Wednesday, June 17, 2009
அசோகமித்திரன் நேர்காணல்
‘அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள்’
-அசோகமித்திரன்
தமிழின் முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம் ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வருபவர்.
இவரது பல படைப்புகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1996-ம் ஆண்டு, இவருடைய ‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர். அவருடைய படைப்புகளைப் போலவே நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும் கூர்மையாக இருக்கின்றன. இனி அவருடன் நேர்காணல்...
கேள்வி:உங்கள் கதைகளுக்கான மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்? அதுவரை தமிழில் பயன்பாட்டில் இல்லாத மொழி உங்களுடையது. மிகவும் அப்ஜெக்ட்டிவ்வாக, செய்தி சொல்லும் தொனி அதில் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?
அசோகமித்திரன்: நானாகத் திட்டமிட்டு என் நடையை உருவாக்கிக்கொள்ளவில்லை. உ.வே. சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ படைப்பை ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது என் எட்டாவது வயதில் படித்தேன். கல்கியின் ‘தியாக பூமி’யையும் அதே காலத்தில் படித்தேன். உண்மையில் என் நடையை அப்படைப்புகள்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.
கேள்வி: தமிழ்க் கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள் அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து இன்று அது ஓர் முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை எப்படி செய்தீர்கள்?
அசோகமித்திரன்: ஆசிரியரின் குரல் ஒரேயடியாக இல்லை என்று கூறமுடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால், உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஓர் நண்பனுக்கு யோசனை கூறுவது போல அக்குரல் உள்ளது.
எழுத்துப்பணியும் ஓரளவு அதுவாக அமைந்ததுதான். அந்த நாளில் 35 வயதில் வேலை கிடைப்பது மிகவும் கடினம். ஓர் வேலைக்காக நான் கார் ஓட்டும் உரிமம்கூடப் பெற்றேன். எனக்கு வேலை தேடிக்கொள்ளத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். எழுதும் எதையும் திருத்தமாகச் செய்யவேண்டும் என்று என் பள்ளி நாட்களிலிருந்தே தீர்மானமாக இருந்தேன்.
கேள்வி: 70களில் மாற்று அரசியல், மாற்று கலை இலக்கிய முயற்சிகள் நிறைய நடந்தன. தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலர் இக்காலகட்டத்தில் உருவாயினர். கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் அப்படியொரு உற்சாகம் இல்லை. உங்கள் பார்வையில், இந்தத் தேக்கத்துக்குக் காரணம் என்ன?
அசோகமித்திரன்: நான் தேக்கம் என்று கூற மாட்டேன். புது எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள். சூர்யராஜன், வா.மு. கோமு, ஜாகிர் ராஜா போன்றோர் நன்றாகவே எழுதுகிறார்கள். மதிப்பீடுகள் விஷயத்தில் சற்றுத் தயக்கமே. ஆனால், அவர்கள் நல்ல எழுத்தாளர்களாக உருவாக வாய்ப்பு உண்டு.
கேள்வி: குறுநாவல் வடிவத்தைச் செம்மைப்படுத்தியவர் நீங்கள். அதற்கான இலக்கணத்தை தமிழில் பிரபலப்படுத்தியவரும் நீங்களே. நாவல் எழுதுவதைவிட, குறுநாவலில் உள்ள சௌகரியங்கள் என்னென்ன? ஒரு கரு, நாவலுக்குள்ளதா, குறுநாவலுக்கானதா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?
அசோகமித்திரன்: குறுநாவல் ‘தீபம்’ என்ற பத்திரிகைக்காகத் திட்டமிடப்பட்டது. உண்மையில் இது ஒரு பத்திரிகைத் தேவைக்காக முயற்சி செய்தது. ‘தீபம்’ எனக்கு நல்ல பயிற்சிக் களமாக இருந்தது. பல கட்டுரைகளும் எழுதினேன்.
நாவல் எழுதும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. உண்மையில் அது ஒரு பெரிய தடங்கல்தான். ஆனால் அதையும் மீறித்தான் நாவல் எழுதவேண்டியிருக்கிறது. இப்போது நான் எழுதிவரும் நாவலின் ஆரம்பம் எனக்கு மறந்துவிட்டது. ஐந்தாம், ஆறாம் அத்தியாயங்கள் மூன்று உள்ளன.
என் கதைகள், நாவல்கள் எல்லாமே ஒரு தொடர்பு உள்ளவையே. ஆதலால் தனியாகக் கரு என்று நான் முடிவு செய்து கொள்வதில்லை. ஆனால், அப்படி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். Plot வைத்து எழுதியதிலும் மகத்தான எழுத்தாளர்கள் உண்டு.
