம, அவங்களோட விமர்சனங்களுக்கு உடன்படறது சரியா?
அருணா சாய்ராம்: என்னோட வாழ்க்கையில நான் பிரபலமானது ரொம்ப லேட். பல வருஷங்களா நான் இருபது, முப்பது, நாப்பது பேருக்காக பாடினவ. இதை சொல்றதுக்கு நான் வெட்கப்படலை. நான் அப்படி வளந்தவதான். என் கச்சேரிக்கு ரொம்ப குறைவாத்தான் ஆட்கள் வருவாங்க. அப்பவும் எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. விமர்சகர்கள் அப்பவும் வருவாங்க. நிறைய கமெண்ட்ஸும் எழுதியிருக்காங்க. நான் ஒவ்வொரு கமெண்ட்டையும் சீர்தூக்கிப் பாத்து, என்னை நானே ப்ரூவ் பண்ணினதாலதான் என்னால இந்த லெவலுக்கே வர முடிஞ்சது. அது வேற காலக்கட்டம்தான். இருந்தாலும், அப்போ அந்த விமர்சகர்கள் பல விஷயங்களை எனக்கு சுட்டிக் காட்டினாங்க. ரொம்ப constructive வா அதை நான் எடுத்துக்கிட்டு, வளந்து வந்திருக்கேன். அதனால நான் விமர்சகர்களுக்கு எப்பவுமே ஒரு இடம் குடுத்து வச்சிருக்கேன். They play a good role. அதே சமயம், அவங்களுக்கு அந்த இசை ஞானம் இருக்கத்தான் வேணும்.
கேள்வி: சபாவுல பாடறப்போ, சில பேரைப் பாத்தாலே பாடறதுல இருக்கற ஈர்ப்பு போயிடும். ரொம்ப அலட்சியமா, எல்லாம் தெரிஞ்சது மாதிரி உக்காந்திருப்பாங்க. தப்புத் தப்பா தாளம் போடுவாங்க. அந்த மாதிரி சூழ்நிலைகள்ல நீங்க எப்படி உணர்வீங்க?
அருணா சாய்ராம்: இந்த மாதிரி விஷயங்களையும் நான் கடந்து வந்தவதான். ஆரம்பத்துல பாடறப்போ, நம்ம மனசுல ஒரு பயம் வந்து ஜிவ்வுன்னு உக்காந்துக்கும். அதையெல்லாம் தாண்டித்தான் வந்திருக்கேன். அதெல்லாம் இல்லாம வந்துடல. நம்மளை ரொம்ப எதிர்க்கறவங்க வந்து உக்காந்தா, அந்தக் கச்சேரி முழுக்கவே funk ஆயிடும். அவங்க ஒரு மூஞ்சியப் பாத்துட்டு, நமக்கு வர்றதுகூட வராமப் போயிடும். இதெல்லாம் நடந்திருக்கு. எல்லா சங்கீதக்காரங்க வாழ்க்கையிலயும் இதுமாதிரி நடந்திருக்கும். அந்த ஒரு முகம், நம்ம மனசுல இருக்கற அமைதியை முழுக்கக் கலைச்சி விட்டுடும். அப்படி எனக்கும் நடந்திருக்கு. இது ஏன்னு நான் யோசித்துப் பாத்தேன். நம்ப அதுக்கு முக்கியத்துவம் குடுக்கறதுனாலதான்னு எனக்குப் புரிஞ்சுது. குரு பிருந்தாம்மா ஒரு வார்த்தை சொல்லுவாங்க. அப்போ எனக்கு பத்துப் பதினஞ்சு வயசுதான். ‘மேடைல ஏறாத வரைக்கும் நமக்கு ஒண்ணுமே தெரியாது. கற்றது கை மண்ணளவு. அப்படிங்கறதையெல்லாம் அப்படியே மனசுல வச்சுக்கோ. மேடைல ஏறியாச்சுன்னா, நீ ஆள் வேற. அதை ஃபர்ஸ்ட் நீ புரிஞ்சுக்கோ. உனக்குத் தெரிஞ்சது ரொம்ப கம்மியா இருக்கலாம். ஒண்ணுமே தெரியாமக்கூட இருக்கலாம். மேடையில ஏறியாச்சுன்னா, நீதான் ராஜா, ராணி. உனக்குத் தெரிஞ்சதை தைரியமா நீ பாடிட்டு, கீழ இறங்கிடு. திரும்பப் பழைய படி ஆயிடு. இந்த தைரியம் இல்லன்னா, மேடையில ஏர்றதுக்கு நீ லாயக்கில்ல.’ அப்பிடின்னு சொல்லுவாங்க. அதை நான் ரொம்பக் கஷ்டப்பட்டு வரப் பண்ணிக்கிட்டேன். நான் ராஜா, ராணின்னு இல்லாட்டாகூட, மேடையில ஏறிட்டேன்னா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா? மானசீகமா, கதவெல்லாம் திறந்துவிட்டுக்கிட்டு, எனக்கு வேணுங்கற தெய்வங்கள், எனக்கு வேணுங்கற குருக்கள் எல்லாரையும் உள்ள கூப்பிட்டுவேன். என் மனசுலருந்து இதைச் சொல்றேன். மைக் டெஸ்ட் பண்ணிட்டுதான் நான் கச்சேரி தொடங்குவேன். மைக் டெஸ்ட் பண்றப்பவே, ‘கிருஷ்ணா! ராகவேந்திரசாமி! பாபா! எல்லாரும் வந்து உக்காந்துட்டீங்களா?’ன்னு மானசீகமா கேட்டுப்பேன். அப்புறம் எங்க அப்பா, அம்மா. அப்புறம் என் மாமனார். அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கார். நாம நம்பிக்கை வைக்கற எல்லாருமே நமக்குக் கடவுள்தான். அதனால அவங்களை எல்லாம் கூப்டு முன்னால உக்கார வச்சுடறது. அதுக்கப்புறம் ஏறி உக்காந்துச்சுன்னா, யாரையும் நான் பாக்கறதே கிடையாது. அதைப் பத்தி நான் கவலைப்படறதும் கிடையாது. ‘இதுதான் எனக்குத் தெரியும். இவ்வளவுதான் எனக்குத் தெரியும். இதை நான் உங்களுக்குப் பாடறேன்’னு நான் தைரியமா பாடிட்டு வந்துடுவேன்.
கேள்வி: இப்போ ‘அபங்’ அதிகமாப் பாடறீங்க. எங்க கத்துக்கிட்டீங்க? எப்படி?
அருணா சாய்ராம்: அபங் அதிகமா நான் பாடலை. ஒரு கச்சேரிக்கு ஒரு அபங்தான் நான் பாடறேன். பாடறதெல்லாம் கர்நாடகக் கச்சேரி. மும்மூர்த்திகளோட கிருதிகள், ராகம் தானம் பல்லவி, பாபநாசம் சிவனோட பாடல்கள், கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள் இதெல்லாம் நான் பாடறேன். எல்லாம் பாடி முடிச்சுட்டு, கடைசியா 20 நிமிஷம் இருக்குல்ல? அதுல ஒரு ‘அபங்’தான் பாடறேன். ஏன் உங்களுக்கு நான் அதிகமா ‘அபங்’ பாடற மாதிரி தோணறதுன்னு நானும் யோசனை பண்ணிப் பாத்தேன். அந்த அபங் வந்து, cyclonic wave ஒண்ணு வரும்ல? வந்தா, அது மத்த எல்லா அலையையும் அடிச்சுட்டுப் போயிடும். அந்த மாதிரி, இந்த ‘அபங்’ எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போயிடறது. அதைப் பாடின உடனே, ஜனங்களுக்கு மத்ததெல்லாம் மறந்து போயிடறது. அது ‘அபங்’கோட passion. அவங்களுக்கு ‘அபங்’தான் மனசுல நிக்கறது. நான் அபங்தான் பாடறேன்னு நினைக்கறாங்க. நான் பம்பாய்ல குழந்தையில இருந்து வளந்தவ இல்லையா? அங்க, எங்கயோ ஒரு இடத்துல யாரோ ஒருத்தர் இந்த ‘அபங்’கைப் பாடி, மனசுல அந்த ஆவி போயிடுச்சு. அது நான் விதிச்சதில்ல. சாமி விதிச்சது. அந்த விட்டல், பாண்டுரங்கனைக் குறிச்சுப் பாடறதுதான் ‘அபங்.’ மகாராஷ்ட்ராவுல இருக்கற பகவான். அவர் விஷ்ணு சொரூபம்தான். அந்த விட்டலை நோக்கிப் பாடறது. அந்த விட்டல் மூவ்மெண்ட்டே, பாமர ஜனங்களுக்கு பக்தி வரணுங்கறதுக்காக ஆரம்பிச்ச ஒரு மூவ்மெண்ட். 12-ம் நூற்றாண்டு, 14-ம் நூற்றாண்டுல. முதல்ல வந்தவர் ஞானேஸ்வர்ங்கற ஒரு துறவி. அவர்லருந்து ஆரம்பிச்சு, ஜனாபாய், துக்காராம், நாமதேவர்னு பலப் பல இசை மேதைகள் இருந்தாங்க. இவங்கள்ல ஒருத்தர் சக்கிலியர், ஒருத்தர் விவசாயி, ஒருத்தர் குயவர். இந்த மாதிரி சமூகத்தின் தரை மட்டத்துல இருக்கறவங்கதான் பெரிய துறவிகள் ஆனாங்க. படிப்பறிவே இல்லாத மக்களுக்கு, பக்தியினால அவங்க எப்படி ஒரு மேன்மையான நிலைய அடையலாம், அப்படிங்கறதுக்காக வந்த ஒரு மூவ்மெண்ட் அது. அதனால அதனோட வார்ப்புகள் ரொம்ப சிம்பிளா இருக்கும். ‘தீர்த்த விட்டலா, ஷேத்ர விட்டலா, தேவ விட்டலா, தேவ பூஜா விட்டலா’ இப்பிடி சொன்னா பாஷையே வேண்டமே! அப்படி ஒரு எளிமை. நான் தமிழ், நீ இந்தி, நீ மராத்தி... இது எல்லாத்தையும் தாண்டி அது போயிடறது. அதுனால மக்களுக்கு அது மனசுல நிக்குது. அதுதான் உண்மை.
கேள்வி: நீங்க கர்நாடக இசையை யாருக்காவது சொல்லித் தர்றீங்களா? உங்களுக்கு ஸ்டூடண்ட்ஸ் யாராவது இருக்காங்களா?
அருணா சாய்ராம்: ஒருத்தருமே கிடையாது. ஏன்னா, என்னோட வாழ்க்கைக் கதை வேற மாதிரி. நான் ரொம்ப வருஷங்களுக்கு ஒரு ஹவுஸ் ஒயிஃபா இருந்துட்டு, ரொம்ப கம்மியா பாடிட்டு, என் குழந்தைகள் எல்லாம் வளந்த பிறகுதான், நான் நிறைய பாட ஆரம்பிச்சேன். அப்புறம்தான் சென்னைக்கு வந்தேன். இப்போ முழு மூச்சா, கடைசி அஞ்சு, ஆறு வருஷமா பாடிக்கிட்டு இருக்கேன். இருந்தது எந்த இடம், இப்போ இருக்கறது எந்த இடம்? அந்த பயணம் இருக்கில்லையா? More than full time ஒர்க் பண்ணலைன்னா இவ்வளவு குறுகிய காலத்துல எல்லாருக்கும் தெரியும்படியா ஆகியிருக்க முடியாது. பகவத் சங்கல்பம் இருந்தாத்தான் அது நடக்கும். அதோட அதுக்கு அப்படி ஒரு உழைப்பைத் தந்தாகணும். அப்படிச் செய்யும்போது, இப்போ சொல்லிக் குடுக்கறதுக்கான சூழலும், மன நிலையும் இல்லை. ஆனா, சீக்கிரமே அது வந்துடும்னுதான் நினைக்கிறேன். யாருக்கும் சொல்லிக் குடுக்காம நான் இந்த உலகத்தைவிட்டுப் போயிடமாட்டேன். நிச்சயமா அது நடக்கும். இப்போதைக்கு இந்த பெர்ஃபார்மன்ஸ் முக்கியமா இருக்கு. அவ்வளவுதான்.
கேள்வி: கர்நாடக இசைங்கறது கச்சேரிகள்லயும், சீசன் டைம்லயும்தான் அதிகமாப் பேசப்படுது. கர்நாடக இசையை அதிகமா பரவாக்க என்ன செய்யணும்? அல்லது இப்போ இருக்கற நிலைமையே போதும்னு நினைக்கிறீங்களா?