கேள்வி: எண்ணற்ற எழுத்தாளர்கள் One time wonders ஆக இருந்திருக்கிறார்கள். ஒரு நாவல், ஒரு குறுநாவல், ஒரு கதை என்று சிறப்பாக எழுதிவிட்டுக் காணாமல் போயிருக்கிறார்கள். நீங்கள் கன்சிஸ்டெண்ட்டாக, தொடர்ந்து, பெரிய வருவாய் தரவில்லை எனினும் தமிழில் கதைகள் எழுதுவதைச் செய்துவந்திருக்கிறீர்கள். இதற்கான மனத் தயாரிப்பு என்ன? தேவைப்படும் மனோபலம் என்ன?
அசோகமித்திரன்: இது நம் வாழ்க்கைப் பார்வையைச் சார்ந்தது. நமக்குத் திட்டவட்டமாக பார்வை இருந்து, நம் மனதிற்கிணங்க எழுதினால் அதில் நிச்சயம் ஒரு சீரான தன்மை இருக்கும்.
கேள்வி: நீங்கள் கணையாழி ஆசிரியப் பொறுப்பு வகித்திருக்கிறீர்கள். அப்போது நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்.
அசோகமித்திரன்: இதுவும் நான் நாடிச் சென்றதல்ல. முதல் இதழ் தயாரானபோது அதன் பொறுப்பாளர் ‘சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு டில்லிக்குப் போய்விட்டார். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று அன்று எனக்குத் தெரியாது. அது அச்சான இடத்தில், ஒருவர் எப்படிப் பிழை திருத்துவது என்று ஓரிரண்டு குறிப்புகள் தந்தார். அப்புறம் பக்கம் அமைப்பது, படங்கள் எந்த இடத்தில் போடுவது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மிகவும் கடினமான பொறுப்பு பிரதிகளைக் கட்டு கட்டி இரயில்வே பார்சல் செய்வது, தபால் அலுவலகத்தில் சேர்ப்பது. ஏன் இதெல்லாம் செய்தேன், இதற்கு என்ன பிரதிபலன் என்றெல்லாம் யோசிக்கவில்லை.
கையெழுத்துப் பிரதி அந்த எழுத்தாளனைப் பற்றி ஒரு தோற்றம் தரும். அவனுடைய கதையிலிருந்து அவனுடைய சூழ்நிலை முதலியன ஊகிக்கலாம். எனக்கு ஒவ்வொரு கையெழுத்துப் பிரதியும் ஒரு சவாலாக இருக்கும். கதை நன்றாக இருந்தால் பிரதியைத் திருத்தித் திருப்பி எழுதிவிடுவேன். சில எழுத்தாளர்களின் கையெழுத்துப் பிரதிகளை அச்சுக் கோப்பவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சுஜாதா, இந்திராபார்த்தசாரதி, தி. ஜானகிராமன் போன்றோர் கையெழுத்தைப் புரிந்துகொள்வது கடினம்.
கேள்வி: ஒரு கதையை, நாவலை எத்தனை முறை திருத்திச் செம்மைப்படுத்துவீர்கள்? செம்மைப்படுத்தும்போது, என்னென்ன விஷயங்களை மனத்தில் கொண்டு திருத்துவீர்கள்?
அசோகமித்திரன்: செம்மைப்படுத்துவேன். கையெழுத்து சட்டென்று புரியாது என்றால் அந்தப் பக்கத்தை இரண்டாம் முறை எழுதிவிடுவேன். எனக்கு அச்சுக் கோப்பவர்களை சிரமப்படுத்துவது சிறிதும் பிடிக்காது. அந்த நாளில் ஈய அச்சுக்களை நால் முழுக்க நின்றுகொண்டே அச்சுக் கோப்பார்கள். பலர் மிகவும் ஏழ்மையான பெண்கள்.
எந்த எழுத்தாளனும் எழுதியதை மறுமுறை படிப்பதுதான் முறை என்று நான் நினைக்கிறேன். சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் படிக்கும்போதுதான் செய்யவேண்டும்; செய்ய முடியும்.
கேள்வி: நீங்கள் செய்நேர்த்தியில் (craftmanship) சிறப்பானவர். உங்கள் கதைகள், கச்சிதமானவை. வடிவம் செம்மையானவை. இதற்கான பயிற்சி என்ன? எப்படி இதை நீங்கள் அடைந்தீர்கள்?