அருணா சாய்ராம்: கர்நாடக இசைங்கறது ஒரு கிளாசிக்கல் ஆர்ட் ஃபார்ம். உலகத்துல எந்த எடமா இருந்தாலும் கிளாசிக்கல், கிளாசிக்கல்தான். அதுல ரொம்ப மாஸ் ரீச் கிடைக்கறது கஷ்டம். ஏன்னா, அதோட பர்ப்பஸ், இண்டலக்ச்சுவல் பியூப்பிள்ஸ்க்குதான். அதனால, அதனோட ரீச் ரொம்ப இருக்கணும்னு நாம எதிர்பார்க்கறது தப்பு. அதே சமயத்துல இது கொஞ்ச பேருக்கு மட்டும்தான்னும் நாம நினைக்க வேண்டியதில்ல. ‘அவங்களா வந்துதான் ரசிக்கணும். இல்லன்னா, நாம அதுக்காகக் கவலைப்பட வேண்டியதில்ல.’ அப்படின்னு நினைக்கறதும் தப்பு. ஏற்கெனவே கொஞ்சமாத்தான் போய் சேந்துண்டு இருக்கு. அதனால அதையும் நாம லிமிட் பண்ணினோம்னா, அது நம்மளோட தப்பு. அதனால, என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இதுக்கு என்ன செஞ்சுக்கிட்டு இருக்கேன்னுதான் நான் சொல்ல முடியும். அதோட கோட்பாடுகளை மீறாம இருந்துண்டே, புது ஆடியன்ஸை இதுக்குள்ள எவ்வளவு கொண்டுவரமுடியும் என்னால அப்படின்னு நான் முயற்சிதான் பண்றேன். அந்த முயற்சியில வந்ததுதான் பலப் பல விஷயங்களை நான் பாடறது. ஆனா அதுல அழகு இல்லாம இல்ல; அதுல தொன்மை இல்லாம இல்ல. அதே சமயத்துல இப்போ contemporoary யா இருக்கறதுல... அதைப் பாடி நீங்க கேக்கறப்போ, ‘என்ன இவ்வளவு மாடர்னா இருக்கே!’ அப்பிடின்னுதான் உங்களுக்குத் தோணும். அந்தக் காலத்துலயும் அட்வான்ஸா திங்க் பண்ணி நிறைய விஷயங்கள் பண்ணியிருக்காங்க. இதை நான் இப்போ வெளியில கொண்டு வர்றேன். அது என்னோட முயற்சி. அதுக்கு நல்ல பலன் இருக்கத்தான் செய்யுது. இப்போ சின்னச் சின்ன குழந்தைகள், ஒன்றரை வயசுக் குழந்தைகள், ஆறு மாசக் குழந்தைகள் எல்லாரையும் அவங்க பெற்றோர் தூக்கிட்டு வர்றாங்க. ‘அம்மா! உங்களோட ஃபேன்மா இவ!’ன்னு அவங்க சொல்றப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, அந்தக் குழந்தை ஒரு ‘மாடு மேய்க்கும் கண்ணே!’, ‘ஒரு விஷமக்காரக் கண்ணா!’ ஒரு அபங் பாட்டை கேக்கறதுக்காக ரெண்டு மணி நேரம் மத்ததை எல்லாம் கேக்கறது. ஒரு ராகம் தானம் பல்லவி, ஒரு தீட்சிதர் கிருதி கேக்கறது. நாளாவட்டத்துல அந்தக் குழந்தை தேறிடும். கர்நாடக இசை அதுக்குப் பிடிச்சுப் போயிடும். இல்லையா? என்னைப் பொறுத்தவரைக்கும், we must try to extend the borders, without over stretching the limits of this music. அப்படி செஞ்சா இந்த இசை பரவலாயிடும். முன்ன இருந்ததைவிட இப்போ எவ்வளவோ முன்னேறியிருக்கு கர்நாடக இசை. நிறையா பேர் கேக்கறாங்க இந்த இசையை.
கேள்வி: அதுக்குக் காரணம் மீடியா. இல்லையா?
அருணா சாய்ராம்: நிச்சயமா. மீடியாவோட காண்ட்ரிபியூஷனை சும்மா சொல்ல முடியாது. அது ரொம்ப பெரிய பார்ட் வகிச்சிருக்கு. நாம செய்யறதைச் செய்யணும். மீடியா, அது செய்யறதை செய்யணும். சபாக்காரங்களும் அமைப்பாளர்களும் அவங்களோட வேலையைச் செய்யணும். எல்லாருமா சேர்ந்து செய்யும்போது அது பரவும்.
கேள்வி: நீங்க பாடற ராகம்,தானம், பல்லவி எல்லாமே கிருதிகளை அடிப்படையாக் கொண்டு இருக்கு. ஏன்? அதைப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்க.
அருணா சாய்ராம்: இந்த ராகம், தானம், பல்லவிங்கறது இன்னொரு சப்ஜெக்ட். ஒரு காலகட்டத்துல ராகம், தானம், பல்லவிங்கறது ரொம்பப் பெரிய விஷயம். அது ஒரு இண்டலக்சுவல் மியூசிக். அதோட தாளக் கட்டு எல்லாம் ரொம்பக் கஷ்டமா இருக்கும். அதாவது, தாளத்தைப் போட்டுக்கிட்டு, அந்த சங்கதியைப் பாடும்போது, அப்பிடியே கத்தி முனையில நடக்கறா மாதிரி இருக்கணும். அப்போ அந்த ஆடியன்ஸ் எல்லாம், ‘ஆஹா! இவ்வளவு கஷ்டமான வேலையில, இப்போ பாரு இவரு தப்புப் பண்ணிடுவாரு’ ன்னு வெயிட் பண்ணிட்டே இருப்பாங்க. நாம தப்பு பண்ணாம பாடி முடிச்சிட்டாலே, பெரிய வெற்றி அது. அந்த மாதிரியான காலக் கட்டங்கள் இருந்தது. அது ஒரு கஷ்டமான எக்ஸர்சைஸ். ரொம்ப இண்டலக்ச்சுவலா, ரொம்ப மேத்தமேட்டிகலாவும் இருக்கணும். சுவையாவும் இருக்கணும். இத்தனையும் அந்தப் பல்லவியில வரணும். இப்போ அந்த மாதிரியான ஆடியன்ஸ் குறைவு. ஒரு கட்டத்துல ‘ராகம் தானம் பல்லவி’யும் ஒரு டிரை எக்ஸ்பீரியன்ஸா ஆயிடுச்சு. அதனால நான் இதுல என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிப் பாத்தேன். அப்போ, இந்த ராகம், தானம், பல்லவியையும் இண்டரஸ்டிங்கா பண்ணலாம்னு எனக்குத் தோணிச்சு. இந்த மாதிரி நான் மட்டும் இல்ல. நிறையபேர் பண்ணியிருக்காங்க. அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இருக்காரே, அவர் அந்தக் காலத்துலயே, ‘சங்கராபரணனை அழைத்தோடி வாடி! கல்யாணி! தர்பாருக்கு’ அப்படின்னு ஒரு பாட்டுப் பாடியிருக்கார். பல்லவிக்குள்ளயே ‘சங்கராபரணம்’, ‘தோடி’, ‘கல்யாணி’, ‘தர்பார்’னு எல்லா ராகமும் ஒரு வாக்கியத்துக்குள்ள வந்துடும். இது ஒரு பெரிய பியூட்டி. ஜனரஞ்சகம். அதே சமயம் பாண்டித்யம். இந்த மாதிரி ஒவ்வொரு காலக் கட்டத்துல ஒவ்வொருத்தர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் ‘ராகம் தானம் பல்லவி’ல ஒரு கதை இருக்கணும்னு நினைச்சேன். இது என்னோட அப்ரோச். அதுல கதையோ, ஒரு தீமோ, ஒரு anacdote மாதிரி இருந்துச்சுன்னா, மக்களுக்கு மனசுல இருக்கும்னு நினைச்சேன். அப்பிடியே நான் பாட ஆரம்பிச்சேன். ‘பாக்யதா லஷ்மி பாரம்மா!’ அப்படின்னு ஒரு பல்லவி. மத்யமாவதி ராகத்துல அமைஞ்சது. அந்தப் பாட்டையே நான் பல்லவியா மாத்தியிருக்கேன். பல்லவியில முதல் லைன் வருது இல்லையா அதை ‘ஆசு’ன்னு சொல்லுவாங்க. இங்கிலீஷ்ல refrainனு பேரு. அதை முடிச்சுட்டு ராகமாலிகைக்கு வந்துடுவேன். அஷ்ட லஷ்மிகளைப் பத்தின பாட்டு. அதுல எட்டு ராகங்கள். ஆதி லஷ்மி, தனலஷ்மி, தான்ய லஷ்மி, சந்தான லஷ்மி இப்படி ஒவ்வொரு லஷ்மியா ராகமாலிகைல கொண்டுவருவேன். அந்தந்த லஷ்மியோட தன்மைக்குத் தகுந்தாற்போல ராகம் இருக்கணும். சந்தான லஷ்மின்னா சஹானா. தைரிய லஷ்மின்னா அடானா. இப்படி ராகமாலிகையா மாறி வரும்போது, அது ஆடியன்ஸுக்குப் பிடிச்சுப் போயிடுது. ஏன்னா, ஒரு ரவுண்ட் எல்லா லஷ்மிகளையும் பாத்துட்டு வந்த திருப்தி அவங்களுக்குக் கிடைச்சிடுது. ரொம்ப ஒர்க் பண்ணினாத்தான் இதெல்லாம் கிடைக்கும்.
அதே மாதிரி, முருகன் பேர்ல ஒரு பல்லவி கம்போஸ் பண்ணினோம். எனக்குக் கொஞ்சம்பேர் இருக்காங்க. எனக்காக ஒர்க் பண்றவங்க. ஒரு டீம் மாதிரி நாங்க ஒர்க் பண்றோம். அவங்களோட சேந்துதான் நான் நிறைய புது முயற்சிகள் பண்றேன். தனி ஒரு மனுஷனால எதையுமே சாதிக்கமுடியாதுங்கறதை நம்பறவ நான். ‘முருகனே! குகனே! உனது பாதம் துணையே!’ அப்படின்னு ஒரு பல்லவி. இதுதான் பல்லவியோட ஆசு. அதுக்கப்புறம் ராகமாலிகைன்னா, ஆறு ராகம். முருகனுக்கு ஆறுபடைவீடு. அப்போ நாம ஒவ்வொரு ஊராப் போயி, முருகனை தரிசனம் பண்ற மாதிரியான ஒரு ஃபீலிங் வேணும். அதனால, திருப்புகழ் மாதிரியான ஒரு சந்தம், நானே கம்போஸ் பண்ணினேன். அதனால, ஸ்வரங்கள் பாடிட்டு, அது முடியும்போது, திருப்புகழ் மாதிரியான ஒரு கவிதையைச் சொல்லி, அந்த ஊரோட பெருமையைச் சொல்லி அந்த ராக மாலிகையை முடிச்சேன். அந்த மாதிரி நிறைய பல்லவிகள் நான் பாடியிருக்கேன். சமீபத்துல நான் பாடினது ‘மும்மூர்த்திகள் வந்தனம்’ங்கற பல்லவி. ‘தியாகராஜாய நமஸ்தே! குரு குஹாய! ஷ்யாம கிருஷ்ணாய!’ அப்படின்னு மூணு பேரைச் சொல்லி பாட்டு. அதுல தியாகராஜரைப் பத்தி வரும்போது, ராகமாலிகல முழுக்க நாட்டை, கௌளை, வராளி, ஆரபி, ஸ்ரீராகம்... அவரோட பஞ்சரத்ன கீர்த்தனைகள் வர்ற மாதிரி பண்ணினோம். இது ஒரு solid work. அதை கன்வின்சிங்கா பண்ணணும்னா, ரொம்ப பிரிபேர் பண்ணணும். அதுல தாளங்கள் எல்லாம் கொஞ்சம் கஷ்டமா போடணும். ஏன்னா, நம்ம பாண்டியத்தைக் காண்பிக்கறதுக்காக. யூஷுவல் தாளம் போட்டோம்னா, அவ்வளவுதானான்னுடுவாங்க. அதனால என்னோட ராகம், தானம், பல்லவி இந்த மாதிரியான ஒரு அப்ரோச்சைக் கொண்டிருக்கு.
கேள்வி: கர்நாடக இசைக்கச்சேரிகள்ல நிறைய மாற்றங்கள் வந்திருக்கு. ஸ்பான்ஸர்ஸ் நிறைய வர ஆரம்பிச்சுட்டாங்க. கச்சேரியும் கிட்டத்தட்ட சினிமா மாதிரி ஒரு பொழுதுபோக்கு அம்சமா ஆயிடுச்சு. ஆர்ட்டிஸ்ட்கூட எதிர்காலத்துல ஸ்பான்ஸர்ஸை நம்ப வேண்டிய சூழலா ஆயிடும் போல இருக்கு. இது நல்ல போக்கா?
அருணா சாய்ராம்: எந்த ட்ரெண்டா இருந்தாலும் அதை யூஸ் பண்றது ஒரு விஷயம். மிஸ் யூஸ் பண்றது இன்னொரு விஷயம். அதனால அந்த விஷயத்தை நாம வந்து தப்புன்னு சொல்ல முடியாது. பயன்படுத்தறவங்களோட நோக்கம்தான் சில சமயத்துல தப்பா போயிடுது. அதுதான் பிராப்ளம். ஸ்பான்ஸர்ஸ் வந்தது ஒரு விதத்துல நல்ல விஷயம். ஏன்னா, கர்நாடக சங்கீதத்துல கச்சேரி பாடறவங்களுக்கு உரிய சன்மானமே இல்லாம எல்லாம் நடந்த காலம் உண்டு. 100 ரூபா, 150 ரூபா சன்மானத்துக்கெல்லாம் பாடின காலம் இருக்கு. The sponsors have given new life to this profession. அதை நாம இல்லன்னு சொல்ல முடியாது. நானே பாம்பேலருந்து மூன்றாம் வகுப்பு டிக்கெட் எடுத்து, சொந்த செலவுல சென்னை வந்து, பாடிட்டுப் போன காலம் உண்டு. அப்போ ஒரு டீ வாங்கி சாப்பிடறதுக்குக்கூட யோசிப்பேன். ஏன்னா, எல்லாம் நம்ம சொந்தக் காசு. இங்க ஒரு சபாவுல பாடுவேன். மொத்தமா அவங்க குடுக்கறது, அம்பதோ, எழுபத்தஞ்சு ரூபாயாவோத்தான் இருக்கும். அது நம்ம ஆட்டோ சார்ஜுக்கே சரியாப் போயிடும். அப்படியே திரும்பிப் போயிடவேண்டியதுதான். அப்படி இருந்த நிலைமை மாறிடுச்சு. இப்போ எங்களோட ஜூனியர் இருக்காங்களே, அதிர்ஷ்டவசமா அவங்களுக்கு அந்த நிலைமை இல்ல. அப்போ நம்பிக்கையே இல்லாம இருந்ததே! சங்கீதத்தை எதுக்காக நாம பாடறோங்கற ஆத்ம பரிசோதனை எல்லாம் பண்ணிட்டுதானே நாங்க பாடிக்கிட்டு இருந்தோம்? ஒரு நாளைக்கு எவ்வளவு பணத்தை நம்ம பாக்கெட்லருந்தே செலவழிக்க முடியும்? இல்லையா? அப்படி எல்லாம் இருந்த காலக் கட்டங்கள் போயி, ஸ்பான்ஸர்ஸ் வந்ததுக்கு அப்புறமா ஓரளவுக்கு அது இம்ப்ரூவ் ஆயிடுச்சு. malpractice ங்கறது எல்லா இடத்துலயும் நடக்கும். இந்தத் துறையில மட்டும் இல்ல. இது ஒரு different issue, not the issue of sponsors. அதை எல்லாரும் புரிஞ்சிக்கிட்டாங்கன்னா, ஸ்பான்ஸர்ஸ்ங்கறது நல்ல விஷயம்னு எல்லாருக்கும் புரிஞ்சிடும்.