அசோகமித்திரன்: அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள். உண்மையில் சிலர் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என்றுகூடக் கூறுவேன். எனக்கு ராஜவேல் என்பவரின் கணிப்பு மீது மிகுந்த மதிப்பு உண்டு. அவர் சொல்லி ‘விழா’ என்ற குறுநாவலில் பாரா பாராவாக வெட்டியிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்று அறிய மிகவும் வருத்தமாக இருந்தது. அதே போல சாமி என்ற அச்சுக் கோப்பவர். அவர் நாடகங்களிலும் நடிப்பார். என்னுடைய ‘காத்திருத்தல்’ சிறுகதை நாடகமாக்கப்பட்டபோது அவர்தான் அரசியல் தொண்டன் வேடம் தரித்தார். நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அதைத் தயாரித்த டாக்டர் ருத்ரன் ஒரு முறைக்கு மேல் அதை மேடையேற்றவில்லை.
கேள்வி: நீங்கள் ஒரே மூச்சில் சிறுகதை எழுதுவீர்களா? இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா? நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்டமிடுவீர்கள்? அத்தியாயங்களையும் சம்பவங்களையும் முன்னரே யோசித்துவைத்திருப்பீர்களா?
அசோகமித்திரன்: விட்டுவிட்டுத்தான் எழுதுவேன். எழுதுவதும் ஒரு கட்டத்தில் களைப்பு, சோர்வு உண்டு செய்யும். இரவில் படுக்கும்போது ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அடுத்த நாள் சுமார் ஒரு மணி நேரம் எழுதுவேன். சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாமே இப்படித்தான் எழுதப்பட்டன.
கேள்வி: உங்கள் கதைகளில் கொண்டாட்டமான மனோபாவம் கொண்ட மனிதர்கள் வருவது கிடையாது. என்ன காரணம்?
அசோகமித்திரன்: அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல கதைகளில் கதையைக் கூறுபவன் அப்படித்தான், அதாவது சட்டென்று சிரிப்பவனாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
கேள்வி: புலிக்கலைஞன் கதை நாயகன் கற்பனையா அல்லது நீங்கள் நேரில் பார்த்த ஒரு கதாபாத்திரமா?
அசோகமித்திரன்: நான் ஒரு புலிவேடக்காரர் ஒரு சினிமா வாய்ப்புக்காக வந்தபோது அவரைப் பார்த்தேன். அவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிஜமாகவே அந்த மனிதனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. உண்மையில் சினிமாவில் கதாநாயகனே புலிவேடம் தரிப்பதுதான் பார்வையாளருக்கு மகிழ்ச்சி தரும். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். என் ‘புலிக்கலைஞன்’ நிஜ வாழ்க்கையில்தான் பரிமளிக்க முடியும். சினிமா சரியான களமல்ல.
கேள்வி: உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?
அசோகமித்திரன்: புத்தகங்கள் என்று கூற வேண்டுமானால் என் பாட புத்தகங்கள், ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் தனித்தனிக் கதைகள், கட்டுரைகள்தான் எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தின. அதில் புதுமைப்பித்தன் எழுதிய ‘சித்தி’ என்ற சிறுகதை. நான் எழுதிய ‘இன்னும் சில நாட்கள்’ அவருக்கு என் அஞ்சலியாக நினைத்து எழுதினேன்.
கேள்வி: பாண்டி விளையாட்டு சிறுகதைபோல இளம் பிராயத்து நினைவுகள் உங்களை அலைக்கழிக்குமா? அதுபோல நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பர் யாராவது உண்டா?
அசோகமித்திரன்: எனக்கு சகோதரிகள் இருந்தார்கள். எங்களுக்குள் நாங்கள் பாண்டி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம்.
அந்தக் காலத்து நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்பிருக்கும் என்று தோன்றவில்லை. நான் ஊர்விட்டு ஊர் வந்தவன்.
கேள்வி: ஒப்பீட்டளவில் நான் ஃபிக்ஷன் எழுத்துக்கு இன்று வரவேற்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அசோகமித்திரன்: இல்லை. கட்டுரைகளுக்குத்தான் இன்றைய பத்திரிகைகளில் அதிக வரவேற்பு இருக்கிறது. கட்டுரைகள்தான் விவாதங்களைத் துவக்குகின்றன. ஒரு சிறுகதை அப்படி செய்ய வாய்ப்பில்லை.