கேள்வி: உங்களுடைய பூர்வீகம், உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க.
அருணா சாய்ராம்: என்னோட பூர்விகம் அப்பாவுக்கு திருவாரூர், அம்மாவுக்கு திருச்சி. பிறந்து வளந்தது பாம்பேயா இருந்தாலும், இங்க வந்தா திருவாரூர்ல ஒரு மாசம், திருச்சியில ஒரு மாசம்னு இருப்பேன். தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்துட்டுதான் போவோம். ஒவ்வொரு திருவையாறு ஆராதனை விழாவுக்கும் எங்க அப்பா என்னை அøச்சுண்டு போவார். நிறைய பெரியவங்களை அடிக்கடி பாத்துண்டு இருந்ததால, அடிக்கடி இங்க வந்துட்டு போனதால தமிழ்க் கலாசாரம் என்கூட இருந்துக்கிட்டே இருந்தது. நான் சொன்னேன் இல்லையா, தமிழ் அறிஞர்கள் அத்தனைபேரும் எங்கவீட்டுக்கு வந்திருக்காங்க. அவ்வளவு பெரிய மனுஷங்களை எல்லாம் எனக்கு எங்க அப்பாவும் அம்மாவும் அடையாளம் காட்டிக்கிட்டே இருந்தாங்க. அதுதான் என்னோட அட்ரஸ். பெரிய பெரிய இமையமலை மாதிரியான மனிதர்களை எல்லாம் வீட்டுக்குள்ளயே கொண்டுவந்து காமிச்சிட்டாங்க, நான் குழந்தையா இருக்கறப்பவே. அந்த ஒரு வரப்பிரசாதம்தான் என்னை ஒரு நல்ல இடத்துக்குக் கொண்டு வச்சிருக்கு.
என்னோட குடும்பத்தைப் பத்திச் சொல்லணும்னா, என் வீட்ல அப்பா, அம்மா, நான், என் சகோதரர் அவ்வளவுதான். எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆயிடுச்சு. என் கணவரும் அவர் வீட்டுக்கு ஒரே பையன் தான். அவருக்கு ஒரு சகோதரி. மாமியார் இருக்காங்க. மாமனார் சமீபத்துலதான் இறந்தார். ஆக, அவரோடதும் சின்ன குடும்பம்தான். எனக்கு ரெண்டு மகள்கள். ரெண்டுபேருமே வெளிநாட்லதான் இருக்காங்க. அவங்களுக்கும் இந்தக் கலையில ரொம்ப இண்டரஸ்ட் உண்டு. ஆனா, இதை புரொஃபஷனலா எடுத்துக்கல.
என் கணவர் ஒரு பெரிய நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவா இருந்தார். அவர் எனக்காகத்தான் அவரோட வேலையைவிட்டார். பாம்பேயில எல்லாத்தையும் விட்டுட்டு இங்க சென்னைக்கு வந்துட்டோம்.
கேள்வி: ஒரு கர்நாடக இசைப் பாடகர் ஏன் பாடறார்? அதற்கான நோக்கம் என்னவா இருக்கு?
அருணா சாய்ராம்: முதல்ல நம்மளை ஆன்மிக நிலைக்குக் கொண்டுபோயிட்டா, ஆட்டோமேட்டிக்கா ஆடியன்ஸும் அந்த நிலைக்கு வந்துடுவாங்க. இதுதான் அந்த நோக்கம். சங்கீதத்தைப் பாடும்போது, நாம தன்னை மறந்து, நமக்குத் தெரிஞ்சது என்னவோ, அதை நிலையான ஒரு மனசோட சரணாகதியா சுவாமிக்கு அதை அர்ப்பணம் பண்ணிட்டோம்னா, அந்த ரசிகனையும் ஒரு கடவுளோட அம்சமா நாம பாக்கலாம். ‘எனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்யா. குத்தமோ, குறையோ எனக்குத் தெரிஞ்சதை நான் தன்னை மறந்து பாடறேன், கேளு’ அப்பிடின்னு சொல்லிட்டா ரசிகர்கள் நிச்சயமா நம்மளோட வந்துடுவாங்க.
கேள்வி: கர்நாடக இசைங்கறது இலக்கணம் கொண்டது. இலக்கணம்தான் அடிப்படை. அதை மீறுவதும் நடக்குது. ரசிகர்கள்ல, சிலருக்கு குழைவு, உருக்கம் பிடிக்குது. சிலருக்குப் பிடிக்கறதில்லை. ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு பாணி வச்சிருக்காங்க. இது சரியா?
அருணா சாய்ராம்: கர்நாடக இசைக்கு இலக்கணங்கறது அத்தியாவசியமான ஒரு விஷயம். கரகாட்டம் ஆடறதுன்னாக்கூட அதுக்குன்னு சில இலக்கணங்கள் இருக்கு. அதுக்கு ஒரு ட்ரெயினிங் இருக்கு. அந்த பயிற்சி இல்லாம அவங்களால அந்தக் கரகத்தைத் தலையில தூக்க முடியாது. பாக்கறவங்களுக்கு அது எளிமையா தெரியறதால, அதை அலட்சியமா நினைச்சுட கூடாது. நாட்டுப்புறக் கலைகள்லயுமே ஒண்ணொண்ணுலயும் ஒரு டெக்னிக் இருக்கு. அதைத்தான் நாம இலக்கணம்னு சொல்றோம். அது ஒரு ரூல், அது ஒரு டிசிப்ளின். எந்தச் சின்ன விஷயமா இருந்தாலும் ஒரு டிசிப்ளினைத் தாண்டிதான் நாம வரவேண்டியிருக்கு. கர்நாடக சங்கீதம் மாதிரியான ஒரு உச்சகட்ட கலை வடிவத்துல இலக்கணம் ரொம்ப முக்கியம். ஆனா, இந்தக் கலையோட அழகு எதுல இருக்குன்னா, அந்த இலக்கணத்தைக் கத்துண்டு, அதை மறக்கணும். ஒரு ஸ்டேஜ்ல, மோகனம் சரியாப் பாடறோமா, சங்கராபரணம் சரியா வருதான்னு கவலைப்பட்டுண்டே பாடறது போயி, மோகனம் அப்படின்னா அதோட ரசம், அதோட பாவம், அதோட அழகு அதோட ஃபீல்தான் ஞாபகத்துக்கு வரணும். அது வந்து, என் உடம்புல ஊறி நான் பாடும்போதுதான் ரசிகர்களைப் போய்ச் சேரும். அதை நான் பண்ணித்தான் ஆகணும். இலக்கணத்து வழியாப் போயி, இலக்கணத்தைத் தாண்டணும். அதே சமயம் இலக்கணம் இல்லாம போனேன்னா என் இசை தப்பாயிடும். அதனால, இலக்கணம் தேவை. அதுக்கப்புறம் வர்ற கல்பனைலதான் தனித் தன்மை இருக்கும். வேற வேற பாணி வரும். மதுரை மணி ஸ்டைல் வேற. செம்மங்குடி ஸ்டைல் வேற. ஒரே ஒரு தோடி ராகத்தை எல்லாப் பாடகர்களும் வேற வேற மாதிரிப் பாடுவாங்க. அதுலதானே அழகு இருக்கு? அந்த வெரைட்டி இல்லன்னா, ‘ஓ மதுரை மணி மாதிரியே ஜி.என்.பி. பாடறார். இதை ஏன் கேக்கணும்?’னு நினைச்சிடுவாங்க. இதெல்லாமே வேற வேற எக்ஸ்பீரியன்ஸ்தானே! அது இல்லன்னா, தனித்தன்மையோ நம்மளோட ஆளுமையோ இருக்காது.
கேள்வி: அடுத்த தலைமுறைக்கு நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க?
அருணா சாய்ராம்: அடுத்த தலைமுறை ரொம்ப பிரில்லியண்ட்டா, இண்டலிஜெண்ட்டா இருக்காங்க. அவங்களுக்கே எல்லாம் தெரியறது. புதுசா எதுவும் சொல்லித் தெரியவேண்டியதில்லன்னுதான் நினைக்கிறேன்.
நேர்காணல் - பாலு சத்யா
(மே 2009 அம்ருதா மாத இதழில் வெளியான நேர்காணல்)
0
Monday, June 29, 2009
முப்பதாயிரத்தில் ஒரு குறும்படம்
முதல் தலைமுறை
‘சாமி! புள்ளையாரப்பா! எப்பிடியாவது என்னை கணக்குலயும் இங்கிலீஷ்லயும் மட்டும் பாஸ் பண்ண வச்சுடு. அப்பிடியே கந்தசாமி வாத்தியாரை மட்டும் வேற ஸ்கூலுக்கு மாத்திடு!’ இப்படி அரசமரத்தடி பிள்ளையாரிடம் வேண்டிக் கொள்கிற கிராமத்துச் சிறுவர்களை நிச்சயம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம்தான் ‘முதல் தலைமுறை.’
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விஜயன் சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் பர்மா பஜாரில், இசைக் கருவிகளை விற்கும் ஒரு கடையை நடத்தி வரும் சாதாரண தெருக்கடை வியாபாரி. வடசென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாராக இருக்கிறார்.
“ஆறு மாசத்துக்கு முன்னாடி ‘பதிமூணில் ஒண்ணு’ன்னு ஒரு சிறுகதையைப் படிச்சேன். எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அந்தச் சிறுகதையை எழுதியிருந்தார். அதைப் படிச்சவுடனேயே அதை எப்பிடியாவது படமா எடுத்துடணும்னு தோணிச்சு. தோழர்களோட உதவியோட குறும்படமா எடுத்துட்டேன். மொத்தம் ஏழு நாள் ஷூட்டிங் நடந்தது. ஆவடி பக்கத்துல இருக்குற பாண்டேஸ்வரம், சென்னையிலருந்து இருபத்தஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற ஞாயிறு கிராமம்னு பல இடங்களுக்குப் போய் படமெடுத்தோம். அந்த கிராமத்துல இருக்குற மக்களுக்கு குறும்படம்ங்கறதே புதுசான ஒண்ணா இருக்குது. அது நல்ல அனுபவம்” என்கிறார் இயக்குநர் விஜயன்.
சரி. ‘முதல் தலைமுறை’ குறும்படத்தின் கதை என்ன?
நடராஜன். ஒன்பதாவது முடித்துவிட்டு பத்தாம் வகுப்புக்குப் போகும் கிராமத்துச் சிறுவன். அவனுடைய அப்பாவுக்கு ஆடு மேய்ப்பதுதான் பரம்பரைத் தொழில். ‘படித்தது போதும். ஆடு மேய்க்கப் போ!’ என்கிறார் அப்பா. அவனுடைய மாமா பட்டாளத்தில் இருந்தவர். படிப்பின் அருமை தெரிந்தவர். அவர் படிப்பு முக்கியம் என்று அவன் அப்பாவிடம் வலியுறுத்துகிறார். படிக்கப் போகிறான் நடராஜன்.
தமிழ்நாட்டு கிராமத்து மாணவர்களுக்கே உரித்தான சாபம் கணிதமும் ஆங்கிலமும். அது நடராஜனையும் விட்டுவைக்கவில்லை. குறைந்த மார்க் வாங்கியதற்காக வறுத்தெடுக்கிறார் கணக்கு வாத்தியார். கணக்கில் பாஸாகவேண்டும் என்பதற்காகவே குலசாமியான சுடலை மாடசாமியில் இருந்து மாறி, மேட்டுத் தெருப் பையன்கள் கும்பிடும் பிள்ளையாரைக் கும்பிடுகிறான் நடராஜன். பிறகு, அந்தக் கணக்கு வாத்தியாரிடமே ட்யூஷன் சேருகிறான். கணக்கில் பாஸாகிறான்.
அடுத்து ஆங்கிலத்தில் பாஸாகவேண்டும் என்பதற்காக அடுத்த ஊரில் இருக்கும் சர்ச்சுக்கு நடந்தே போய் வேண்டிக்கொள்கிறான். பிறகுதான் தெரிகிறது, இயேசுநாதருக்கே ஆங்கிலம் தெரியாது, அவருடைய தாய் மொழி ஹீப்ரு என்பது. அந்தச் சமயத்தில் அவனுடைய பள்ளிக்குப் புதிதாக வருகிறார் ஒரு ஹெட்மாஸ்டர். கருணை அடிப்படையில் இதுவரை பாஸாகிவந்த பதிமூன்று மாணவர்களின் பெற்றோர்களை அழைக்கிறார். ‘இதோ பாருங்க! நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட். இனிமே நான் இந்த ஸ்கூலுக்கு நல்ல ரிசல்ட் காண்பிக்கணும். உங்க பசங்களை வேற ஏதாவது ஸ்கூல்ல சேத்துவிட்டுடுங்க’ என்று ஒரே போடாகப் போடுகிறார். அந்தப் பதிமூன்று மாணவர்களில் நடராஜனும் ஒருவன். இந்தப் பள்ளியைவிட்டால் நடராஜன் வேறு எங்கே போவான்? அவனுடைய தலைமுறையிலேயே முதன்முதலாக படிக்கவந்தவன் அவன். எப்படியாவது அவனைத் திரும்ப பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டி, நடராஜனும் அவனுடைய மாமாவும் திரும்பத் திரும்ப ஹெட்மாஸ்டரைப் பார்க்கப் படையெடுக்கிறார்கள். அத்தோடு முடிகிறது படம்.
“இந்தப் படத்தை சென்னை புத்தகக் கண்காட்சியிலயும் சேலத்துலயும் திரையிட்டோம். சேலத்துல ஒரு தலைமையாசிரியர் ‘இது ஆசிரியர்களுக்கு எதிரா இருக்கு’ன்னு சொன்னார். ‘ஒரு படைப்புன்னா சில குறைகளை சுட்டிக்காட்டத்தான் செய்யும்’னு இதுக்கு தமிழ்ச்செல்வனே பதில் சொன்னார்”என்கிறார் விஜயன்.
நடராஜனாக நடித்திருக்கும் நிஜந்தனும் மாமாவாக நடித்திருக்கும் இசையரசனும் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். முரளிதரனின் உறுத்தாத இசையில் நா.வே. அருளின் இரண்டு பாடல்களும் இனிமை. கரிசல் காட்டு கிராமத்துக்கே நம்மை அழைத்துப் போய்விடுகிறது புதுயுகம் நடராஜனின் கேமரா.
ஒரு பக்கம், முப்பது கோடி, முந்நூறு கோடி என்று படா பட்ஜெட்டுகளில் திரைப்படங்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. எளிமையான, நல்ல சேதியைச் சொல்லும் இந்தக் குறும்படத்தின் மொத்தச் செலவு எவ்வளவு தெரியுமா? முப்பதாயிரம் ரூபாய்.
நாட்டின் ஜீவனாக இருப்பது கிராமங்களா? ஆம். நிச்சயமாக. அப்படியானால் அரசுப் பள்ளிகளில் மட்டும் கல்வித்தரம் கொஞ்சமும் உயராமல் இருப்பது ஏன்? இந்தக் கேள்வி குறும்படம் பார்த்து முடிந்ததும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
Friday, June 19, 2009
பகத்சிங் நூல் விமர்சனம்
பகத்சிங் - செவிகளைச் சாய்த்த குரலொலி
இந்நூலின் முதல் அத்தியாயத்தின் தலைப்பு ‘முற்றும்'. இதிலிருந்தே பகத் சிங் என்கிற போராளியின் வாழ்க்கை அவரோடு முடிந்துவிடவில்லை என்பதை சூசகமாக உணர்த்திவிடுகிறார் நூலாசிரியர் முத்துராமன்.
‘இந்திய விடுதலைப் போராட்டம்' என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ‘இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.
ஆட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.
இன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல். இந்நூலில் பகத் சிங்கின் சரித்திரம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம். நூலைப் படித்து முடித்ததும் இப்படித்தான் தோன்றுகிறது.
பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரையும் தூக்கிலேற்றுகிறார்கள் போலீஸ்காரர்கள். சிறைச்சாலையின் பின்வாசல் வழியாக அவர்களுடைய உடல்களைக் கொண்டுவந்து ஒரு டிரக்கில் ஏற்றுகிறார்கள். டிரக் சிறைச்சாலையிலிருந்து கிளம்பி ஒரு நதிக்கரையில் வந்து நிற்கிறது. அது சட்லெஜ் நதியிலிருந்து பிரிந்து ஓடும் ஒரு சிறிய நதி. அந்த நதிக்கரையில் மூவரின் உடல்களும் அரைகுறையாக எரிக்கப்பட்டு, நதியில் வீசப்படுகிறது. இந்தத் தகவல்களை உள்ளடக்கித் தொடங்குகிறது முதல் அத்தியாயம். அதற்குப் பிறகு அவருடைய குடும்பப் பின்னணி, அவருடைய பிறப்பு, இளமைப் பருவம், போராட்டம் என விரிகிறது.
மிகுந்த கவனத்துடன், கொஞ்சம்கூட உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் பகத் சிங்கின் வரலாற்றைச் சொல்கிறார் எழுத்தாளர் முத்துராமன். வரலாற்றை எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையாகச் சொல்லவேண்டும் என்கிற தெளிவும் எழுத்தில் தெரிகிறது. ஆனால், நூலைப் படிக்கும்போது நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை.
பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்ட பிறகும் அவருடைய போராட்டம் ஓயவில்லை. ‘சிறையில் அரசியல் கைதிகளாக நடத்தப்படவேண்டும்', ‘அடிப்படை வசதிகள் வேண்டும்' போன்ற ஏழு கோரிக்கைகளை உள்ளடக்கி போராட்டம் நடத்துகிறார்கள் பகத் சிங்கும் அவருடைய தோழர்களும். சிறையில் அறுபத்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஜதீந்திரநாத் தாஸ் இறந்துபோகிறார்.
“நமது கருணை நிறைந்த சர்க்கார் நீரோ மன்னனை மிஞ்சிவிட்டது. அந்த வாலிபர்களின் மரணப்படுக்கையில் உட்கார்ந்துகொண்டு வயலின் வாசிக்கிறது. தியாகமும் கடமை உணர்வும் கொண்ட இளைஞர்கள் உயிரை விடுவார்களே தவிர, உண்ணாவிரதத்தை இடையில் நிறுத்த மாட்டார்கள்” என்று சொல்லி, அடுத்த நாள் மத்திய சட்டமன்றத்தை ஒத்தி வைக்கிறார் மோதிலால் நேரு.
இப்படிச் சின்னச் சின்னத் தகவல்களையும் பொருத்தமான இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நூலாசிரியர். அந்தத் தகவல்கள் பகத் சிங்கின் வரலாற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றன. மிக எளிமையான நடை, நூலோடு ஒன்றிப் போகச்செய்துவிடுகிறது. உண்மைச் செய்திகளை மட்டுமே எழுத்தில் கொண்டுவரவேண்டும் என்கிற நூலாசிரியரின் தீர்மானம் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம், பகவதி சரணின் மனைவி துர்காவுடன் ரயிலில் ஏறி பகத் சிங் லக்னோவுக்குத் தப்பிச் சென்ற நிகழ்வில் நூலாசிரியர் இப்படி எழுதுகிறார்: “இந்தச் சம்பவம் வரலாற்றில் அவரவர் விருப்பம்போல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.”
மேலும், பகத் சிங், சுகதேவுக்கு எழுதிய கடிதம், நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய துண்டுப் பிரசுரத்தின் முழு உள்ளடக்கம், லாகூர் சிறை அதிகாரிக்கு பகத் சிங் எழுதிய கடிதம், பட்டுகேஷ்வர தத்துக்கு எழுதிய கடிதம், பகத் சிங்கின் கடைசிக் கடிதம் ஆகியவை முழுமையாக இடம்பெற்றிருக்கின்றன. பகத் சிங்கை, அவருடைய வாழ்க்கையை, அவருடைய லட்சியத்தைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.
நாடாளுமன்றத்தில் பகத் சிங் வீசிய, ‘ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் ஆர்மி'-யின் துண்டுப் பிரசுரம் இப்படிச் சொல்கிறது:
“மனித வாழ்வின் புனிதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனிதனின் வளமான எதிர்காலத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அத்தகைய எதிர்காலம் குறித்து நாங்கள் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். உண்மைதான். ஆனால், இப்போது நாங்கள் ரத்தம் சிந்தும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். அதற்காக வருத்தப்படுகிறோம்.”
0
நூல்: துப்பாக்கிவிடு தூது
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018.
விலை: ரூ. 70/-
புத்தகத்தை வாங்க.
Wednesday, June 17, 2009
அசோகமித்திரன் நேர்காணல்
‘அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள்’
-அசோகமித்திரன்
தமிழின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம் ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வருபவர்.
இவரது பல படைப்புகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1996-ம் ஆண்டு, இவருடைய ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளைப் போலவே நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் கூர்மையாக இருக்கின்றன. இனி அவருடன் நேர்காணல்...
கேள்வி:உங்கள் கதைகளுக்கான மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்? அதுவரை தமிழில் பயன்பாட்டில் இல்லாத மொழி உங்களுடையது. மிகவும் அப்ஜெக்ட்டிவ்வாக, செய்தி சொல்லும் தொனி அதில் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?
அசோகமித்திரன்: நானாகத் திட்டமிட்டு என் நடையை உருவாக்கிக்கொள்ளவில்லை. உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ படைப்பை ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது என் எட்டாவது வயதில் படித்தேன். கல்கியின் ‘தியாக பூமி’யையும் அதே காலத்தில் படித்தேன். உண்மையில் என் நடையை அப்படைப்புகள்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.
கேள்வி: தமிழ்க் கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்று அது ஓர் முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை எப்படி செய்தீர்கள்?
அசோகமித்திரன்: ஆசிரியரின் குரல் ஒரேயடியாக இல்லை என்று கூறமுடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால், உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஓர் நண்பனுக்கு யோசனை கூறுவது போல அக்குரல் உள்ளது.
எழுத்துப்பணியும் ஓரளவு அதுவாக அமைந்ததுதான். அந்த நாளில் 35 வயதில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஓர் வேலைக்காக நான் கார் ஓட்டும் உரிமம்கூடப் பெற்றேன். எனக்கு வேலை தேடிக்கொள்ளத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். எழுதும் எதையும் திருத்தமாகச் செய்யவேண்டும் என்று என் பள்ளி நாட்களிலிருந்தே தீர்மானமாக இருந்தேன்.
கேள்வி: 70களில் மாற்று அரசியல், மாற்று கலை இலக்கிய முயற்சிகள் நிறைய நடந்தன. தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலர் இக்காலகட்டத்தில் உருவாயினர். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் அப்படியொரு உற்சாகம் இல்லை. உங்கள் பார்வையில், இந்தத் தேக்கத்துக்குக் காரணம் என்ன?
அசோகமித்திரன்: நான் தேக்கம் என்று கூற மாட்டேன். புது எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சூர்யராஜன், வா.மு. கோமு, ஜாகிர் ராஜா போன்றோர் நன்றாகவே எழுதுகிறார்கள். மதிப்பீடுகள் விஷயத்தில் சற்றுத் தயக்கமே. ஆனால், அவர்கள் நல்ல எழுத்தாளர்களாக உருவாக வாய்ப்பு உண்டு.
கேள்வி: குறுநாவல் வடிவத்தைச் செம்மைப்படுத்தியவர் நீங்கள். அதற்கான இலக்கணத்தை தமிழில் பிரபலப்படுத்தியவரும் நீங்களே. நாவல் எழுதுவதைவிட, குறுநாவலில் உள்ள சௌகரியங்கள் என்னென்ன? ஒரு கரு, நாவலுக்குள்ளதா, குறுநாவலுக்கானதா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?
அசோகமித்திரன்: குறுநாவல் ‘தீபம்’ என்ற பத்திரிகைக்காகத் திட்டமிடப்பட்டது. உண்மையில் இது ஒரு பத்திரிகைத் தேவைக்காக முயற்சி செய்தது. ‘தீபம்’ எனக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. பல கட்டுரைகளும் எழுதினேன்.
நாவல் எழுதும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. உண்மையில் அது ஒரு பெரிய தடங்கல்தான். ஆனால் அதையும் மீறித்தான் நாவல் எழுதவேண்டியிருக்கிறது. இப்போது நான் எழுதிவரும் நாவலின் ஆரம்பம் எனக்கு மறந்துவிட்டது. ஐந்தாம், ஆறாம் அத்தியாயங்கள் மூன்று உள்ளன.
என் கதைகள், நாவல்கள் எல்லாமே ஒரு தொடர்பு உள்ளவையே. ஆதலால் தனியாகக் கரு என்று நான் முடிவு செய்து கொள்வதில்லை. ஆனால், அப்படி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். Plot வைத்து எழுதியதிலும் மகத்தான எழுத்தாளர்கள் உண்டு.
கேள்வி: எண்ணற்ற எழுத்தாளர்கள் One time wonders ஆக இருந்திருக்கிறார்கள். ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு கதை என்று சிறப்பாக எழுதிவிட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். நீங்கள் கன்சிஸ்டெண்ட்டாக, தொடர்ந்து, பெரிய வருவாய் தரவில்லை எனினும் தமிழில் கதைகள் எழுதுவதைச் செய்துவந்திருக்கிறீர்கள். இதற்கான மனத் தயாரிப்பு என்ன? தேவைப்படும் மனோபலம் என்ன?
அசோகமித்திரன்: இது நம் வாழ்க்கைப் பார்வையைச் சார்ந்தது. நமக்குத் திட்டவட்டமாக பார்வை இருந்து, நம் மனதிற்கிணங்க எழுதினால் அதில் நிச்சயம் ஒரு சீரான தன்மை இருக்கும்.