கேள்வி: சிறுபத்திரிகைகள் மட்டும்தான் சிறுகதைகளை ஊக்குவிக்கின்றன. வெகுஜன இதழ்கள் ஸ்டாம்ப் அளவுக்குக் கதைகளைச் சுருக்கிவிட்டன. நல்ல கதைகளை அதிகம் காணமுடிவதில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: இக் கேள்வியே முந்தைய கேள்வியின் என்னுடைய பதிலை உறுதிப்படுத்துகிறது. காலத்தின் தேவை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பூர்த்தி செய்யப்படுகிறது.
கேள்வி: மொழிபெயர்ப்புகள் தற்போது அதிகமான அளவுக்கு தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்காகவே தனி இதழ் ஒன்றுகூட வெளிவருகிறது. இந்தச் சூழலில் அவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: ஒட்டு மொத்தமாகக் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. முன்பு பல வங்காள நாவல்கள் தமிழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்று அந்த நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது நம் மொழிபெயர்ப்பு குறையுடையது என்று தெரிகிறது. மொழிபெயர்ப்பும் காலம் காலத்திற்கு மாறுபடும்.
கேள்வி: சினிமாவின் பார்வையாளராக இருந்திருக்கிறீர்கள். சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும் பணியாற்றி இருக்கிறீர்கள். ஆனால், நேரடியாக சினிமாவில் ஈடுபட உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லையா?
அசோகமித்திரன்: இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டும் என்று நான் கூற மாட்டேன். என்னால் திரப்படங்களை ஓரளவு செம்மைப்படுத்த முடியும். ஆனால் நிறைய சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சக்தி இல்லை.
கேள்வி: சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா?
அசோகமித்திரன்: முன்பும் எழுத்தாளர் யாரோ ஒருவர்தான் ஒரு படத்துக்குக் காரணமாக இருந்தார். மனதளவிலாவது ஒரு திட்டம் இல்லாமல் எந்தத் திரைப்படமும் தயாரிக்கப்படுவதில்லை. எழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திரைப்படம் முழுத் திருப்தி தர முடியாது. மீண்டும் சமரசம்தான். இது ஆரோக்கியமானது, அல்ல என்பதெல்லாம் அபிப்ராயங்கள்.
கேள்வி: சமகால தமிழ்சினிமா பற்றி உங்கள் கருத்து? பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா?
அசோகமித்திரன்: திரைப்படக் கொட்டகையில் பார்த்ததில்லை. இந்தப் படங்களிலும் வன்முறைப் போக்கு, பெண்களைக் கன்னத்தில் அறைவது போன்றவை உள்ளன. நிஜ வாழ்க்கையில் இதைவிட மோசமான அனுபவங்கள் இருக்கலாம். திரைப்படத்தில் காண்பிப்பது எனக்குச் சம்மதமல்ல. பெரும் தீமை, கயமை கூட நாம் கோடிட்டுக் காட்டலாம். அவ்வளவுதான்.
கேள்வி: பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. எழுத்தாளர்கள் வளமாக இருக்கிறார்களா? உங்கள் அனுபவம்?
அசோகமித்திரன்: சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத்தால் வரும் ஊதியத்தை மட்டும் நம்பியில்லை. மீண்டும் இதெல்லாம் பொதுப்படையான கேள்விகள். உலகம் கெட்டுவிட்டதே என்று சொல்வது போல.
கேள்வி: புகழ், புத்தகங்களின் அதிக விற்பனை, ராயல்டி இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட்டதுண்டா?
அசோகமித்திரன்: நாம் கவலைப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தாலும் புத்தகம் விற்றால் பணம் தானாகவே வரும். பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் நூல்களை வெளியிடுகின்றன. பல சமரசங்கள் செய்து கொண்டுதான் நூலக உத்தரவு பெறுகின்றன. இதையெல்லாம் எழுத்தாளன் கணகில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்றும்கூட அசாத்தியமானதாகவே உள்ளது. ஏன்?
அசோகமித்திரன்: எப்படியோ காலம் தள்ளிவிட்டேன். ஆனால் இன்னொரு முறை முடியாது. நான் சிறிது ஆங்கிலத்திலும் எழுதியதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய பல ஆங்கிலக் கதைகள், கட்டுரைகள் மிகவும் பாராட்டப்பட்டன. சன்மானமும் கிடைத்தது. தமிழில் பல படைப்புகள் இனாம்தான். ஒரு முழு நூல் என் முன்னுரைகள் கொண்டது. முன்னுரைக்கு எப்படி, எவ்வளவு சன்மானம் தருவது? இந்த முன்னுரை எழுதுவதே இழிவுபடுத்தும் அனுபவம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: சமகால எழுத்தை, எழுத்தாளர்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? இலக்கியச் சண்டைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
அசோகமித்திரன்: அபிப்ராயங்கள், சண்டை எதில் இல்லை? ஒரு குடும்பத்திலேயே சண்டை இல்லையா?