கேள்வி: நீங்கள் கணையாழி ஆசிரியப் பொறுப்பு வகித்திருக்கிறீர்கள். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
அசோகமித்திரன்: இதுவும் நான் நாடிச் சென்றதல்ல. முதல் இதழ் தயாரானபோது அதன் பொறுப்பாளர் ‘சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு டில்லிக்குப் போய்விட்டார். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று அன்று எனக்குத் தெரியாது. அது அச்சான இடத்தில், ஒருவர் எப்படிப் பிழை திருத்துவது என்று ஓரிரண்டு குறிப்புகள் தந்தார். அப்புறம் பக்கம் அமைப்பது, படங்கள் எந்த இடத்தில் போடுவது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் கடினமான பொறுப்பு பிரதிகளைக் கட்டு கட்டி இரயில்வே பார்சல் செய்வது, தபால் அலுவலகத்தில் சேர்ப்பது. ஏன் இதெல்லாம் செய்தேன், இதற்கு என்ன பிரதிபலன் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
கையெழுத்துப் பிரதி அந்த எழுத்தாளனைப் பற்றி ஒரு தோற்றம் தரும். அவனுடைய கதையிலிருந்து அவனுடைய சூழ்நிலை முதலியன ஊகிக்கலாம். எனக்கு ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியும் ஒரு சவாலாக இருக்கும். கதை நன்றாக இருந்தால் பிரதியைத் திருத்தித் திருப்பி எழுதிவிடுவேன். சில எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை அச்சுக் கோப்பவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சுஜாதா, இந்திராபார்த்தசாரதி, தி. ஜானகிராமன் போன்றோர் கையெழுத்தைப் புரிந்துகொள்வது கடினம்.
கேள்வி: ஒரு கதையை, நாவலை எத்தனை முறை திருத்திச் செம்மைப்படுத்துவீர்கள்? செம்மைப்படுத்தும்போது, என்னென்ன விஷயங்களை மனத்தில் கொண்டு திருத்துவீர்கள்?
அசோகமித்திரன்: செம்மைப்படுத்துவேன். கையெழுத்து சட்டென்று புரியாது என்றால் அந்தப் பக்கத்தை இரண்டாம் முறை எழுதிவிடுவேன். எனக்கு அச்சுக் கோப்பவர்களை சிரமப்படுத்துவது சிறிதும் பிடிக்காது. அந்த நாளில் ஈய அச்சுக்களை நால் முழுக்க நின்றுகொண்டே அச்சுக் கோப்பார்கள். பலர் மிகவும் ஏழ்மையான பெண்கள்.
எந்த எழுத்தாளனும் எழுதியதை மறுமுறை படிப்பதுதான் முறை என்று நான் நினைக்கிறேன். சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் படிக்கும்போதுதான் செய்யவேண்டும்; செய்ய முடியும்.
கேள்வி: நீங்கள் செய்நேர்த்தியில் (craftmanship) சிறப்பானவர். உங்கள் கதைகள், கச்சிதமானவை. வடிவம் செம்மையானவை. இதற்கான பயிற்சி என்ன? எப்படி இதை நீங்கள் அடைந்தீர்கள்?
அசோகமித்திரன்: அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள். உண்மையில் சிலர் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்றுகூடக் கூறுவேன். எனக்கு ராஜவேல் என்பவரின் கணிப்பு மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவர் சொல்லி ‘விழா’ என்ற குறுநாவலில் பாரா பாராவாக வெட்டியிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்று அறிய மிகவும் வருத்தமாக இருந்தது. அதே போல சாமி என்ற அச்சுக் கோப்பவர். அவர் நாடகங்களிலும் நடிப்பார். என்னுடைய ‘காத்திருத்தல்’ சிறுகதை நாடகமாக்கப்பட்டபோது அவர்தான் அரசியல் தொண்டன் வேடம் தரித்தார். நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் தயாரித்த டாக்டர் ருத்ரன் ஒரு முறைக்கு மேல் அதை மேடையேற்றவில்லை.
கேள்வி: நீங்கள் ஒரே மூச்சில் சிறுகதை எழுதுவீர்களா? இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா? நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்டமிடுவீர்கள்? அத்தியாயங்களையும் சம்பவங்களையும் முன்னரே யோசித்துவைத்திருப்பீர்களா?
அசோகமித்திரன்: விட்டுவிட்டுத்தான் எழுதுவேன். எழுதுவதும் ஒரு கட்டத்தில் களைப்பு, சோர்வு உண்டு செய்யும். இரவில் படுக்கும்போது ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அடுத்த நாள் சுமார் ஒரு மணி நேரம் எழுதுவேன். சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டன.
கேள்வி: உங்கள் கதைகளில் கொண்டாட்டமான மனோபாவம் கொண்ட மனிதர்கள் வருவது கிடையாது. என்ன காரணம்?
அசோகமித்திரன்: அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல கதைகளில் கதையைக் கூறுபவன் அப்படித்தான், அதாவது சட்டென்று சிரிப்பவனாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
கேள்வி: புலிக்கலைஞன் கதை நாயகன் கற்பனையா அல்லது நீங்கள் நேரில் பார்த்த ஒரு கதாபாத்திரமா?
அசோகமித்திரன்: நான் ஒரு புலிவேடக்காரர் ஒரு சினிமா வாய்ப்புக்காக வந்தபோது அவரைப் பார்த்தேன். அவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிஜமாகவே அந்த மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. உண்மையில் சினிமாவில் கதாநாயகனே புலிவேடம் தரிப்பதுதான் பார்வையாளருக்கு மகிழ்ச்சி தரும். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். என் ‘புலிக்கலைஞன்’ நிஜ வாழ்க்கையில்தான் பரிமளிக்க முடியும். சினிமா சரியான களமல்ல.
கேள்வி: உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?
அசோகமித்திரன்: புத்தகங்கள் என்று கூற வேண்டுமானால் என் பாட புத்தகங்கள், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் தனித்தனிக் கதைகள், கட்டுரைகள்தான் எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தின. அதில் புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’ என்ற சிறுகதை. நான் எழுதிய ‘இன்னும் சில நாட்கள்’ அவருக்கு என் அஞ்சலியாக நினைத்து எழுதினேன்.
கேள்வி: பாண்டி விளையாட்டு சிறுகதைபோல இளம் பிராயத்து நினைவுகள் உங்களை அலைக்கழிக்குமா? அதுபோல நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பர் யாராவது உண்டா?
அசோகமித்திரன்: எனக்கு சகோதரிகள் இருந்தார்கள். எங்களுக்குள் நாங்கள் பாண்டி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம்.
அந்தக் காலத்து நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்பிருக்கும் என்று தோன்றவில்லை. நான் ஊர்விட்டு ஊர் வந்தவன்.
கேள்வி: ஒப்பீட்டளவில் நான் ஃபிக்ஷன் எழுத்துக்கு இன்று வரவேற்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அசோகமித்திரன்: இல்லை. கட்டுரைகளுக்குத்தான் இன்றைய பத்திரிகைகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. கட்டுரைகள்தான் விவாதங்களைத் துவக்குகின்றன. ஒரு சிறுகதை அப்படி செய்ய வாய்ப்பில்லை.
கேள்வி: சிறுபத்திரிகைகள் மட்டும்தான் சிறுகதைகளை ஊக்குவிக்கின்றன. வெகுஜன இதழ்கள் ஸ்டாம்ப் அளவுக்குக் கதைகளைச் சுருக்கிவிட்டன. நல்ல கதைகளை அதிகம் காணமுடிவதில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: இக் கேள்வியே முந்தைய கேள்வியின் என்னுடைய பதிலை உறுதிப்படுத்துகிறது. காலத்தின் தேவை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பூர்த்தி செய்யப்படுகிறது.
கேள்வி: மொழிபெயர்ப்புகள் தற்போது அதிகமான அளவுக்கு தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காகவே தனி இதழ் ஒன்றுகூட வெளிவருகிறது. இந்தச் சூழலில் அவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: ஒட்டு மொத்தமாகக் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. முன்பு பல வங்காள நாவல்கள் தமிழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்று அந்த நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது நம் மொழிபெயர்ப்பு குறையுடையது என்று தெரிகிறது. மொழிபெயர்ப்பும் காலம் காலத்திற்கு மாறுபடும்.
கேள்வி: சினிமாவின் பார்வையாளராக இருந்திருக்கிறீர்கள். சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறீர்கள். ஆனால், நேரடியாக சினிமாவில் ஈடுபட உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லையா?
அசோகமித்திரன்: இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டும் என்று நான் கூற மாட்டேன். என்னால் திரப்படங்களை ஓரளவு செம்மைப்படுத்த முடியும். ஆனால் நிறைய சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சக்தி இல்லை.
கேள்வி: சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா?
அசோகமித்திரன்: முன்பும் எழுத்தாளர் யாரோ ஒருவர்தான் ஒரு படத்துக்குக் காரணமாக இருந்தார். மனதளவிலாவது ஒரு திட்டம் இல்லாமல் எந்தத் திரைப்படமும் தயாரிக்கப்படுவதில்லை. எழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திரைப்படம் முழுத் திருப்தி தர முடியாது. மீண்டும் சமரசம்தான். இது ஆரோக்கியமானது, அல்ல என்பதெல்லாம் அபிப்ராயங்கள்.
கேள்வி: சமகால தமிழ்சினிமா பற்றி உங்கள் கருத்து? பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா?
அசோகமித்திரன்: திரைப்படக் கொட்டகையில் பார்த்ததில்லை. இந்தப் படங்களிலும் வன்முறைப் போக்கு, பெண்களைக் கன்னத்தில் அறைவது போன்றவை உள்ளன. நிஜ வாழ்க்கையில் இதைவிட மோசமான அனுபவங்கள் இருக்கலாம். திரைப்படத்தில் காண்பிப்பது எனக்குச் சம்மதமல்ல. பெரும் தீமை, கயமை கூட நாம் கோடிட்டுக் காட்டலாம். அவ்வளவுதான்.
கேள்வி: பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. எழுத்தாளர்கள் வளமாக இருக்கிறார்களா? உங்கள் அனுபவம்?
அசோகமித்திரன்: சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத்தால் வரும் ஊதியத்தை மட்டும் நம்பியில்லை. மீண்டும் இதெல்லாம் பொதுப்படையான கேள்விகள். உலகம் கெட்டுவிட்டதே என்று சொல்வது போல.
கேள்வி: புகழ், புத்தகங்களின் அதிக விற்பனை, ராயல்டி இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட்டதுண்டா?
அசோகமித்திரன்: நாம் கவலைப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தாலும் புத்தகம் விற்றால் பணம் தானாகவே வரும். பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் நூல்களை வெளியிடுகின்றன. பல சமரசங்கள் செய்து கொண்டுதான் நூலக உத்தரவு பெறுகின்றன. இதையெல்லாம் எழுத்தாளன் கணகில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்றும்கூட அசாத்தியமானதாகவே உள்ளது. ஏன்?
அசோகமித்திரன்: எப்படியோ காலம் தள்ளிவிட்டேன். ஆனால் இன்னொரு முறை முடியாது. நான் சிறிது ஆங்கிலத்திலும் எழுதியதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய பல ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள் மிகவும் பாராட்டப்பட்டன. சன்மானமும் கிடைத்தது. தமிழில் பல படைப்புகள் இனாம்தான். ஒரு முழு நூல் என் முன்னுரைகள் கொண்டது. முன்னுரைக்கு எப்படி, எவ்வளவு சன்மானம் தருவது? இந்த முன்னுரை எழுதுவதே இழிவுபடுத்தும் அனுபவம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: சமகால எழுத்தை, எழுத்தாளர்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? இலக்கியச் சண்டைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
அசோகமித்திரன்: அபிப்ராயங்கள், சண்டை எதில் இல்லை? ஒரு குடும்பத்திலேயே சண்டை இல்லையா?
கேள்வி: இண்டர்நெட் பற்றி உங்கள் கருத்து? இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா? இணையம் வழியாக இன்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலை வந்திருப்பது குறித்து?
அசோகமித்திரன்: எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கண் வலிக்கிறது. அதனாலேயே அதிகம் கணினி முன் உட்காருவதில்லை.
கேள்வி: முக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன? உங்கள் எழுத்துக்கு அதுபோலொரு நிலை வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
அசோகமித்திரன்: இறந்து, எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பில் இல்லை என்றால் நாட்டுடைமை ஏற்றுக்கொள்ளக் கூடியது. வாரிசுகளுக்குப் பணம் தரவேண்டும். சகட்டு மேனிக்கு நாட்டுடைமை அறிவிப்பது சரியல்ல.
கேள்வி: தமிழக அரசு கோட்டூபுரத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றைக் கட்டி வருகிறது. அதற்கு நீங்கள் தரும் ஆலோசனை, வேண்டுகோள்கள் என்ன?
அசோகமித்திரன்: அந்தத் துறைக்கென நிபுணர்கள் இருக்கிறார்கள். நூலகத் துறை மிகப் பெரிய துறை. அதில் எழுத்தாளன் ஓர் அங்கம். அவ்வளவே.
கேள்வி: புத்தகக் கண்காட்சிக்கு சென்றீர்களா? புத்தகக் கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: திட்டமிட்டுப் போனால் கண்காட்சி பயனுள்ளது. ஆனால் பத்து சதவீதச் சலுகை என்பது போக வரச் செலவு, அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் போய்விடுகிறது.
கேள்வி: விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படக்கூடாது என்கிற அரசின் உத்தரவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வரவேற்கிறீர்களா?
அசோகமித்திரன்: புத்தகங்கள் வெளியிடப்பட்டால் அவற்றை என்ன செய்வது? முந்தைய நூற்றாண்டுகளில் கூட நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல நூல்கள் மீண்டு வந்துவிடுகின்றன.
கேள்வி: நோபல் பரிசு பெறும் அளவுக்குத் தகுதியுள்ள எழுத்து என்று உங்களைப் புகழாதவர்கள் இல்லை. உங்கள் நாவல்கள் ஏதாவது மொழிபெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதா?
அசோகமித்திரன்: நாம் சொல்லிவிடலாம். தேசிய அளவிலேயே கடினம். உண்மையில் நம் தமிழ் நாட்டிலேயே நிறுவன அங்கீகாரம் கிடையாது. ஆதலால், நான் இந்த மாதிரி விருது, பரிசு பற்றி மனதைச் செயல்படவிடுவதில்லை.
கேள்வி: நீங்கள் இப்போது படித்து வரும் புத்தகம் எது?
அசோகமித்திரன்: பாரதி மணி என்பவர் எழுதிய, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்.’ நல்ல, சுவாரசியமான நூல். உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டது.
கேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது?
அசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்.
கேள்வி: எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கதைகள் யாவை? என்ன காரணங்களால் அவை எழுதப்படாமல் இருக்கின்றன?
அசோகமித்திரன்: இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பல ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை மீறித்தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009-ம் ஆண்டில் அதை முடித்துவிட வேண்டும். ஆனால் என் வயது இப்போது 77. ஓராண்டு என்பதுகூட யதார்த்தமான ஆசை இல்லை.
நேர்காணல்: பாலு சத்யா
(அம்ருதா ஜூன் 2009 இதழில் வெளியான நேர்காணல்)
Tuesday, June 16, 2009
ஏழுமலை ஜமா
திருவிழாவைப் பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவிழாக்கள் மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டவை. இப்போதெல்லாம், ஆடி, சித்திரை மாதங்களில் மூலை முடுக்குகளில் இருக்கும் கோவில்களில்கூட வசூல் பண்ணி, ஒலிபெருக்கியை அலறவிட்டு, கூழ் ஊற்றி, பொங்கல் வைத்து, சமீபத்தில் வெளியான படங்களை சூட்டோடு சூடாக விசிடியில் போட்டு, அல்லது ‘ஆடலும் பாடலும்' என்ற பெயரில் ரெகார்ட் டான்ஸை ஆடவிட்டு, ஏதாவது ஒரு ஆர்கெஸ்ட்ராவை மேடையேற்றித் திருவிழாவை ஒப்பேற்றிவிடுகிறார்கள்.
ஆனால், ஒரு காலத்தில் திருவிழா என்றால் தவிர்க்க முடியாத சில அம்சங்கள் இருந்தன. நம் மண்ணின் கலைகளான தெருக்கூத்து, கரகாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்...போன்றவை. நவீன கலாசாரம் என்ற சூறாவளிக் காற்றில் அடித்துப் போகப்பட்ட கலைகளில் ஒன்று தெருக்கூத்து. அந்தக் கலையை மையமாக வைத்து, இயக்குநர் எஸ். கருணா எடுத்திருக்கிற குறும்படம் ‘ஏழுமலை ஜமா.'
ஏழுமலை, அந்த சுற்றுவட்டாரத்தில் பேர்போன தெருக்கூத்துக் கலைஞர். துரியோதனன், நரசிம்மம், அர்ச்சுனன் என்று அவர் எந்த வேஷம் கட்டி ஆடினாலும், விடியவிடிய கண் அயராமல் பார்த்து ரசிக்கும் ஊர்ஜனம். ஏழுமலையை ‘வாத்தியார்' என்று மரியாதையோடுதான் ஊரே அழைக்கும். ஒரு நாள், ஏதோ ஓர் ஊரில் ‘பாஞ்சாலி சபதம்' தெருக்கூத்தைப் போட்டுவிட்டு, தன் குழுவினரை ஊருக்கு அனுப்பிவிட்டு, அவர் மட்டும் ஒரு வீட்டுக்குப் போகிறார். அந்தவீட்டில் இருக்கும் ஏழுமலையின் ரசிகை, மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். வாய்க்கு ருசியாக சமைத்துப் போட்டு, கைகால் பிடித்துவிடுகிறாள். அந்தப் பெண்ணோடு இரவைக் கழித்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார் ஏழுமலை.
ஏழுமலைக்குக் கூத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வருடா வருடம் நடக்கும் ஊர்த் திருவிழாவில் ஏழுமலையின் கூத்து கண்டிப்பாக இருக்கும். அந்த வருடம் கூத்துக்கு பதிலாக சினிமா போடுகிறார்கள். நொந்து போகிறார் ஏழுமலை. மெல்ல மெல்ல அவருடைய கூத்துக்கு மவுசு குறைந்துபோகிறது. ஏழுமலையின் ஜமாவில் இருந்தவர்கள் எல்லாம், கூத்தை விட்டுவிட்டு கல் உடைப்பது, கட்டட வேலை பார்ப்பது, ரிக்ஷா ஓட்டுவது என வேறு வேறு வேலைகளைப் பார்க்கப் போகிறார்கள். ஏழுமலையும் உள்ளூரில் இருக்கப் பிடிக்காமல், பிழைப்புக்காக பெங்களூருக்குப் போய், மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார். ‘வாத்தியார்!' என்று மரியாதையாக அழைக்கப்பட்ட ஏழுமலை, ‘டேய் ஏழுமலை!' என்று அழைக்கப்படுகிறார்.
கூத்துக் கலையின் மேல் இருந்த வெறியில், திரும்ப ஊருக்கு வருகிறார் ஏழுமலை. சக கலைஞர்கள் எல்லாம் அவரை வேறு வேலை பார்க்கச் சொல்கிறார்கள். துடித்துப் போகிறார். வெறுப்பும் வேதனையும் மனத்தில் மண்ட, குடித்துவிட்டுத் தன்னந்தனியே ஆடுகிறார். ஏதோ ஓர் இடத்தில், வேறொரு கூத்துக் குழுவினர் இரவு நேரத்தில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வரும் ஏழுமலை ‘இப்பிடியா ஆடுவாங்க?' என்று திட்டிவிட்டு, சுழன்று சுழன்று ஆடிக்காட்டுகிறார். அப்படியே மயங்கி, சரிந்து கீழே விழுந்துவிடுகிறார்.
இப்படிக் கேள்விக்குறியாகிப் போயிருப்பது ஏழுமலையின் வாழ்க்கை மட்டுமல்ல; எத்தனையோ கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையும்தான். எழுத்தாளர் பவா. செல்லத்துரையின் ‘ஏழுமலை ஜமா' சிறுகதையைத்தான், குறும்படமாக எடுத்திருக்கிறார் கருணா. புரிசை துரைசாமி, கண்ணப்பதம்பிரான், பரம்பரை தெருக்கூத்து மன்றம் ஆகியோர் இணைந்து இசைத்திருக்கும் இசையும், சுரேவின் ஒளிப்பதிவும், பீ. லெனினின் எடிட்டிங்கும் இந்தப் படத்திற்கு வளம் சேர்த்திருக்கின்றன. ஒரு நல்ல படைப்புக்கான அத்தனை அம்சங்களும் ஏழுமலை ஜமாவில் இருக்கின்றன.
சினிமா குத்துப் பாடல்களில் ரசிகர்கள் ஒருபுறம் சொக்கிக் கிடக்கிறார்கள். மற்றொருபுறம் உயிரை உரசும் உண்மைகளை குறும்படங்கள் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அதற்கு சமீபத்திய உதராணம் ‘ஏழுமலை ஜமா.'
Monday, June 15, 2009
ஒன்றரை நிமிடத்தில் உலகத்தரம்!
ஒரு பெரிய வயல் வெளி. அறுவடைக்குத் தயாராக நெற்கதிர்கள் விளைந்து தலை சாய்த்து நிற்கின்றன. சட்டென்று காட்சி மாறுகிறது. வயல் வெளி மறைந்து மிக பிரம்மாண்டமான, ராட்சசக் கட்டிடம் ஒன்று இப்போது அந்த இடத்தில் முளைத்திருக்கிறது.
ஒரு வீட்டின் உள் பகுதி. நல்ல வசதியான வீடு என்பது பார்த்தாலே தெரிகிறது. மாடியில் இருந்து ஒரு பெண் படிக்கட்டுகளில் இறங்கி வருகிறாள். நடுத்தர வயது. கோட், ஷூட் என அதி நவீனமான உடை உடுத்தியிருக்கிறாள். ஹாலில் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு ஒரு சிறுவன் ஷோபாவில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு முன்னால் இருக்கும் லேப்டாப்பில் அவன் கை அலைந்துகொண்டிருக்கிறது.
அந்தப் பெண் இறங்கிவந்து அவனுக்கு எதிரே உட்காருகிறாள். கால்களில் சாக்ஸை மாட்டியபடியே அவனிடம் கேட்கிறாள்: ‘இன்னிக்கி என்ன எக்ஸாம்?’
‘மேத்ஸ்.’
இப்போது அவன் கேட்கிறான். ‘ஆபீஸுக்கா?’
‘இல்ல. ஒரு கான்ஃபிரன்ஸ். டெல்லி போறேன்.’
அந்தப் பெண் கிளம்புகிறாள்.
‘மம்மி! எனக்கு பிரேக்ஃபாஸ்ட் எடுத்து வைக்க மறந்துட்டீங்களே!’
‘ஓ! சாரி.’ என்றவள் ஃபிரிட்ஜைத் திறக்கிறாள்.
இப்போது டைனிங் டேபிளில் ஒரு தட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கை தட்டில் ஒரு மாத்திரையைப் போடுகிறது.
‘இந்த சிவப்பு கேப்ஸ்யூல் பிரேக்ஃபாஸ்டுக்கு.’
தட்டில் மேலும் இரண்டு மாத்திரைகள் வந்து விழுகின்றன.
‘இந்த வெள்ளை டேப்லெட்ஸ் லஞ்சுக்கு.’
அவ்வளவுதான். படம் முடிந்து விடுகிறது. திரையில் ‘வேளாண்மையைக் காப்போம்’ என்று பெரிதாக எழுத்தைப் போடுகிறார்கள். ‘2040-க்குப் பிறகு’ என்ற குறும்படத்தில்தான் மேலே சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
உண்மையில், விவசாயத்துக்கான முக்கியத்துவம் சமூகத்தில் மெல்ல மெல்லக் குறைந்து வரும் அபாயத்தை நம் தலையில் ஒரு தட்டுத் தட்டி உணர்த்திவிடுகிறது இந்தக் குறும்படம். ஐ.டி. தொழில், இஞ்சினியரிங், மருத்துவம்... உள்ளிட்ட பல துறைகளுக்குக் கொடுக்கும் முன்னுரிமையை நாம் வேளாண்மைக்குக் கொடுப்பதில்லை.
இப்படியே போனால், பசியை மந்தமாக்கும் அல்லது உணவாகவே மாத்திரையை சாப்பிடவேண்டிய கட்டாயத்துக்கு நாம் எல்லோருமே ஆளாக வேண்டியதுதான். நாளுக்கு நாள் அதிகமாகிவரும் ரியல் எஸ்டேட் வியாபாரம், விவசாயத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் அலட்சிய மனோபாவம், கடன் சுமையால் எலிக்கறி சாப்பிடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும் விவசாயி, விதர்ப்பாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயக் குடும்பங்கள், எதிர்காலம்... என்று பல கேள்விகளை இந்தப் படம் நமக்குள் எழுப்பி விடுகிறது.
இந்தக் குறும்படத்தை இயக்கியிருக்கும் எம்.ஆர். செந்தில் இளைஞர். சென்னை மடிப்பாக்கத்தில் இருக்கிறார். தற்போது இயக்குநர் செல்வபாரதியின் ‘முரட்டுக்காளை’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
‘இப்படி ஒரு குறும்படத்தை எடுக்கணும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?’ என்று கேட்டால் படபடவெனப் பேசுகிறார். ‘இப்போ விளைச்சல் நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்பிடியே போனா விவசாயம் பெரிய கேள்விக்குறியா மாறிடும். அது மேல இருக்கற அக்கறையினால ஏதாவது செய்யணும்னு நினைச்சேன். இந்தப் படத்தை எடுத்தேன்.’
இந்தக் குறும்படத்துக்கு இருபதாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. தன் கைக் காசைப் போட்டுத்தான் படமெடுத்திருக்கிறார் செந்தில். இதில் நடித்திருக்கும் கவிதா யாதவும், சிறுவன் பண்பரசனும் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பின்னணி இசை கிடையாது. எஃபெக்ட்ஸை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வளவு அழுத்தமான செய்தியைச் சொல்லும் ‘2040-க்குப் பிறகு’ குறும்படம் மொத்தமே ஒன்றரை நிமிடம்தான் ஓடுகிறது. ஒன்றரை நிமிடத்தில் உலகத்தரம்!
0
(கல்கியில் என்னைக் கவர்ந்த குறும்படங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியான கட்டுரைகளில் இதுவும் ஒன்று)
Friday, February 27, 2009
நூல் அறிமுகம்
எதிர்பாராமல் பெய்த மழை
தமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா? உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை மூன்றிலிருந்து எட்டாம் வகுப்புப் படிக்கிற காலத்துக்குள் எழுதியிருக்கிறார்.
இந்தப் புத்தகத்தை ‘எதிர்பாராமல் பெய்த மழை’ என்று தமிழில் மொழிபெயர்த்திருக்கும் சுகானாவும் சிறுமிதான். திருவண்ணாமலை ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார். ஆனால், எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே இந்நூலை மொழிபெயர்த்துவிட்டார் சுகானா.
குழந்தைகள் எழுதிய குழந்தைகளுக்கான புத்தகத்தில் ஓவியங்கள் இல்லாமலா? இதிலும் ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் வரைந்தவர் பிரபல ஓவியர் இல்லை. இரண்டாம் வகுப்புப் படிக்கும் வம்சி என்கிற சிறுவன்.
ஆச்சரியங்களுக்குக் குறைவில்லாத இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கும் சுகானாவின் அம்மா கே.வி. ஜெயஸ்ரீயும் அப்பா உத்திரகுமாரனும் மொழிபெயர்ப்பாளர்கள்.
சரி! சுகானாவுக்கு மலையாள மொழி எப்படித் தெரியும்? ஜெயஸ்ரீ சொல்கிறார்: ‘சுகானா அஞ்சாவது வரைக்கும் கேரளாவுலதான் படிச்சா. அப்போ நாங்க அடிமாலியில இருந்தோம். ஒரு நாள் என் கணவர் உத்திரா இரண்டு மலையாளப் புத்தகங்கள் வாங்கிட்டு வந்தார். அதுல ஒண்ணு ‘மறையும் தீரம்.’ ரெண்டு புத்தகத்தையுமே சுகானா படிச்சா. ஒரு நாள் அம்மா இந்தப் புத்தகத்தை மொழி பெயர்க்கறேம்மான்னு சொன்னா. சரி முயற்சி பண்ணுன்னு விட்டுட்டேன். ஒரே வாரத்துல எல்லாக் கதைகளையும் அழகா மொழிபெயர்த்துட்டா.’