கேள்வி: இண்டர்நெட் பற்றி உங்கள் கருத்து? இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப் படித்திருக்கிறீர்களா? இணையம் வழியாக இன்று யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற நிலை வந்திருப்பது குறித்து?
அசோகமித்திரன்: எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கண் வலிக்கிறது. அதனாலேயே அதிகம் கணினி முன் உட்காருவதில்லை.
கேள்வி: முக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன? உங்கள் எழுத்துக்கு அதுபோலொரு நிலை வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
அசோகமித்திரன்: இறந்து, எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பில் இல்லை என்றால் நாட்டுடைமை ஏற்றுக்கொள்ளக் கூடியது. வாரிசுகளுக்குப் பணம் தரவேண்டும். சகட்டு மேனிக்கு நாட்டுடைமை அறிவிப்பது சரியல்ல.
கேள்வி: தமிழக அரசு கோட்டூபுரத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றைக் கட்டி வருகிறது. அதற்கு நீங்கள் தரும் ஆலோசனை, வேண்டுகோள்கள் என்ன?
அசோகமித்திரன்: அந்தத் துறைக்கென நிபுணர்கள் இருக்கிறார்கள். நூலகத் துறை மிகப் பெரிய துறை. அதில் எழுத்தாளன் ஓர் அங்கம். அவ்வளவே.
கேள்வி: புத்தகக் கண்காட்சிக்கு சென்றீர்களா? புத்தகக் கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: திட்டமிட்டுப் போனால் கண்காட்சி பயனுள்ளது. ஆனால் பத்து சதவீதச் சலுகை என்பது போக வரச் செலவு, அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் போய்விடுகிறது.
கேள்வி: விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படக்கூடாது என்கிற அரசின் உத்தரவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வரவேற்கிறீர்களா?
அசோகமித்திரன்: புத்தகங்கள் வெளியிடப்பட்டால் அவற்றை என்ன செய்வது? முந்தைய நூற்றாண்டுகளில் கூட நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல நூல்கள் மீண்டு வந்துவிடுகின்றன.
கேள்வி: நோபல் பரிசு பெறும் அளவுக்குத் தகுதியுள்ள எழுத்து என்று உங்களைப் புகழாதவர்கள் இல்லை. உங்கள் நாவல்கள் ஏதாவது மொழிபெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதா?
அசோகமித்திரன்: நாம் சொல்லிவிடலாம். தேசிய அளவிலேயே கடினம். உண்மையில் நம் தமிழ் நாட்டிலேயே நிறுவன அங்கீகாரம் கிடையாது. ஆதலால், நான் இந்த மாதிரி விருது, பரிசு பற்றி மனதைச் செயல்படவிடுவதில்லை.
கேள்வி: நீங்கள் இப்போது படித்து வரும் புத்தகம் எது?
அசோகமித்திரன்: பாரதி மணி என்பவர் எழுதிய, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்.’ நல்ல, சுவாரசியமான நூல். உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டது.
கேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது?
அசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்.
கேள்வி: எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கதைகள் யாவை? என்ன காரணங்களால் அவை எழுதப்படாமல் இருக்கின்றன?
அசோகமித்திரன்: இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பல ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது. மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை மீறித்தான் அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009-ம் ஆண்டில் அதை முடித்துவிட வேண்டும். ஆனால் என் வயது இப்போது 77. ஓராண்டு என்பதுகூட யதார்த்தமான ஆசை இல்லை.
நேர்காணல்: பாலு சத்யா
(அம்ருதா ஜூன் 2009 இதழில் வெளியான நேர்காணல்)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, பாலு சத்யா.
பகிர்விற்கு மிக்க நன்றி பாலு சத்யா!
அன்புக்குரிய நண்பருக்கு
வணக்கம்.
உங்களுடைய மின்னஞ்சல் முகவரி அனுப்பித் தருகிறீர்களா..? திரைப்பட/டெலிஃபிலிமின் சுருக்கம் எழுதியிருக்கிறேன். அது குறித்த உங்கள் மேலான கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பிகிறேன்.
நன்றி
அன்புடன்
மகாதேவன்.
திரு. மகாதேவன்.
என் மெயில் ஐ.டி. balusathyak@gmail.com
Post a Comment