‘என் சகோதரி ஷைலஜாவோட மகன்தான் வம்சி. அப்போ அவன் ரெண்டாவது படிச்சுக்கிட்டு இருந்தான். ஒரு நாள் சுகானாகிட்ட ‘அக்கா! உன் கதைக்கு நான் படம் போடவா’ன்னு கேட்டான். அவளும் சரின்னு சொன்னா. ஒரு படம் போட்டதுமே எல்லாக் கதைகளுக்கும் அவன் ஓவியம் வரையறதுதான் சரியா இருக்கும்னு தோணிச்சு. அவனையே வரையச் சொல்லி வீட்டுல இருக்கற எல்லாரும் சொன்னோம். அழகா வரைஞ்சுட்டான்.’
‘பொதுவாவே வாசிப்பும் எழுத்துமா இருக்கற குடும்பம் எங்க குடும்பம். என் சகோதரியின் கணவர் பவா செல்லத்துரை ஒரு எழுத்தாளர். அவரைப் பார்க்க பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவாங்க. அதுனால எழுத்துங்கறது எப்பவுமே புழங்கிக்கிட்டு இருக்கற ஒண்ணா எங்க வீட்ல ஆயிடுச்சு. நானும் என் சகோதரி ஷைலஜாவும் அப்பப்போ எதையாவது மலையாளத்துலருந்து தமிழ்ல மொழிபெயர்த்துக்கிட்டு இருப்போம். சில சமயங்கள்ல ஒரு வார்த்தைக்கு என்ன தமிழ்வார்த்தைன்னு தெரியாம தடுமாறிக்கிட்டு இருப்போம். அப்போல்லாம் சுகானா என்னம்மான்னு கேப்பா. நாங்க அந்த வார்த்தையைச் சொன்னதும் போற போக்குல சரியான தமிழ் வார்த்தையைச் சொல்லிட்டுப் போயிடுவா.’
உற்சாகத்தோடு பேசுகிறார் ஜெயஸ்ரீ. அடுத்து என்ன செய்யப் போகிறார் சுகானா. ‘அம்மா எனக்கு உலகின் சிறந்த சிறுகதைகள்னு ஒரு புத்தகம் வாங்கிக் கொடுத்திருக்காங்க. எல்லாருக்கும் தெரிஞ்ச ‘சின்ட்ரல்லா’ மாதிரியான கதைகள்தான். அதை எப்படித் தமிழ்ல புதுசாச் சொல்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எல்லாக் கதைகளையும் பண்ணாம, பதினைந்து கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணலாம்ங்கிற யோசனையும் இருக்கு.’ சந்தோஷம் கண்களில் மின்னச் சொல்கிறார் சுகானா.
இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் கிருஷி இப்படிச் சொல்கிறார்: ‘எப்பொழுது பார்த்தாலும் பெரியவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறோம்! பேச்சுகளால் மண்டிக்கிடக்கிறது வீடும் வெளியும். குழந்தைகள் உலகைத் தொலைத்துவிட்டோம். கல்வி சிறை ஆகிவிட்டது. இந்த இறுக்கத்தில் மின்னற்கொடிபோல் வந்திருக்கிறது ‘எதிர்பாராமல் பெய்த மழை.’
0
(பெண்ணே நீ - மாத இதழில் வெளியானது)
Thursday, January 8, 2009
மால்கம் எக்ஸ் - ஓர் அறிமுகம்
‘இது பச்சைப் படுகொலை. இதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.’
மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்ன வார்த்தைகள் இவை. வெறும் ஒப்புக்காக வெளிவந்தவை அல்ல. மனத்திலிருந்து வந்தவை. அதற்குக் காரணமும் இருக்கிறது. இருவருமே அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். ஒரே வித்தியாசம் மார்ட்டின் அஹிம்சாவாதி. மால்கம் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர். எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு போராளி இன்னொரு போராளிக்கு நேர்ந்த அநீதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். அதற்கு இன்றைக்கும் சாட்சியமாக இருப்பவைதான் மார்ட்டின் சொன்ன வார்த்தைகள்.
சமீபத்தில் எழுத்தாளர் மருதன் எழுதி, கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘மால்கம் எக்ஸ்’ நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘விறுவிறுப்பான நடை, புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாது’ என்று சொல்வதெல்லாம் ‘மால்கம் எக்ஸ்’ புத்தகத்துக்கு அப்படியே பொருந்தும் என்றாலும் இந்தப் பாராட்டு மிகச் சாதாரணமான ஒன்றாக ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிய ஒரு வசீகரம் இந்நூலில் இருக்கிறது. அது மருதனின் எழுத்து நடை. கூடுதலாக நம்மைப் புத்தகத்தில் இழுத்து ஆழ்த்துகிற இன்னொரு அம்சம் மால்கமின் வாழ்க்கை.
கண்முன்னால் எரிந்துபோன வீடு, படுகொலை செய்யப்பட்ட தந்தை, மென்னியை இறுக்கிப் பிடித்து வாழ்க்கையின் குரூரப் பக்கங்களைப் புரட்டியபடி இருக்கும் வறுமை, எல்லாவற்றுக்கும் மேல் ‘நீ கறுப்பன். நாயினும் கீழானவன். நீ காலம் முழுக்க இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று தினமும் நெஞ்சைச் சுடுகிற இனவெறி. இத்தனை இன்னல்களிலும் சுருண்டுபோய்விடாமல், நெஞ்சை நிமிர்த்துக்கொண்டுப் போராடத் துணிந்ததால்தான் மால்கமைக் கொண்டாடவேண்டியிருக்கிறது. சின்னஞ்சிறு வயதிலேயே துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுப்பழகியிருந்த மால்கமுக்கு சாவு என்கிற சாத்தான்கூட துப்பாக்கி மூலமாகத்தான் வந்து சேர்ந்தது.
நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதி இருவருக்குமே அவரவர் வாதம் அவரவர்க்கு நியாயமாகத்தான் படும். அதே போல, மால்கமைப் பொறுத்தவரை அவர் கையிலெடுத்த தீவிரவாதம் என்கிற வழிமுறை நியாயமாகப்பட்டிருக்கிறது. அதைக்கூட அவர் தன் சொந்த துவேஷத்துக்காகக் கையாளவில்லை. அமெரிக்காவில் வேர்விட்டுக் கிளைப்பரப்பிக் கொண்டிருக்கும் இனப்பாகுபாட்டுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினார்.
அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது கறுப்பின மக்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டின் தீவிரம் கொஞ்சமாவது குறையுமா? இது உலகமெல்லாம் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு கேள்வி. காலம் காலமாக ஒடுக்கப்பட்டுவரும் கறுப்பின மக்களின் பிரச்னைகளையும், அவர்களுக்காகக் குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த ஒரு மாமனிதரின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அந்த அவசியத்தை மிகச் சரியாகப் பூர்த்தி செய்கிறது இந்தப் புத்தகம்.
மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்ததும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்ன வார்த்தைகள் இவை. வெறும் ஒப்புக்காக வெளிவந்தவை அல்ல. மனத்திலிருந்து வந்தவை. அதற்குக் காரணமும் இருக்கிறது. இருவருமே அமெரிக்காவில் இருக்கும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள். ஒரே வித்தியாசம் மார்ட்டின் அஹிம்சாவாதி. மால்கம் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர். எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு போராளி இன்னொரு போராளிக்கு நேர்ந்த அநீதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். அதற்கு இன்றைக்கும் சாட்சியமாக இருப்பவைதான் மார்ட்டின் சொன்ன வார்த்தைகள்.
சமீபத்தில் எழுத்தாளர் மருதன் எழுதி, கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘மால்கம் எக்ஸ்’ நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘விறுவிறுப்பான நடை, புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாது’ என்று சொல்வதெல்லாம் ‘மால்கம் எக்ஸ்’ புத்தகத்துக்கு அப்படியே பொருந்தும் என்றாலும் இந்தப் பாராட்டு மிகச் சாதாரணமான ஒன்றாக ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது. இதையெல்லாம் தாண்டிய ஒரு வசீகரம் இந்நூலில் இருக்கிறது. அது மருதனின் எழுத்து நடை. கூடுதலாக நம்மைப் புத்தகத்தில் இழுத்து ஆழ்த்துகிற இன்னொரு அம்சம் மால்கமின் வாழ்க்கை.
கண்முன்னால் எரிந்துபோன வீடு, படுகொலை செய்யப்பட்ட தந்தை, மென்னியை இறுக்கிப் பிடித்து வாழ்க்கையின் குரூரப் பக்கங்களைப் புரட்டியபடி இருக்கும் வறுமை, எல்லாவற்றுக்கும் மேல் ‘நீ கறுப்பன். நாயினும் கீழானவன். நீ காலம் முழுக்க இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்று தினமும் நெஞ்சைச் சுடுகிற இனவெறி. இத்தனை இன்னல்களிலும் சுருண்டுபோய்விடாமல், நெஞ்சை நிமிர்த்துக்கொண்டுப் போராடத் துணிந்ததால்தான் மால்கமைக் கொண்டாடவேண்டியிருக்கிறது. சின்னஞ்சிறு வயதிலேயே துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டுப்பழகியிருந்த மால்கமுக்கு சாவு என்கிற சாத்தான்கூட துப்பாக்கி மூலமாகத்தான் வந்து சேர்ந்தது.
நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதி இருவருக்குமே அவரவர் வாதம் அவரவர்க்கு நியாயமாகத்தான் படும். அதே போல, மால்கமைப் பொறுத்தவரை அவர் கையிலெடுத்த தீவிரவாதம் என்கிற வழிமுறை நியாயமாகப்பட்டிருக்கிறது. அதைக்கூட அவர் தன் சொந்த துவேஷத்துக்காகக் கையாளவில்லை. அமெரிக்காவில் வேர்விட்டுக் கிளைப்பரப்பிக் கொண்டிருக்கும் இனப்பாகுபாட்டுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினார்.
அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது கறுப்பின மக்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டின் தீவிரம் கொஞ்சமாவது குறையுமா? இது உலகமெல்லாம் சுழன்றுகொண்டிருக்கும் ஒரு கேள்வி. காலம் காலமாக ஒடுக்கப்பட்டுவரும் கறுப்பின மக்களின் பிரச்னைகளையும், அவர்களுக்காகக் குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த ஒரு மாமனிதரின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அந்த அவசியத்தை மிகச் சரியாகப் பூர்த்தி செய்கிறது இந்தப் புத்தகம்.
Tuesday, January 6, 2009
ஈழக்கதவுகள் - நூல் அறிமுகம்
கண்ணீர்த்துளி
“குண்டு துளைக்காத ஒரு சுவரும்
காயம் படாத வீடும்
சாவு விழாத ஒரு குடும்பமும்
எங்கும் இல்லை”
- இதுதான் மொத்த ஈழமாக இருந்தது.
பா. செயப்பிரகாசம், கரிசல் பூமிக்காரர். அந்த மண்ணின் மணம் மாறாத சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்தவர். சூரியதீபன் என்ற பெயரில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவருபவர். நான்காண்டுகளுக்கு முன்பு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்' என்ற ஐந்து நாள் மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் சென்று திரும்பிய அனுபவத்தை ‘ஈழக் கதவுகள்' என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். இவருடன் ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப், தொல் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோரும் யாழ்ப்பாணம் போய் வந்திருக்கிறார்கள்.
படிக்கப் படிக்க, உயிரை உலுக்கியெடுத்துவிடுகிறது ‘ஈழக் கதவுகள்'. வெறும் பயணக்கட்டுரையாக இல்லாமல் ஈழத்தின் பிரச்னைகளை மிக நுட்பமாக விவரிக்கிறார் பா.செயப்பிரகாசம். சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ விதிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றையும் போராட்டத்தையும் உருக்கமாக, எளிய வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். அவரை நேரில் சந்தித்து உரையாடினோம்.
“ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் ஈழம் பற்றி நமக்குக் கொடுத்திருந்த சித்திரம், அங்கு போனவுடன் கிழிந்து போய்விட்டது. அது முற்றிலும் வேறொரு உலகம். அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அங்கு போயிருந்தோம். அப்போது யுத்தம் இல்லை. யுத்தம் நடந்துகொண்டிருந்த காலமாக இருந்திருந்தால், எங்களால் உள்ளே நுழைந்திருக்கவே முடியாது.” என்று ஆரம்பித்து இலங்கை குறித்தப் பல விஷயங்களைப் பேசுகிறார் பா. செயப்பிரகாசம்.
“1948-ல் இலங்கை, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது. உண்மையில் அது விடுதலை அல்ல. அரசியல் அதிகாரம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான். அப்போது இலங்கை மக்கள் தொகையில் சிங்களவர்கள் 60 சதவிகிதம் பேரும், தமிழர்கள் 40 சதவிகிதம் பேரும் இருந்தார்கள். பிரிட்டிஷாருக்குப் பிறகு வந்த, சிங்களப்பேரினவாத ஆட்சியில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் பாரபட்சம் நிலவியது. சிங்கள மொழிதான் ஆட்சி மொழி. பௌத்தம் மட்டுமே மதம். இலங்கை காவல்துறை, ராணுவம் ஆகிய துறைகளில் தமிழர்கள் சுத்தமாக இல்லை. அரசுப் பதவிகளில் கொஞ்சம் பேர் இருந்தார்கள். ‘தராதரப்படுத்துதல்' என்று சட்டமே கொண்டு வந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான். உதாரணமாக, ஒரு பள்ளியில் பயிலும் சிங்கள மாணவன் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவன் தேர்ச்சி பெற்றுவிடுவான். அதே சமயம், ஒரு தமிழ் மாணவன் அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும்.”
மாநாட்டுக்காகப் போயிருந்தாலும், விடுதலைப் புலிகளின் முகாம்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் என எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
“விடுதலைப் புலிகளைத் தவிர, உலகின் வேறு எந்தப் போராட்டத்திலும் பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதில்லை. சோவியத் புரட்சியில்கூட பெண்கள் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. கியூபா, வியட்நாம் போர்களில் பெண்கள் மிகக்குறைந்த அளவில்தான் பங்கேற்றார்கள். விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவுக்கு ‘கடற்புலி' என்று பெயர். நாங்கள் போன பகுதியில் இருந்த கடற்புலிகளில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் பண்பாடு வியக்கத்தக்கதாக இருக்கிறது. ‘கைப்பிடி அரிசி' என்று அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கம் இருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு தமிழர் வீட்டிலும், ஒவ்வொரு முறை சோற்றுக்கு உலை வைக்கும்போதும், ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக வைத்துவிடுகிறார்கள். இந்த அரிசி, போரில் இறந்து போன வீரர்களின் குடும்பத்துக்கும், அனாதைக் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.”
“அதே போல, போராளிகள் மத்தியில், சாதீய உணர்வு இல்லவே இல்லை. அவர்களிடையே ‘அகமண முறை' கிடையாது. அதாவது ஒரு போராளி தன் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படியே திருமணம் செய்து கொள்ள விரும்பினால், போரில் இறந்த ஒரு போராளியின் விதவை மனைவியைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.” இப்படி எண்ணற்ற தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகிறார் இந்த எழுத்தாளர்.
இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் ‘உங்கள் காலடியில் மிதிவெடிகள் எச்சரிக்கை' என்று கண்ணிவெடி அறிவிப்பைப் பார்த்து அதிர்ந்து போனது, மாலை ஐந்து மணிக்கு மேல் தங்கள் எல்லைக்குள் வெளிநாட்டுப் பயணிகள் என்றாலும் உள்ளே அனுமதிக்காத சிங்கள ராணுவத்தினரின் கடுமையான அணுகுமுறை, ஒரு காலத்தில் ரயில் பாதையாக இருந்த பகுதி மண்மேடாகிப் போன அவலம்... என்று பல தகவல்களைச் சொன்னவர், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசினார்.
“இன்றைக்கு தமிழ் இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஈழத்தில் இருப்பது போர்க்குண இலக்கியம். மக்கள் வாழ்வே அங்கு போராட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலித்தியம், பெண்ணியம் இரண்டையும் போர்க்குணம் மிக்க இலக்கியங்களாகச் சொல்லலாம். தமிழில் புதிய தலைமுறை எழுத்தாளர்களை வரவேற்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துகள் எந்தக் கட்டுக்கும் அடங்கியதாக இல்லை. முன்பெல்லாம் ஒரு பொது உத்தி, பொது நடை, பொதுப் பார்வை எல்லாம் எழுத்தில் இருக்கும். இப்போது அவரவர்க்கான தனித்தனி வடிவங்களை எழுத்தில் கையாள்கிறார்கள். புதியன படைக்க வேண்டும், புதிய சாதனை செய்யவேண்டும் என்ற ஆர்வம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால், பல எழுத்தாளர்களால் வாழ்க்கையில் காலூன்ற முடியவில்லை. அதுவே அவர்களுடைய எழுத்துக்குப் பெரிய தடையாக ஆகிவிடுகிறது.
‘கஷ்டப்படுகிறவர்களால்தான் சிறந்த இலக்கியங்களைத் தரமுடியும்' என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், அதற்காக புதிய தலைமுறை எழுத்தாளர்களின் வாழ்க்கை, பாரதி, புதுமைப்பித்தன், சதத் ஹசன் மாண்ட்டோ போன்ற எழுத்தாளர்களைப் போல சீக்கிரமே முடிந்துபோய்விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கிய வகைகள் குறைந்து வருகின்றன. கட்டுரைப் பாங்கான போக்கு மேலோங்கி வருகிறது. இப்போது வணிக இதழ்களில் ஒரு சிறுகதையைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. வெளியீட்டுத் துறை வளர்ந்து வருகிறது.”
அவருடன் பேசிவிட்டு வெளியே வந்து, ‘ஈழக் கதவுகள்' நூலை மறுபடி ஒருமுறை புரட்டிப் பார்த்தபோது, பளிச்சென ஒரு வரி கண்ணில் பட்டது.
“20 லட்சம் ஈழத்தமிழர்களும், 18 லட்சம் தோட்டத் தொழிலாளித் தமிழர்களும் வாழ்கிற நாற்புறமும் கடல் சூழ்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வு ஒரு கண்ணீர்க் கல்லறையாகி விட்டது. உலக வரைப்படத்தில் அது பெரிய கண்ணீர்த்துளி.”
0
“குண்டு துளைக்காத ஒரு சுவரும்
காயம் படாத வீடும்
சாவு விழாத ஒரு குடும்பமும்
எங்கும் இல்லை”
- இதுதான் மொத்த ஈழமாக இருந்தது.
பா. செயப்பிரகாசம், கரிசல் பூமிக்காரர். அந்த மண்ணின் மணம் மாறாத சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்தவர். சூரியதீபன் என்ற பெயரில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவருபவர். நான்காண்டுகளுக்கு முன்பு ‘மானுடத்தின் தமிழ்க்கூடல்' என்ற ஐந்து நாள் மாநாட்டுக்காக யாழ்ப்பாணம் சென்று திரும்பிய அனுபவத்தை ‘ஈழக் கதவுகள்' என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். இவருடன் ஓவியர் மருது, கவிஞர் இன்குலாப், தொல் திருமாவளவன், திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோரும் யாழ்ப்பாணம் போய் வந்திருக்கிறார்கள்.
படிக்கப் படிக்க, உயிரை உலுக்கியெடுத்துவிடுகிறது ‘ஈழக் கதவுகள்'. வெறும் பயணக்கட்டுரையாக இல்லாமல் ஈழத்தின் பிரச்னைகளை மிக நுட்பமாக விவரிக்கிறார் பா.செயப்பிரகாசம். சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ விதிக்கப்பட்ட தமிழர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றையும் போராட்டத்தையும் உருக்கமாக, எளிய வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். அவரை நேரில் சந்தித்து உரையாடினோம்.
“ஊடகங்களும் அரசியல் இயக்கங்களும் ஈழம் பற்றி நமக்குக் கொடுத்திருந்த சித்திரம், அங்கு போனவுடன் கிழிந்து போய்விட்டது. அது முற்றிலும் வேறொரு உலகம். அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அங்கு போயிருந்தோம். அப்போது யுத்தம் இல்லை. யுத்தம் நடந்துகொண்டிருந்த காலமாக இருந்திருந்தால், எங்களால் உள்ளே நுழைந்திருக்கவே முடியாது.” என்று ஆரம்பித்து இலங்கை குறித்தப் பல விஷயங்களைப் பேசுகிறார் பா. செயப்பிரகாசம்.
“1948-ல் இலங்கை, பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது. உண்மையில் அது விடுதலை அல்ல. அரசியல் அதிகாரம் கைமாற்றிக் கொடுக்கப்பட்டது. அவ்வளவுதான். அப்போது இலங்கை மக்கள் தொகையில் சிங்களவர்கள் 60 சதவிகிதம் பேரும், தமிழர்கள் 40 சதவிகிதம் பேரும் இருந்தார்கள். பிரிட்டிஷாருக்குப் பிறகு வந்த, சிங்களப்பேரினவாத ஆட்சியில் தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டது. எல்லாவற்றிலும் பாரபட்சம் நிலவியது. சிங்கள மொழிதான் ஆட்சி மொழி. பௌத்தம் மட்டுமே மதம். இலங்கை காவல்துறை, ராணுவம் ஆகிய துறைகளில் தமிழர்கள் சுத்தமாக இல்லை. அரசுப் பதவிகளில் கொஞ்சம் பேர் இருந்தார்கள். ‘தராதரப்படுத்துதல்' என்று சட்டமே கொண்டு வந்தார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தான். உதாரணமாக, ஒரு பள்ளியில் பயிலும் சிங்கள மாணவன் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அவன் தேர்ச்சி பெற்றுவிடுவான். அதே சமயம், ஒரு தமிழ் மாணவன் அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும்.”
மாநாட்டுக்காகப் போயிருந்தாலும், விடுதலைப் புலிகளின் முகாம்கள், அவர்கள் வாழ்ந்த இடங்கள் என எல்லாவற்றையும் சுற்றிப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
“விடுதலைப் புலிகளைத் தவிர, உலகின் வேறு எந்தப் போராட்டத்திலும் பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதில்லை. சோவியத் புரட்சியில்கூட பெண்கள் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. கியூபா, வியட்நாம் போர்களில் பெண்கள் மிகக்குறைந்த அளவில்தான் பங்கேற்றார்கள். விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவுக்கு ‘கடற்புலி' என்று பெயர். நாங்கள் போன பகுதியில் இருந்த கடற்புலிகளில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருந்தார்கள். விடுதலைப் புலிகளின் பண்பாடு வியக்கத்தக்கதாக இருக்கிறது. ‘கைப்பிடி அரிசி' என்று அவர்களுக்கு இடையில் ஒரு வழக்கம் இருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு தமிழர் வீட்டிலும், ஒவ்வொரு முறை சோற்றுக்கு உலை வைக்கும்போதும், ஒரு கைப்பிடி அரிசியை எடுத்துத் தனியாக வைத்துவிடுகிறார்கள். இந்த அரிசி, போரில் இறந்து போன வீரர்களின் குடும்பத்துக்கும், அனாதைக் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.”
“அதே போல, போராளிகள் மத்தியில், சாதீய உணர்வு இல்லவே இல்லை. அவர்களிடையே ‘அகமண முறை' கிடையாது. அதாவது ஒரு போராளி தன் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. அப்படியே திருமணம் செய்து கொள்ள விரும்பினால், போரில் இறந்த ஒரு போராளியின் விதவை மனைவியைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும்.” இப்படி எண்ணற்ற தகவல்களைச் சொல்லிக்கொண்டே போகிறார் இந்த எழுத்தாளர்.
இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் ‘உங்கள் காலடியில் மிதிவெடிகள் எச்சரிக்கை' என்று கண்ணிவெடி அறிவிப்பைப் பார்த்து அதிர்ந்து போனது, மாலை ஐந்து மணிக்கு மேல் தங்கள் எல்லைக்குள் வெளிநாட்டுப் பயணிகள் என்றாலும் உள்ளே அனுமதிக்காத சிங்கள ராணுவத்தினரின் கடுமையான அணுகுமுறை, ஒரு காலத்தில் ரயில் பாதையாக இருந்த பகுதி மண்மேடாகிப் போன அவலம்... என்று பல தகவல்களைச் சொன்னவர், இன்றைய தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசினார்.
“இன்றைக்கு தமிழ் இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக இருக்கிறது. ஈழத்தில் இருப்பது போர்க்குண இலக்கியம். மக்கள் வாழ்வே அங்கு போராட்டமாக இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தலித்தியம், பெண்ணியம் இரண்டையும் போர்க்குணம் மிக்க இலக்கியங்களாகச் சொல்லலாம். தமிழில் புதிய தலைமுறை எழுத்தாளர்களை வரவேற்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துகள் எந்தக் கட்டுக்கும் அடங்கியதாக இல்லை. முன்பெல்லாம் ஒரு பொது உத்தி, பொது நடை, பொதுப் பார்வை எல்லாம் எழுத்தில் இருக்கும். இப்போது அவரவர்க்கான தனித்தனி வடிவங்களை எழுத்தில் கையாள்கிறார்கள். புதியன படைக்க வேண்டும், புதிய சாதனை செய்யவேண்டும் என்ற ஆர்வம் இளம் எழுத்தாளர்களிடம் இருக்கிறது. ஆனால், பல எழுத்தாளர்களால் வாழ்க்கையில் காலூன்ற முடியவில்லை. அதுவே அவர்களுடைய எழுத்துக்குப் பெரிய தடையாக ஆகிவிடுகிறது.
‘கஷ்டப்படுகிறவர்களால்தான் சிறந்த இலக்கியங்களைத் தரமுடியும்' என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், அதற்காக புதிய தலைமுறை எழுத்தாளர்களின் வாழ்க்கை, பாரதி, புதுமைப்பித்தன், சதத் ஹசன் மாண்ட்டோ போன்ற எழுத்தாளர்களைப் போல சீக்கிரமே முடிந்துபோய்விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தமிழிலக்கிய உலகில் சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கிய வகைகள் குறைந்து வருகின்றன. கட்டுரைப் பாங்கான போக்கு மேலோங்கி வருகிறது. இப்போது வணிக இதழ்களில் ஒரு சிறுகதையைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. வெளியீட்டுத் துறை வளர்ந்து வருகிறது.”
அவருடன் பேசிவிட்டு வெளியே வந்து, ‘ஈழக் கதவுகள்' நூலை மறுபடி ஒருமுறை புரட்டிப் பார்த்தபோது, பளிச்சென ஒரு வரி கண்ணில் பட்டது.
“20 லட்சம் ஈழத்தமிழர்களும், 18 லட்சம் தோட்டத் தொழிலாளித் தமிழர்களும் வாழ்கிற நாற்புறமும் கடல் சூழ்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்வு ஒரு கண்ணீர்க் கல்லறையாகி விட்டது. உலக வரைப்படத்தில் அது பெரிய கண்ணீர்த்துளி.”
0
Subscribe to:
Posts (Atom)